ஓடிடி திரை அலசல் | Saudi Vellaka - இரக்கத்தின் மீது நம்பிக்கை ஏற்படுத்தும் அரசமைப்புச் சட்டத்தின் கதை!

By குமார் துரைக்கண்ணு

‘ஆப்ரேஷன் ஜாவா’ திரைப்படம் மூலம் மலையாளத்தில் அறிமுகமான இயக்குநர் தருண் மூர்த்தியின் இரண்டாவது திரைப்படம் ‘சவுதி வெள்ளக்கா’ (Saudi Vellaka). யதார்த்தமான கதைக்களமும், உண்மைக்கு நெருக்கமான கோர்ட் ரூம் டிராமாவாகவும் இத்திரைப்படத்தை தருண் இயக்கியிருக்கிறார். படத்தின் மிக நுட்பமான நகைச்சுவைக் காட்சிகள் சிரிக்க வைத்து, சிந்திக்கவும் வைக்கும் சமநிலை படம் முழுக்க நீடித்திருக்கிறது. மனிதநேயம் மற்றும் இரக்கத்தின் மீதான நம்பிக்கையை ஏற்படுத்தும் இறுதிக்காட்சி படத்தில் காணப்படும் சின்ன சின்ன குறைபாடுகளை எல்லாம் ஈடு செய்துவிடுகிறது.

‘சவுதி வெள்ளக்கா’ திரைப்படம், 53-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் இந்தியன் பனோரமா பிரிவில் திரையிடப்பட்டது. அதேபோல் 21-வது டாக்கா சர்வதேச திரைப்பட விழாவிலும் இத்திரைப்படம் திரையிடப்பட்டது. மேலும், 2022 டிசம்பரில் சென்னையில் நடந்த 20-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவிலும் இந்தியன் பனோரமா பிரிவில் திரையிடப்பட்டது.

கொச்சினின் நெருக்கடியான குடியிருப்புப் பகுதி சவுதி காலனி. நெருக்கடியான குடியிருப்புகள் என்றாலே பக்கத்து வீட்டுடன் அவ்வப்போது வார்த்தைப்போர் நடப்பது இயல்புதானே. இந்த வார்த்தைப்போர் அணையாத தீயைப் போல புகைந்துக்கொண்டே இருப்பவை. மூதாட்டி ஆயிஷா ராவுத்தர் (தேவி வர்மா) வீட்டிற்கும் அருகில் வசிக்கும் அந்த பணக்கார வீட்டிற்கும் இடையே குட்டி குட்டி சண்டைகள் நடந்து வருகிறது.

அந்த வீட்டின் உரிமையாளர் மகளிடம் குழந்தைகள் பலர் டியூஷன் படித்து வருகின்றனர். டியூஷன் தொடங்குவதற்குமுன் சிறுவர்கள் அந்த வீட்டின் மொட்டை மாடியில் விளையாடுவது வழக்கம். இப்படி ஒருநாள் கல்லி கிரிக்கெட் ஆடும்போது சிறுவன் அபிலாஷ் (லுக்மன் லூக்) அடித்த ஷாட்டில், காயம்படுகிறார் ஆயிஷா ராவுத்தர். இதனால் கோபமடைந்த அவர், சிறுவன் அபிலாஷை அடித்து விடுகிறார். இதில் நீண்ட நாட்களாக ஆடிக் கொண்டிருந்த அபிலாஷின் பல் ஒன்று உடைந்துப் போகிறது. அபிலாஷின் பெற்றோர் ஆயிஷா ராவுத்தர் மீது வழக்கு தொடுக்கின்றனர். அதன்பிறகு என்ன நடக்கிறது என்பதே திரைப்படத்தின் திரைக்கதை.

புதிதாக ட்ரான்ஸ்பராகி வரும் போலீஸ்காரர் ஒருவர் சவுதி காலனியில் உள்ள அபிலாஷ் வீட்டிற்கு நீண்டநாள் நிலுவையில் இருந்துவரும் வழக்கிற்கான வாரண்ட்டைக் கொடுப்பதற்காக செல்லும் காட்சிதான் படத்தின் தொடக்கக் காட்சி. இதை பார்க்கும்போது ஏதோ க்ரைம் த்ரில்லர் படம் போலத்தான் எண்ணத் தோன்றும். காரணம் அபிலாஷின் குடும்பத்தினர் கதாப்பாத்திரங்கள் தேர்வு மற்றும் கவலைகள், பதற்றங்கள் அத்தனை கச்சிதமாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் விதம் ரசிக்கும்படியாக இருக்கும்.

இந்தத் திரைப்படத்தின் முக்கிய காதாபாத்திரம் மூதாட்டி ஆயிஷா ராவுத்தராக வரும் தேவி வர்மா. கோபம், கவலை, குற்ற உணர்ச்சியை வெளிப்படுத்தும் தருணங்களில் அவரது இயல்பான நடிப்பு படத்திற்கு வலு சேர்த்திருக்கிறது. அதேபோல் அபிலாஷாக வரும் லூக்மன் லூக்கின் நடிப்பும் பார்வையாளர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது. அபிலாஷின் குடும்பத்தார், ஆயிஷா ராவுத்தரின் மகன் மற்றும் மருமகள், பிரிட்டோ கதாப்பாத்திரம், வழக்கறிஞர் கதாப்பாத்திரம், ஊர்க்காரர்கள், சாட்சிகள் என பலரும் தங்களது பங்களிப்பைச் செய்துள்ளனர்.

இந்திய நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கும் வழக்குகள்தான் இப்படத்தின் கருபொருள். சிறுவனாக இருந்தபோது தொடரப்பட்ட வழக்கு, வாதி மற்றும் பிரதிவாதிகளின் வாழ்வியல் சூழல்களில் ஏற்படுத்தும் மாற்றங்களை மிக நுட்பமாக பேசியிருக்கிறது இத்திரைப்படம். வாய்தா, நீதிமன்ற விடுமுறைகள், நீதிபதிகள் மாற்றம் என ஒவ்வொரு வழக்கிற்குப் பின்னால் இருக்கும் குடும்பங்களின் வலி நிறைந்த உண்மைகளைப் பதிவு செய்திருக்கும் விதத்தில் இயக்குநர் தருண் மூர்த்தி அனைவரது பாராட்டையும் பெறுகிறார்.

ஒளிப்பதிவாளர் ஷரத் வேலாயுதனின் கேமரா கொச்சின் மற்றும் அதன் அருகில் இருக்கும் இடங்களை காட்சிப்படுத்தியிருக்கும் விதம் சிறப்பு. இசையமைப்பாளர் பால் பிரான்சிஸின் பின்னணி இசையும், அந்த 'Pakalo Kaanaathe' பாடலும் பால்வையாளர்களை படத்தில் ஒன்றச் செய்கிறது. கோர்ட் டிராமாவுடன் கூடிய குடும்பக்கதை என்பதால் பார்வையாளர்களுக்கு மெதுவாக நகரும் திரைப்படம் என்ற உணர்வை பார்வையாளர்களுக்கு தந்துவிடக்கூடாது என்பதில் ஒட்டுமொத்த படக்குழுவும் சிரத்தையுடன் பணியாற்றி இருக்கிறது.

ஒரு பெரிய தயாரிப்பு நிறுவனமோ, ஸ்டார் அந்தஸ்து பெற்ற நடிகர்கள் இல்லாமல்கூட, சமூகத்தில் சர்வ சாதாரணமாக காணப்படும் உண்மையான வாழ்வியல் பிரச்சினைகளையும் யதார்த்தங்களையும் பேசும் சிறந்த திரைப்படங்களை உருவாக்க முடியும் என்பதற்கான உதாரணம் ‘சவுதி வெள்ளக்கா’ திரைப்படம். கடந்த டிசம்பர் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இத்திரைப்படம் தற்போது சோனி லிவ் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE