'ஸ்டோரி ஆஃப் திங்ஸ்' Review: பொருட்களின் வழியே மனித உணர்வுகளைப் பேசும் கதைகள்

By கலிலுல்லா

சோனி லிவ் ஓடிடி தளத்தில் ‘ஸ்டோரி ஆஃப் திங்க்ஸ்’ ஆந்தாலஜி சீரிஸ் வெளியாகியுள்ளது. அமானுஷ்யமான பொருட்களின் வழியே மனித உணர்வுகளை பேசும் இந்த ஆந்தாலஜி சீரிஸ் 5 எபிசோடுகளை உள்ளடக்கியது. ஒவ்வொரு எபிசோடும் கிட்டத்தட்ட 40 நிமிடங்கள் ஓடக்கூடியவை. ஜார்ஜ் கே ஆண்டனி இயக்கியுள்ள இந்த 5 படங்கள் குறித்தும் விரிவாக பார்ப்போம்.

வெயிங் ஸ்கேல்: (Weighing Scale) - ராம் (பரத்), டைடன் (லிங்கா) இருவரும் சினிமாவில் நடிகர்களாகி சாதிக்க வேண்டும் என்ற வெறியுடன் இருப்பவர்கள். அவர்களின் கவனக்குறைவு ஒருத்தரின் உயிருக்கே ஆபத்தை விளைவித்துவிடுகிறது. இதில் டைடன் குற்றவுணர்ச்சியுடன் இருக்க ராம் அதனை பொருட்படுத்துவதில்லை. இறுதியில் ராம் தான் செய்த தவறை உணர்ந்தாரா? இல்லையா? என்பதை வெயிட் மிஷின் மூலமாக சொல்லியிருக்கும் படம் தான் ‘வெயிங் ஸ்கேல்’. இதில் பரத் மற்றும் லிங்கா இருவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். மெதுவாக நகரும் இந்தப் படம் நமது பொறுமையை சோதித்து அடுத்தடுத்து வரும் கதைகளுக்கு நம்மை தயார்படுத்துகிறது.

தொடக்கத்தில் பெரிய அளவில் சுவாரஸ்யமில்லாமல் நகரும் படம், சில இடங்களில் அயற்சியைக் கொடுத்தாலும் அதன் இறுதிப்பகுதி அழுத்ததுடன் ரசிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. குற்றவுணர்ச்சிக்குள்ளாகும் பரத் அதனை சம்பந்தபட்டவர்களிடம் சொல்லும் காட்சியும், பாவமும் ஒரு வகையான பாரம் தான் என்பதை அந்த மிஷின் மூலமாக வெளிப்படுத்திய காட்சியும் மொத்த படத்தையும் தூக்கி நிறுத்துகிறது. கிட்டத்தட்ட ‘வானம்’ படத்தில் ‘தெய்வம் வாழ்வது எங்கே’ என்ற பாடலுக்கு முன்பான சிம்புவின் மனநிலையை ஒட்டிய உணர்வை படம் தருகிறது.

செல்லுலார்: (Cellular) - கட்டுப்பாடுகளுடன் மகளை வளர்க்கும் தாய் கௌதமி. அவரது மகள் வண்ணமயில் (அதிதி பாலன்) ஒருநாள் அந்த கட்டுப்பாட்டிலிருந்து வெளியேறி தனக்கு விருப்பமானதை செய்ய அதன் ஏற்படும் பாதிப்பு ஒன்று வண்ணமயிலை குற்ற உணர்ச்சிக்குள்ளாக்கிறது. இந்த குற்ற உணர்ச்சியின் நீட்சி என்னவாகிறது என்பது தான் கதை. நீண்ட நாட்களுக்குப் பிறகு கௌதமி. அம்மா கதாபாத்திரத்தில் சீனியர் நடிகையின் முதிர்ச்சியை நடிப்பில் வெளிப்படுத்துகிறார். அதிதி பாலன் வழக்கமான தனது நடிப்பை பதிவு செய்து, இறுதியில் ஸ்கோர் செய்கிறார்.

நோக்கியா செல்போனை கேரக்டராக்கியது, தேர்வு செய்த வீடு, பொறியில் எலி சிக்கும் காட்சி, கிணற்றில் விழுந்த நாய் கதை என குறியீடாக சில விஷயங்களை காட்சிப்படுத்தியிருந்தது கவனிக்க வைக்கிறது. உண்மையில் உளவியல் ரீதியாக மிக நுணுக்கமாக இந்தக் கதைகள் அணுகப்பட்டுள்ளது ஒவ்வொரு படத்தின் பலம். அந்த வகையில் ‘செல்லுலார்’ எதிர்பாராத சம்பவங்களின் வழியே நிகழும் குற்றவுணர்ச்சியால் ஏற்படும் உளவியல் சிக்கலை பதிய வைக்கிறது. இருப்பினும் படம் முடியும்போது முழுமையற்ற ஓர் உணர்வு மேலெழுவதை தவிர்க்க முடியவில்லை.

கம்ப்ரெஸ்ஸர்: (Compressor) - ரகு (ரோஜூ) ஷ்ருதி (ரித்திகா சிங்) இருவரும் லிவ்விங் ரிலேஷனில் வாழ்ந்து வருகிறார்கள். ரகுவுக்கு பணம் கிடைக்க அந்த பணத்தை வைத்து பழையை ஏசி ஒன்றை வாங்குகிறார். அந்த ஏசியால் ரகுவுக்கு நேரும் பாதிப்பு குறித்து படம் பேசுகிறது. ஒருவகையில் இந்த ஆந்தாலஜியிலேயே பலவீனமாக கதையாக ‘கம்ப்ரெஸ்ஸர்’ விரிகிறது. ஆரம்பத்தில் எதிர்பார்ப்பை கொடுக்கும் திரைக்கதை முன்னேறும்போது ஏமாற்றங்களை கூட்டுகிறது.

ஏசி-யின் அமானுஷ்ய செயல்பாடுகளுக்கான காரணங்களும், அதனுடன் குடும்பத்திலிருப்பவர்களுக்கு எழும் சிக்கலும் தெளிவாகவும், விரிவாகவும் அலசப்படவில்லை. ரகு தான் திருடிய பணத்தால் ஏசியை வாங்கியதால் நிகழ்ந்ததாக எடுத்துக்கொண்டாலும் அது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. மேற்கண்ட 3 கதைகளும் மனிதர்களுக்குள்ளான குற்ற உணர்ச்சியை வெவ்வேறு கதைகளின் வழி விவரிக்கிறது.

கார்: (car) - மலையாள நடிகர் சித்திக், சாந்தனு பாக்யராஜ் நடித்துள்ள இந்த கதை, அப்பா - மகன் இடையிலான மோசமான உறவை கார் ஒன்றின் வழியே பதிவு செய்கிறது. சித்திக் ஒருபுறம் நடிப்பில் யதார்த்தம் கூட்ட, பயத்தையும், பதட்டத்தையும் காருக்குள்ளிருந்து கடத்தும் சாந்தனு அப்ளாஸ் அள்ளுகிறார். மோசமான தந்தையால் மகனுக்கு ஏற்படும் பாதிப்பு, குழந்தை வளர்ப்பின் அவசியம் குறித்து பேசும் படம், சாந்தனு கதாபாத்திரத்தின் பார்வையிலிருந்து விரிகிறது. ஆரம்பத்தில் எதிர்பார்ப்பை தூண்டும் படம் இறுதியில் அதன் முடிவை அழுத்தமாக பதியாமல் நகர்ந்திருப்பது ஏமாற்றம். இன்னும் சுவாரஸ்யம் கூட்டியிருந்தால் கார் வேகமெடுத்திருக்கும்.

மிரர்: (mirror) - இந்த ஆந்தாலஜியை காப்பாற்றி ரசிக்க வைக்கிறது ‘மிரர்’. காதலால் மனம் உடைந்த கல்லூரி மாணவனுக்கு ஒரு சிறுமி எப்படி தோழியாகிறாள் என்பதை அழகாக சொல்லும் கதை மொத்த ஆந்தாலஜிக்கும் சுவாரஸ்யம் கூட்டுகிறது. வினோத் கிஷன் மற்றும் நஜியா கதாபாத்திரத்தில் நடித்த சிறுமியின் நடிப்பு பெரும் பலம். கண்ணாடியை மையப்படுத்தி இரண்டு பேரின் நட்பை பேசும் திரைக்கதை சின்ன சின்ன விஷயங்களால் ரசிக்க வைக்கிறது. குறிப்பாக சிறுமிக்கும் - வினோத் கிஷனுக்கும் இடையிலான உரையாடல்கள் சுவாரஸ்யம். திரைக்கதையின் நடுநடுவே சில எமோஷனல் கனெக்ஷன்ஸ் தொடர்ந்து புத்துணர்வை ஊட்டும் பாடல், இறுதியில் ஒரு திருப்பமான க்ளைமாக்ஸ் என ‘மிரர்’ அதன் ஆக்கத்தில் நேர்த்தியை கூட்டியுள்ளது.

ஜார்ஜ் கே ஆண்டனி இயக்கி அவரே படத்தொகுப்பும் செய்திருக்கிறார். இரண்டு முக்கியமான கதாபாத்திரங்களை வைத்து கையாளப்பட்டிருக்கும் கதை சொல்லும் யுக்தி ஈர்ப்பு. பெரும்பாலும் வீட்டை களமாக கொண்டு கதையை நகர்த்தியிருக்கிறார். ஒளிப்பதிவு, இறுதி எபிசோட்டின் பின்னணி இசை என தொழில்நுட்பத்தில் குறைவைக்கவில்லை. கூடவே கலை ஆக்கமும் கவனிக்கவைக்கிறது.

மொத்தத்தில் இன்ட்ரஸ்டிங் ஐடியாக்களை உளவியல் ரீதியாக அணுகிய விதம் அதற்கான கரு ஈர்க்கிறது. இந்த கதைகள் உளவியல் ரீதியாக சம்பந்தபட்ட கதாபாத்திரத்தை பொறுமையுடன் அணுகச்சொல்கிறது. ஒவ்வொரு எபிசோடிலும் கதையும், ஐடியாவும் ஒருபாதிக்கு ஓகே என்றாலும் மீதி பாதியில் சுவாரஸ்யமின்மை மிஞ்சுவதை உணர முடிகிறது.

ட்ரெய்லர் வீடியோ:

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE