தென்கொரியாவின் அழகிய பூசன் நகரின் மலையிலிருந்து விழுந்து இறந்த வயதான ஒருவரின் வழக்கை விசாரிக்கிறார் கொரியாவின் பிரபல துப்பறியும் அதிகாரியான ஜே - ஜுன். இறந்த நபர் மலையேற்றத்தின்போது தவறுதலாக விழுந்தாரா? தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? - இப்படி விசாரணை தொடங்குகிறது.
இவ்வழக்கின் முக்கிய சந்தேக நபராக இறந்தவரின் மனைவி சியோ-ரே சேர்க்கப்படுகிறார். சியோ ரே சீனாவிலிருந்து கொரியாவுக்கு புலம்பெயர்ந்தவர். தனக்கு தெரிந்த அரைகுறை கொரிய மொழியில் ஜே - ஜுன் நடத்தும் விசாரணைக்கு ஒத்துழைத்து வருகிறார்.
விசாரணையில் தன்னுடைய பதிலை முழுமையாக கொரிய மொழியில் கூற முடியாமல் போகும்போதெல்லாம் அவரிடம் எழும் சிரிப்பு ஜே - ஜுன்னின் உதவியாளர்களை கோபமடையச் செய்கிறது. அவர்களின் கோபத்திற்கு நியாயம் சேர்ப்பது போல சியோ ரே கணவனை இழந்த சோகம் சிறிது இல்லாமல் விசாரணையில் அடிக்கடி புன்னகைக்கிறார். இதனையே காரணம் காட்டி இவர்தான் கொலையாளியாக இருக்க வேண்டும் அவரை கைது செய்து சிறைத் தண்டனை பெற்று தர வேண்டும் என்று ஜே ஜூன்னின் உதவியாளர்கள் தீர்க்கமாக இருக்கிறார்கள். ஜே ஜுனையும் விசாரணையை அவ்வாறே பார்க்கும்படியும் வலியுறுத்துகிறார்கள்.
» எங்கள் நாட்டுப் பயணிகளை மட்டும் குறிவைப்பதா? - கரோனா கட்டுப்பாடுகளுக்கு சீனா கொந்தளிப்பு
ஆனால், இவ்வழக்கில் ஜே ஜுன் பார்வை முற்றிலும் வேறுபடுகிறது, சியோ ரே-வை சந்தித்த முதல் சந்திப்பிலே அவர்பால் ஜே ஜுன் ஈர்க்கப்படுகிறார். சியோ ரே ஒரு அப்பாவி பெண், குடும்ப வன்முறைகளை சந்தித்தவர் என்பதை அவருடனான உரையாடலின் மூலம் அறிகிறார். இது நிச்சயம் தற்கொலைதான் என தீர்க்கமான முடிவுக்கு வருகிறார் ஜே ஜுன். மறுபுறம் தங்களுக்கு இடையேயான ஒவ்வொரு சந்திப்பிலும் காலம் எதோ ஒன்றை நகர்த்த இருக்கிறது என்பதை ஜே - ஜுன் - சியோ ரே உணர்கிறார்கள். வழக்கும் தற்கொலை என்று முடித்து வைக்கப்படுகிறது.
அடுத்தடுத்து நிகழும் திருப்பங்களால் ஜே ஜுன் - சியோ ரே பிரிகிறார்கள். இந்தப் பிரிவு ஜே ஜுனை கடுமையான மனப் பதற்றத்துக்கும் தீவிர தூக்கமின்மைக்கும் தள்ளுகிறது. இதனைத் தொடர்ந்து தனது மனைவி பணிபுரியும் லிபோ நகரத்துக்கு செல்கிறார் ஜே ஜுன்.
அங்கும் ஒரு கொலை நடக்கிறது. அந்த வழக்கை விசாரிக்க ஜே ஜுனுக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது. வழக்கின் விசாரணைக்கு கொல்லப்பட்டவரின் மனைவியான சியோ ரே, ஜே ஜுன் முன் வந்து நிற்கிறார். மீண்டும் காலம் அவர்களை ஒன்றாக பயணிக்க வைக்கிறது. இம்முறை இந்தக் கொலையின் குற்றவாளி சியோ ரே - தான் என்று ஜே ஜுன் நம்புகிறார். அவரது உதவியாளர்கள் அவர் ஒரு அப்பாவி பெண் என்று ஜே ஜுன்னுடன் வாதிடுகிறார்கள்.
விசாரணையுடன் கதையும் சில திருப்பங்களுடன் நகர்கிறது. கொலையை செய்ததது யார்..? சியோ ரே நிரபராதியா? லிபோ நகருக்கு சியோ ரே ஏன் வருகிறார்? காலம் ஏன் இருவரையும் ஒன்றாக பயணிக்க வைக்கிறது என்பதற்கான முடிச்சுகள் அடுத்தடுத்து அவிழ்கின்றன. படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியான அந்தக் கடைசி 20 நிமிடங்களில் பரந்து விரிந்த கடலில் சியோ ரேவை தேடும் ஜே ஜுன்னின் இதயத்துடன் ,நமது இதயமும் வலியுடன் ஊசலாட்டத்தை சந்திக்கிறது. மலையில் தொடங்கிய படம் கடலில் முடிகிறது.
'old boy', 'The Handmaiden', 'LADY VENGEANCE' படங்களின் புகழ் பார்க் சான் வூக்-ன், த்ரில்லர் - காதல் படைப்பாக வெளிவந்திருக்கிறது ’Decision to leave’. தனித்துவமான கதை சொல்லும் முறைக்கும், திரைக்கதைக்கும், ஒளிப்பதிவு முறைக்கும் உலகெங்கிலும் ஏராளமான ரசிகர்களை பார்க் சான் வூக் பெற்றிருக்கிறார். அந்த வகையில் அவரது ரசிகர்களின் எதிர்பார்ப்பை ’Decision to leave’ ஏமாற்றவில்லை.
ஜே ஜுன்-னாக பார்க் ஹே இல்லும், சியோ ரேவாக டாங் வெய்வும் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். குறிப்பாக, டான் வெய்யின் அந்த மர்ம புன்னகையும், பிடிவாத காதலை வெளிப்படுத்தும் முகபாவங்களும் அவரது திரைப் பயணத்தில் சிறந்த படைப்பை அளிக்க வைத்திருக்கிறது.
படத்தின் தொடக்க காட்சியில் இறந்தவர் பார்வையிலிருந்து மலையை பார்க்கும் காட்சி, ஜே ஜுன் - சியா ரே விசாரணை காட்சிகளில் கண்ணாடியில் தெரியும் அவர்களின் பிம்பங்களை கையாண்ட விதம், இறுதிக் காட்சியில் அந்தரத்திலிருந்து பார்க்கும்போது தெரியும் கார்களின் நிழல் என படத்தின் ஒவ்வொரு காட்சியும் சினிமாவை கனவாக கொண்ட இளைஞர்களுக்கு பாடமாக எடுக்கப்பட்டிருக்கிறது.
”முதல்முறை புகைப்பிடிக்கும்போதுதான் கஷ்டமாக இருக்கும்... கொலையும் அப்படித்தான்”. ”நீ என்னை காதலிப்பதாக சொன்ன அந்த நொடியில் உன் காதல் முடிந்து விட்டது. உன் காதல் முடிந்த அந்த நொடியிலிருந்து என் காதல் தொடங்குகிறது” போன்ற ஏராளமான வசனங்கள் படம் முழுவதும் வந்து செல்கின்றன. படத்தின் பின்னணி இசை, த்ரில்லர் - காதல் அனுபவத்தை முழுமையாக பார்வையாளர்களுக்கு வழங்கி இருக்கிறது.
படத்தின் குறையாக, படம் சற்று மெதுவாக செல்கிறது, சில காட்சிகளை நாம் முன்கூட்டியே கணிக்க முடிகிறது. இவற்றை தவிர்த்துவிட்டால் பார்க் சான் வூக்கின் கிளாசிக் படங்கள் வரிசையில் ’Decision to leave’-க்கும் நிச்சயம் இடமிருக்கும். Decision to leave - படத்தை அமேசான் ப்ரைம், MUBI ஓடிடி தளத்தில் காணலாம்.
முக்கிய செய்திகள்
ஓடிடி களம்
1 day ago
ஓடிடி களம்
3 days ago
ஓடிடி களம்
3 days ago
ஓடிடி களம்
4 days ago
ஓடிடி களம்
4 days ago
ஓடிடி களம்
6 days ago
ஓடிடி களம்
7 days ago
ஓடிடி களம்
10 days ago
ஓடிடி களம்
10 days ago
ஓடிடி களம்
12 days ago
ஓடிடி களம்
12 days ago
ஓடிடி களம்
17 days ago
ஓடிடி களம்
20 days ago
ஓடிடி களம்
23 days ago
ஓடிடி களம்
24 days ago