ஓடிடி திரை அலசல் | Padavettu - பல நிஜங்களை உடைத்துப் பேசும் ’சுவாரஸ்ய’ அரசியல் சினிமா!

By குமார் துரைக்கண்ணு

இயக்குநர் லிஜு கிருஷ்ணா எழுதி இயக்கியிருக்கும் மலையாள திரைப்படம் 'படவெட்டு' (Padavettu). விபத்தில் பாதிக்கப்பட்டு சோம்பேறித்தனமாக நாட்களைக் கடத்தும் ஒரு இளைஞனின் கதையை அடிப்படையாக வைத்துக் கொண்டு, அரசியல்வாதிகளின் சூழ்ச்சி மிக்க அரசியல் விளையாட்டுகளால் பாழடிக்கப்படும் விவசாயம் மற்றும் விவசாயிகளின் பிரச்சினைகளை கலந்து கதை சொல்லியிருக்கும் விதம் பாராட்டத்தகுந்தது. நிவின் பாலியின் கடந்த கால வாழ்க்கையைப் பதிவு செய்திருக்கும் நீளத்தை சற்று குறைத்திருக்கலாம். இந்தக் குறை தவிர, படம் முழுக்க ஆடியன்ஸை எங்கேஜிங்காக வைத்த விதத்தில் பார்வையாளர்களின் பாராட்டுகளைப் பெறுகிறார் இயக்குநர்.

கேரள மாநிலம் கண்ணூரில் இருக்கும் அழகிய கிராமம் மாலூர். அவ்வூரின் பிரதான தொழிலான விவசாயம் அங்குள்ள மண் முழுவதையும் வளம் கொழிக்கச் செய்கிறது. அங்கு வசிக்கும் ரவி (நிவின் பாலி) ஒரு தடகள வீரர். ஒருநாள் பைக்கில் வேகமாக வரும்போது ஏற்பட்ட விபத்தில், அவரது காலும் மனமும் சோர்ந்து விடுகின்றன. இதனால் வேலைக்கு எதுவும் செல்லாமல் வீட்டில் சோம்பேறித்தனமாக பொழுதைக் கழித்து வருகிறார். தந்தையை இழந்து அத்தையின் தயவில் மழை பெய்தால் ஒழுகும் வீட்டில் மெள்ள நகர்கின்றன ரவியின் வாழ்க்கை.

இந்தச் சூழலில் அவர்களுக்கு ஓர் உதவி கிடைக்கிறது. வன்மத்துடன் செய்யப்பட்ட அந்த உதவி, ரவியின் வாழ்க்கையை அடியோடு புரட்டிப்போடுகிறது. அது என்ன உதவி? அந்த உதவியை செய்தது யார்? இதனால் ரவியின் குடும்பம், அந்த ஊர் சந்தித்த பிரச்சினைகள் என்ன? ஊர் மக்கள் ரவிக்கு துணை நின்றனரா? இந்தப் பிரச்சினைகளை ரவி எப்படி எதிர்கொண்டார்? - இவைதான் படத்தின் திரைக்கதை.

இது பக்காவான அரசியல் படம். ரொம்ப ராவாக எடுத்து, பார்த்தவுடனே புரிந்துகொள்ளும் வகையில் எடுத்து சம்பந்தப்பட்ட அரசியல் கட்சியின் வெறுப்பை பெறாமல் சாமர்த்தியமான காட்சி அமைப்புகள் மூலம் காட்சிப்படுத்தியிருக்கும் விதம் சிறப்பாக உள்ளது. ஆக்சிடென்டில் கால் பாதிப்பட்ட ஒரு இளைஞனின் கதை என்ற ஒன்லைனை வைத்துக் கொண்டு அரசியல், விவசாயிகள் பிரச்சினை, வளங்கள் கொள்ளை, குடும்ப வன்முறை என பல்வேறு நிகழ்வுகளின் நிஜங்களைப் பேசியிருக்கிறது இந்தப் படம். படம் தொடங்கியவுடன் நிவின் பாலி முதல் சிகரெட்டைப் பற்ற வைக்கும் காட்சி தொடங்கி அரசியல்வாதிகளின் அல்லக்கைகளை அடித்து துவம்சம் செய்யும் இறுதிக் காட்சி வரை படம் முழுக்க ஆடியன்ஸ்களை எங்கேஜிங்காக வைத்திருக்கிறார் இயக்குநர்.

எதிர்பாராத நேரத்தில் செய்யப்படும் பல உதவிகள் அரசியல் கலந்தேயிருக்கும். அதுவும் அந்த உதவியை அரசியல்வாதி செய்திருந்தால் உதவி பெற்றவனை மாற்றுத் திறனாளியாக்கி, அடிமையாக்கவே பெரும்பாலான நேரங்களில் முயற்சிக்கிறது. உதவி பெற்றவன் இதை உணர்ந்து அதிலிருந்து விடுபட முயற்சிக்கும் நேரங்களில் உதவி செய்தவனின் அதிகார அத்துமீறல்களை அடக்கி ஒடுக்கும் கதாபாத்திரத்தில் நிவின் பாலி செம்ம கெத்தாக நடித்துள்ளார். நிவின் பாலியின் உடல் பருமன் பேசுபொருளாகி வந்த நிலையில் , அவரது வெயிட்டைப் போலவே அவரது பெர்பாஃமன்சும் பார்வையாளர்களுக்கு நிறைவைத் தருகிறது. அதிதி பாலனுடன் கண்கள் வழியே காதல் பரிமாறிக் கொள்ளும் இடங்களிலும், வாழைத் தோட்டத்தில் காட்டுப்பன்றியை கொல்லும் காட்சியிலும், திருவிழா சண்டைக் காட்சியிலும் கவனம் ஈர்த்திருக்கிறார் நிவின் பாலி.

அதிதி பாலன் கதாபாத்திரத்துக்கு அப்படியொன்றும் சொல்லிக்கொள்ளும் அளவில் படத்தில் ஸ்கோப் இல்லை. இருப்பினும் அந்த மழையில் வரும் பாட்டில் நிவின் பாலியை காந்தக்கண்களில் ஈர்க்கும்போது, அங்கு கூடியிருந்தவர்களோடு சேர்த்து படம் பார்ப்பவர்களுக்கும் வியர்த்துதான் போகிறது. ஷேன் டாம் சாக்கோ, இந்திரன்ஸ் உள்பட பலரும் தங்களது பங்களிப்பை சிறப்பாகவே செய்துள்ளனர்.

குறிப்பாக, அரசியல்வாதியாக வரும் ஷம்மி திலகனின் நடிப்பு படத்திற்கு பக்கபலமாக அமைந்துள்ளது. அலட்டிக் கொள்ளாத அவரது உடல்மொழி ரசிக்கும்படி உள்ளது. தீபக் மேனனின் ஒளிப்பதிவில் மாலூர் கிராமம் அழகாக காட்சியளிக்கிறது. குறிப்பாக இரவு நேரத்தில் வாழைத் தோட்டத்தில் புகுந்த காட்டுப்பன்றியை பழிவாங்கும் காட்சிப்பதிவுகள் சிறப்பு. கோவிந்த் வசந்தாவின் இசை அந்த லவ் சாங் மற்றும் நிவின் பாலி புரட்சிக்கான பாடலும் அருமை. படத்தின் ரீரெக்கார்டிங் நன்றாக வந்திருக்கிறது. அரசியல் காட்சிகள் மற்றும் கூட்டங்களுக்கான இசை சிறப்பாக அமைந்திருக்கின்றன.

கடந்த அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியான இந்தத் திரைப்படம். தற்போது நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE