காவல் நிலையத்திலிருந்து காணாமல் போன கணவனைக் கண்டுபிடிக்கப் போராடும் பழங்குடிப் பெண்ணின் போராட்டமே ‘ஜெய் பீம்’.
இருளர் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர் ராஜாகண்ணு (மணிகண்டன்). செங்கல் சூளையில் வேலை, பாம்பு பிடித்து வனப் பகுதியில் விடுதல் என்று தன் குடும்பத்தை முன்னேற்ற எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுச் செய்கிறார். அவரின் மனைவி செங்கேணி (லிஜோமோல் ஜோஸ்) கணவன் மீது உயிராய் இருக்கிறார். கல் வீடு கட்டித் தருவதே தன் வாழ்நாள் லட்சியம் என்று மனைவியிடம் சொல்கிறார் ராஜாகண்ணு. இந்நிலையில் ஊர்த் தலைவர் வீட்டில் பாம்பு புகுந்துவிட அதைப் பிடித்து வனத்தில் விடுகிறார். கல் வீடு கட்டும் கனவில் ஊர் மக்களுடன் இணைந்து மாவட்டம் தாண்டி செங்கல் சூளையில் வேலை செய்யச் செல்கிறார். பாம்பு பிடித்த இடத்தில் நகைகள் காணாமல் போய்விட, அவர் மீது திருட்டுப் பழி விழுகிறது.
ராஜாகண்ணுவின் நண்பர்கள், மனைவி, சகோதரி என அனைவரும் காவல்துறை அதிகாரிகளின் சித்திரவதைக்கு ஆளாகிறார்கள். ராஜாகண்ணுவும் போலீஸாரின் பயங்கரத் தாக்குதலால் பாதிக்கப்படுகிறார். பிறகு ராஜாகண்ணுவும், அவரது நண்பர்கள் இருட்டப்பன், மொசக்கட்டியும் காவல் நிலையத்திலிருந்து தப்பி விடுகின்றனர். இந்நிலையில் கணவனின் நிலை அறியாது கையறு நிலையில் கர்ப்பிணிப் பெண்ணாகத் தவிக்கிறார் செங்கேணி.
கணவனைக் கண்டுபிடிக்க முடிந்ததா, அவர் தப்பித்தது உண்மையா, நகைகள் திருட்டுக்கு யார் காரணம், உண்மையான குற்றவாளி யார் போன்ற கேள்விகளுக்கு உண்மையும் நேர்மையுமாக பதில் சொல்கிறது திரைக்கதை.
பொய் வழக்குகளில் கைது செய்யப்படும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த அப்பாவி இளைஞர்கள் குறித்து மிக காத்திரமான ஒரு படத்தைக் கொடுத்து, அவர்களின் வலிகளை உணர வைத்துள்ளார் இயக்குநர் த.செ.ஞானவேல். ‘கூட்டத்தில் ஒருத்தன்’படத்தை இயக்கிய அவர், 4 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு இரண்டாவது படமான ஜெய் பீம் மூலம் தடம் பதித்துள்ளார். 4 ஆண்டு உழைப்பு படத்தின் திரைக்கதையில் பளிச்சிடுகிறது.
காடு, மேடுகளில் சுற்றித் திரிந்து, கனவைக் கண்ணுக்குள் சுமந்து, கல்வீடு குறித்து மனைவிக்கு உறுதிமொழி தந்து, கடைசி வரை திருட்டுப் பழியை ஏற்க மறுத்து, காவல்துறையின் அத்துமீறிய வன்முறைகளில் அங்கம் சிதைந்து ராஜாகண்ணுவாக வாழ்ந்துள்ளார் மணிகண்டன். எலியைப் பிடிப்பதில் தொடங்கி பாம்பு பிடிப்பது வரை லாவகமான நடிப்பை வழங்கியுள்ளார். கான்செப்ட் சினிமா, சிறிய பட்ஜெட் படங்கள் என்றால் மணிகண்டனை நம்பி நாயகனாக்கலாம்.
‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு அக்காவாக நடித்த லிஜோமோல் ஜோஸ் இதில் அடையாளம் தெரியாத அளவுக்கு செங்கேணியாகவே பாத்திர வார்ப்புக்குத் தன்னை ஒப்புக்கொடுத்துள்ளார். காவல் நிலையத்தில் தரதரவென இழுத்துச் செல்லப்படும் கணவனைக் கண்டு கதறும்போதும், போலீஸாரின் அடக்குமுறைகளில் பயந்து ஒதுங்கும்போதும், டிஜிபி சமரசம் செய்ய முயலும்போதும் விடாது போராடும் குணத்தை வெளிப்படுத்தும்போதும் தேர்ந்த நடிப்பில் மிளிர்கிறார்.
கமர்ஷியல் சினிமா பக்கமே கவனம் செலுத்திய சூர்யா அப்படியே யூ டர்ன் அடித்து சமூக அக்கறையுள்ள படத்தைத் தயாரித்ததும், சந்துரு என்ற வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்ததும் அவர் வாழ்நாள் முழுக்க மறக்க முடியாத, மறக்கக்கூடாத பெரும்பேறு. நாயகி, டூயட், அடிதடி - சண்டைக்காட்சி என அனைத்தையும் ஒதுக்கித் தள்ளி திரைக்கதைக்குத் தேவையான நியாயங்களுக்குத் துணை நின்றதற்கே சூர்யாவைப் பாராட்டலாம். பரிசோதனை முயற்சிகள் தொடர்பான படங்களுக்கும் சூர்யாவின் பங்கு தொட்டுத் தொடரட்டும்.
பிரகாஷ்ராஜ், ஜெயப்பிரகாஷ் போன்ற சீனியர் நடிகர்களும் பக்குவமான நடிப்பில் பட்டையைக் கிளப்புகிறார்கள். சிரித்து மழுப்பியே கவனம் ஈர்க்கும் குரு சோம சுந்தரமும், சிவாய நமஹ சொல்லியே இருப்பை அர்த்தப்படுத்தும் எம்.எஸ்.பாஸ்கரும், எஸ்.ஐ.யாக எரிச்சல் மிக்க கதாபாத்திரத்தில் ஸ்கோர் செய்யும் தமிழும் படத்தின் பக்க பலங்கள். இருட்டப்பனாக நடித்த சின்ராசுவும், மொசக்குட்டியாக நடித்த ராஜேந்திரனும், அறிவொளித் திட்ட ஆசிரியராக நடித்த ரஜிஷா விஜயனும், சிபிஎம் தோழர்களாக வரும் பவா செல்லத்துரை, காளீஸ்வரன் போன்றோரும், வழக்கறிஞர் பிரகதீஸ்வரன், சூப்பர் குட் சுப்பிரமணியும் அளவெடுத்தது போன்று மிகையில்லாமல் நடித்து மனதில் நிற்கிறார்கள்.
1995 காலகட்டம், குடிசைகள், செங்கல் சூளைகள், காவல் நிலையம், நீதிமன்றம் என அத்தனையிலும் கலை இயக்குநர் கதிரின் உழைப்பு தனித்துத் தெரிகின்றன. எஸ்.ஆர்.கதிரின் ஒளிப்பதிவு காவல் நிலைய வன்முறையை, லாக்கப் கொடூரத்தைப் பதைபதைக்க நம் கண்களுக்குள் கடத்துகிறது. ஷான் ரோல்டன் இசையில் செண்டு மல்லி தவிர அனைத்துப் பாடல்கள் பொருத்தமான இடத்தில் உணர்வுகளுக்கு வலு சேர்க்கின்றன. பிலோமின் ராஜ் செண்டு மல்லி பாடலை மட்டும் இயக்குநர் ஒத்துழைப்புடன் கத்தரித்திருக்கலாம்.
கொஞ்சம் தவறினாலும் பிரச்சார நெடி அடித்துவிடும் சூழலில், ஆவணப் பட சாயலை அப்படியே தவிர்த்து நேர்த்தியான திரைக்கதையால் உணர்வுபூர்வமான படத்தை இயக்கியுள்ளார் த.செ.ஞானவேல். உண்மைச் சம்பவத்தை இவ்வளவு உருக்கமாகவும், நெருக்கமாகவும் எடுக்க முடியுமா என்று ஆச்சரியப்படுத்துகிறார். கூடுதல் திரைக்கதை எழுதிய கிருத்திகாவும் பாராட்டப்பட வேண்டியவர்.
''சட்டம் வலிமையான ஆயுதம், யாரைக் காப்பாத்துறதுக்காக அதைப் பயன்படுத்துறோம்ங்கிறது முக்கியம்'', ''ஒரு ஆள் மேல ஒரு கேஸ் தான் போடணும்னு சட்டம் இருக்கா என்ன? தலைக்கு ரெண்டு கேஸைப் போட்டு விடுங்க'', ''நீங்க பாராட்டும்போதுதான் இந்த கேஸைத் தப்பா ஹேண்டில் பண்ற மாதிரி தோணுது'', ''ஒரு உண்மையை ஒத்துக்கிறாங்கன்னா பல உண்மைகளை மறைக்கிறாங்கன்னு அர்த்தம்'', ''தப்பு பண்றவங்களுக்கு பதவி, பணம், சாதின்னு நிறைய இருக்கு... பாதிக்கப்பட்டவங்களுக்கு நாமதானே இருக்கோம்'', ''ஜனநாயகத்தை நிலைநிறுத்தணும்னா சில நேரங்கள்ல சர்வாதிகாரத்தைக் கையில் எடுத்துதான் ஆகணும்'', ''இருக்கிறதுலயே ரொம்ப மோசமானவன் போலீஸ்தான்னு நினைக்கிற வக்கீலும், ரொம்ப மோசமானவன் வக்கீல்தான்னு நினைக்கிற போலீஸும் சேர்ந்து இந்த கேஸ்ல உண்மையைக் கண்டுபிடிக்கப் போறோம்'' போன்ற அளவான, அழகான வசனங்கள் படத்தைத் தாங்கிப் பிடிக்கின்றன.
அன்பை, ஒளியை, நம்பிக்கையை, இருளிலிருந்து இருளர்கள் வாழ்வுக்கு வெளிச்சம் போடும் பாதையை, இருளர் பாதுகாப்பு சங்கம் தொடங்கிய பின்னணியைப் பெரும் உழைப்புடன் பதிவு செய்த விதம் செம்ம. அந்த வகையில் ‘ஜெய் பீம்’ நாம் பெருமிதம் கொள்ளும் அளவுக்கு சிறந்த சினிமாவாக உயர்ந்து நிற்கிறது.
முக்கிய செய்திகள்
ஓடிடி களம்
1 day ago
ஓடிடி களம்
2 days ago
ஓடிடி களம்
3 days ago
ஓடிடி களம்
5 days ago
ஓடிடி களம்
8 days ago
ஓடிடி களம்
15 days ago
ஓடிடி களம்
16 days ago
ஓடிடி களம்
17 days ago
ஓடிடி களம்
20 days ago
ஓடிடி களம்
21 days ago
ஓடிடி களம்
23 days ago
ஓடிடி களம்
24 days ago
ஓடிடி களம்
24 days ago
ஓடிடி களம்
24 days ago
ஓடிடி களம்
24 days ago