முதல் பார்வை: என்னங்க சார் உங்க சட்டம் 

By கார்த்திக் கிருஷ்ணா சி.எஸ்

ஒரு இயக்குநர், தயாரிப்பாளரிடம் கதை சொல்லும் பாணியில் இந்தப் படம் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஒரே திரைப்படத்தில் இரண்டு வெவ்வேறு கதைகள், இரண்டு கதைகளிலுமே அதே நடிகர்கள் வெவ்வேறு கதாபாத்திரங்களில் தோன்றுகின்றனர். இதில் முதல் பாதிக் கதை, விடலைப் பருவத்தில் பெண்கள் மோகம் கொண்டு அலையும் ஒரு இளைஞனைப் பற்றிய நகைச்சுவை கலந்த கதை. இரண்டாவது பாதி, இட ஒதுக்கீட்டுக்குள் இருக்கும் முரண்களை இயக்குநர் தன் பார்வையில் பேசியிருக்கும் கதை.

முதல் பாதியை விட இரண்டாவது பாதியில் நடிகர்களின் பங்களிப்பு கச்சிதமாக இருக்கிறது. இத்தனைக்கும் நடித்திருப்பவர்கள் அதே நடிகர்கள்தான் என்றாலும் இரண்டாவது பாதியில் அவர்கள் அந்தந்தக் கதாபாத்திரங்களில் சரியாகப் பொருந்திப் போகிறார்கள். இதில் குறிப்பாக ரோகிணி, ஆர்.எஸ்.கார்த்திக், பகவதி பெருமாள், ஜூனியர் பாலையா, நந்தன் என்கிற கதாபாத்திரத்தில் சாய் தினேஷ், நரேன் கதாபாத்திரத்தில் விஜயன் ஆகியோர் கவனிக்க வைக்கின்றனர். முதல் பாதியில் நாயகன் காதலிக்கும் பெண்களாக வருபவர்கள் அனைவரின் நடிப்புமே சுமார்.

அருண் கிருஷ்ணனின் ஒளிப்பதிவு கதைக்குத் தேவையான விதத்தில் அமைந்திருக்கிறது. குணாவின் இசையில் முதல் பாதியில் வரும் ஜீரக பிரியாணி பாட்டு மனதில் ஒட்டிக் கொள்கிறது. துண்டு துண்டாக வரும் சின்ன சின்னப் பாடல்களைத் தவிர்த்திருக்கலாம். பின்னணி இசையிலும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். சில காட்சிகள் நாடகத்தனமாக உள்ளன.

சாதியை ஒழிக்க முடியாது, ஏனென்றால் அது கடவுளோடு கலந்துவிட்டது, நான் கொடுக்கும் தட்சணையை ஏற்கும் கடவுள் என் பூஜையை ஏற்கமாட்டாரா எனப் படத்தின் பல வசனங்கள் கைதட்ட வைக்கின்றன. சர்ச்சைக்குரிய கதைக்களத்தைக் கையில் எடுத்ததற்காக மட்டுமே திரைக்கதையில் சமரசம் செய்வோம் என்று செய்யாமல், இரண்டு நேர்முகத் தேர்வுக் களன்களை அடுத்தடுத்துக் காட்டி சுவாரசியம் குறையாமல் படத்தைக் கொண்டு சென்றிருக்கிறார் இயக்குநர்.

சர்ச்சைகள் தமிழ் சினிமாவுக்குப் புதிதில்லை என்றாலும் சில விஷயங்களைக் கதைக் களமாகத் தேர்ந்தெடுக்கத் தொடர்ந்து அனுபவமிக்க இயக்குநர்களே தயக்கம் காட்டும் நிலையில் தனது முதல் படத்திலேயே தனது மனதில் தோன்றிய கேள்விகளை, நியாயங்களை எந்தவித சமரசமும் இன்றி நேரடியாகப் பேசியிருக்கும் இயக்குநர் பிரபு ஜெயராமனுக்குப் பாராட்டுகள். இட ஒதுக்கீட்டைச் செல்வாக்கு உள்ளவர்களால் எப்படி தங்களுக்குச் சாதகமாக மாற்ற முடியும், இதில் மனிதநேயம், அன்பு என்பதே பிரதானமாக இருக்க வேண்டும் என்பதை முடிந்தவரை அழுத்தமாகப் பதிவு செய்ய முயன்றுள்ளார்.

டியூப்ளக்ஸ் என்கிற வடிவத்தில் ஒரு படம் என்று சொன்னாலும் முதல் பாதி கதைக்கும் இரண்டாவது பாதிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஏன் படத்தின் தலைப்புக்கும் முதலில் வரும் கதைக்குமே தொடர்பில்லை. இரண்டாவது பாதியையே முழுப் படமாக எடுத்திருக்கலாம் என்றே தோன்றுகிறது. மேலும் படத்தின் காட்சியமைப்பில் இன்னும் கவனம் செலுத்தியிருந்தால், வசனங்களை வைத்த விதத்தில், சில வசனங்களைக் குறைத்துக் காட்சிகளாகவே சித்தரித்து முதிர்ச்சி காட்டியிருந்தால் கண்டிப்பாக இன்னும் அழுத்தமாக இந்தப் படம் பதிவாகியிருக்கும். எந்த உணர்ச்சியுமே, மனதில் நிற்காமல் கடந்து விடுகிறது.

இந்தப் படம், உங்களைச் சிந்திக்க வைக்கவில்லை என்றாலும் இரண்டே கால் மணி நேர சுவாரசியப் பொழுதுபோக்காக இருக்கும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE