பியானோ தொடர்பாக வெளிவந்துள்ள பியானிஸ்ட், பியானோ டீச்சர், பியானோ பேக்டரி போன்ற சர்வதேச திரைப்படங்களின் வரிசையில் இன்னுமொரு முக்கியமான வரவு 'தி பியானோ லெசன்' (The Piano Lesson).
சில ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த 'கிரீன் புக்' (2018) திரைப்படம் 60-களில் வாழ்ந்த ஓர் அற்புதமான பியானோ கலைஞனைப் பற்றியது. ஆப்பிரிக்க அமெரிக்கரான அந்த பியானோ கலைஞன் வட அமெரிக்கா நகரங்களில் நடைபெறும் பியானோ கான்செர்ட்க்காக செல்லும் பயணத்தில் நிறவெறி சார்ந்து எதிர்கொள்ளும் பிரச்சினைகளைப் பற்றியும் அவருடனான நட்பு பற்றியும் அவனை காரில் அழைத்துச்செல்பவர் ஓட்டிச்செல்லும் ஒரு வெள்ளையினத்தவர் எழுதிய குறிப்புகளிலிருந்து உருவாக்கப்பட்ட 60-களின் பீரியட் பிலிம் அது. இப்படம் சிறந்த படம் உள்ளிட்ட பல்வேறு ஆஸ்கர் விருதுகளை வென்றது.
ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் படைப்பு வரிசையில் தனக்கென ஓர் இடத்தை பிடிக்கும் வகையில் ஒரு தரமான திரைப்படமாக நவம்பர் 2024ல் வெளியாகியுள்ளது 'தி பியானோ லெசன்'.
மிசிசிபி என்ற நகரில் ஒரு வெள்ளையின மாளிகையிலிருந்து படம் தொடங்குகிறது. தங்கள் மூதாதையர்கள் உருவங்கள் செதுக்கப்பட்ட பியானோவை பாய் சார்லஸ் சகோதரர்கள் அவர்கள் அடிமையாக இருந்து வேலை பார்த்துவந்த வெள்ளையர் குடும்பத்திலிருந்து திருடுகிறார்கள். அப்போது வெளியே அமெரிக்க சுதந்திர திருநாள் கொண்டாட்ட வெடிச் சத்தத்தில் இவர்கள் திருடிச்சென்றது அந்தநேரத்தில் தெரியவில்லை. ஆனால், யார் திருடிச் சென்றது என்பது பின்னர் தெரியவர பாய் சார்லஸ் வீட்டை கொளுத்துகிறார்கள்.
அங்கிருந்து தப்பிக்கும்போது ரயிலோடு கொளுத்தப்பட்டு இறக்கிறார் பாய் சார்லஸ். கறுப்பின அடிமை பாய் சார்லஸ் மகனான பாய்வில்லியின் பார்வையிலிருந்துதான் கதை தொடங்குகிறது. பாய் வில்லி தந்தையின் நினைவுகளிலேயே வாழ்கிறான். அவர் நாம் நிலத்தோடு வாழ்ந்தோம். நிலம்தான் நம்மைக் காப்பாற்றும் என்றும் கூறியதை பாய்வில்லிக்கு மறக்கமுடியவில்லை.
பாய் சார்லஸ் இன்னொரு வாரிசான மகள் பர்னிஸும் அவளது அம்மாவும் சித்தப்பாக்களின் குடும்பத்தினரோடும் மற்றும் பியானோவோடும் பிட்ஸ்பர்க் வந்துவிடுகிறார்கள். இது நடந்தது 1911-ல். ஆரம்பக் காட்சிகளான இவற்றுடன் படம் தொடங்கி 10 நிமிடங்களுக்கு பிறகு, 1936-ல் அதாவது 25 ஆண்டுகள் கடந்த பிறகு பிட்ஸ்பர்கிலிருந்து மீண்டும் படம் தொடங்குகிறது.
மிசிசிபியிலேயே ஒரு நில குத்தகை விவசாயியாக வளரும் பாய் வில்லி நண்பனின் டிரக் நிறைய தர்பூசணி ஏற்றிக்கொண்டு ஒருநாள் அதிகாலை பிட்ஸ்பர்க் வந்து சேர்கிறான். அவன் அங்கு வந்ததன் நோக்கம் குத்தகை விவசாயியாக இருப்பதிலிருந்து அந்த நிலங்களுக்கே சொந்தக்காரனாக மாற வேண்டும் என்பதுதான் அதற்காக, கணவன் மறைவுக்குப் பிறகு தன் மகளோடு சித்தப்பா டோக்கர் வீட்டிலேயே தங்கியிருக்கும் சகோதரி பர்னிஸுடன் இருக்கும் அந்த பியானோவை எடுத்துச் செல்ல வேண்டும், தர்பூசணியையும் பியானோவையும் விற்கு நிலத்தை வாங்கிவிட வேண்டும் என்ற லட்சியத்தோடு சகோதரியுடன் பேசுகிறான்.
பியானோவை எப்படியாவது எடுத்துச்செல்ல வேண்டுமென துடிக்கும் சகோதரன் பாய்வில்லி அந்த வீட்டிலேயே நண்பனோடு நாள் கணக்கில் டேரா போட்டு தங்குகிறான். பியானோவை எடுத்துச்செல்லும் நோக்கத்தோடு வந்திருந்தால் தயவுசெய்து வீட்டைவிட்டு 2 பேரும் வெளியே போங்கள் என்று கத்துகிறாள் மூத்த சகோதரியான பர்னிஸ். படம் முழுவதும் இவர்களுக்கான விவாதம் கடுமையாக சூடுபிடிக்கிறது.
ஒருநாள் சித்தப்பா டோக்கர் பியானோ வுக்கு பின்னுள்ள கதையை பாய்வில்லிக்கு சொல்கிறார். அவர்கள் வேலைபார்க்க நேர்ந்த வெள்ளையினத்தவரின் முதலாளியம்மாவின் திருமண நாள் ஒன்றின் விமரிசையான கொண்டாட்டத்தின்போது வேறொரு வெள்ளையினத்தவரின் அன்பளிப்பாக வந்து சேர்ந்ததுதான் இந்த பியானோ. ஆனால் அந்த பியானோவுக்கு பதிலாக ஒன்றரை வேலைக்காரர்களை ஈடாக கேட்கப்படுகிறது.
ஒன்றரை ஆள் என்றால் முழுசாக வளர்ந்த ஒரு ஆள். மற்றும் வளராத பாதி ஆள்... அதாவது சிறு பையன். பாய்வில்லி, பர்னிஸின் கொள்ளுத்தாத்தா வில்லி பாய் என்வரின் மனைவியும் அவரது மகனும் அந்த வேறொரு வெள்ளையின முதலாளி வீட்டுக்கு கதறக்கதற வண்டியில் ஏற்றிச்செல்லப்படுகிறார்கள். வில்லி பாய் தனது மனைவியை பிரிந்தது ஒருபக்கம் இருக்க அந்த வீட்டு முதலாளியம்மாவும் அற்புதமான தனது சேவகியை இழந்த துயரத்தில் படுத்தபடுக்கையாகிவிடுகிறார்கள்.
அந்த அம்மா கேட்டுக்கொண்டதற்கிணங்க, அந்த பியானோவில் வில்லி பாயின் மனைவி உருவமும் தனக்கும் மனைவிக்கும் நடந்த திருமணச் சடங்கு சம்பிரதாயங்களும் மற்ற சில மூதாதையர்கள் உருவங்களும் செதுக்கிறார்...வில்லி பாய். அடிப்படையில் அவர் மரத்தச்சரும்கூட. அவரது வேலைகளில் கிடைக்கும் பணம் எதுவும் அவருக்கு சொந்தமில்லை. அந்தப் பணம் முழுவதும் அவரை அடிமையாக வைத்திருக்கும் அவரது வெள்ளையின முதலாளிக்குதான் சேரும்.
பியானோவில் செதுக்கப்பட்ட பிரிந்த தனது வேலைக்கார தோழியின் உருவங்களைப் பார்த்தவாறே அவரது நினைவோடு மகிழ்ச்சியாக பியானோ வாசிக்கத் தொடங்கியதாக டோக்கர் கதையை சொல்கிறார் பியானோ தேடி வந்திருக்கும் பாய்வில்லிக்கு. உண்மையில் அவர் சொல்லும் ஆப்பிரிக்க அமெரிக்க மக்கள் அடிமை வணிகத்தில் ஈடுபடுத்தப்பட்ட கதையும் அப்போது காட்டப்படும் கிளிப்பிங்ஸ்களும் இப்படத்தின் ஆணிவேராக ஆழங்கால்படுகிறது.
இன்னொரு நாள் பர்னிஸ் குழந்தைக்கு பியானோ வாசிக்க சொல்லித் தருகிறான் பாய்வில்லி. குழந்தை வாசிப்பும், இவனது வாசிப்பும் அற்புதமான வேடிக்கையான தருணங்கள். மற்றொருநாள் பர்னிஸின் இன்னொரு சித்தப்பாவான வொய்னிங் பாய். நிறைய குடித்திருக்கும் அவர் தனது மறைந்த மனைவியின் நினைவாக எழுதிய பாடலை பியானோவில் வாசிக்க முற்படுகிறார். அக்காட்சியும் ஒரு அழகான காதல் கவிதை.
பியானோவை மீண்டும் மீண்டும் கேட்டு பாய் வில்லி தொந்தரவு செய்யும்போது ஒருநாள் பர்னிஸ் எடுத்துச்செல்ல நான் உடன்பட மாட்டேன் உறுதியாக மறுக்கிறாள். காரணம் நமது அம்மா, ''இதை வாசி பர்னிஸ் இதை வாசி பர்னிஸ்'' என்று என்னை கூறுவார். அப்படி மறக்க முடியாத பழைய பாடல்களை வாசிக்கும்போதுதான் இதில் தனது மூதாதையர்களை உணரமுடிந்ததாக நமது தாயார் சொல்வார் என்கிறாள் பர்னிஸ்.
அதேநேரம் அந்த பியானோ வீட்டில் இருப்பதால்தான் தனது தாய் தந்தையரின் நினைவுகளோடு நாட்களைக் கடத்த பியானோ ஒரு குலதெய்வமாக துணையிருக்கிறது என்றும் கூறுகிறாள் பர்னிஸ், அதேநேரம் பர்னிஸ் தான் ஏன் பியானோவை என் தாய் இறந்தபிறகு தொடுவதில்லை என்று கூறவும் செய்கிறாள். காரணம், அந்த பியானோவில் உருவங்களாக செதுக்கப்பட்டிருக்கும் அவர்களது மொத்த மூதாதையரகளும் உயிர்பெற்று வந்து இரவுகளில், கனவுகளில் வந்து உறவவாடத் தொடங்கிவிடுகிறார்களாம்.
தனிமையில் அது மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்திவிடுகிறது. அதனால்தான் அதனை தொட்டு வாசிக்கவே பயமாக இருக்கிறது ஆனால், அந்த பியானோ இந்த வீட்டில் ஒரு மூலையில் இருப்பது தனக்கு ஆதரவாகவும் இருக்கிறது. அதனை விற்பதற்கு சம்மதிக்க முடியாது என்று மறுத்துவிடுகிறாள் பர்னிஸ்.
பியானோவைச் சுற்றி வரும் மனிதர்களைப்பற்றிய பாத்திர வார்ப்புகள் தான் இப்படத்தின் மிகப் பெரிய பலம். அவர்களைச் சுற்றி பின்னப்பட்டிருக்கும் கதையில் அடிமை வணிகம் உள்ளிட்ட ஆப்பிரிக்க அமெரிக்க கறுப்பின வரலாற்றின் சிவப்புப் பக்கங்கள் ஒரு மறைந்துபோன கெட்ட கனவாக பயமுறுத்துகிறது. இப்படத்தில் அறிமுகப்படுத்தப்படும் 7 அல்லது 8 கதாப்பாத்திரங்கள் மட்டுமின்றி ஒரு பேயும் வருகிறது. அதுவும் கடைசியாக வந்து பயமுறுத்துகிறது. உண்மையில் அது ஒரு வெள்ளைக்கார பேய் என்பதால் அது உருவகம் என்றுதான் கருதவேண்டியுள்ளது. கிட்டத்தட்ட எல்லோருக்குமே தனித்தனி கதைகள் உள்ளன. அவற்றையெல்லாம் படம் பார்க்கும்போதுதான் அதன் போக்கில் அதன் சுவாரஸ்யம் என்னவென்று நமக்கு தட்டுப்படும்.
தர்ப்பூசணி வருமானம் + பியானோ விற்று வருவதில் பாதி என அவன் தனது குத்தகை நிலத்தை கிரயமாக வாங்கிக்கொள்ள போடும் கணக்குக்கு விடை கிடைத்ததா? பியானோவை விற்க சகோதரி பர்னிஸ்ஸின் இசைவு கிடைத்ததா? பர்னிஸ் கணவன் இறந்தது எப்படி? பர்னிஸை தன்னை திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தும் மதபோதகர் ஆவ்ரியின் ஆசை நிறைவேறியதா?
பாய்வில்லி உணர்ச்சிப் பெருக்கில் பியானோவை நகர்த்த முற்படும்போதெல்லாம் மின் விளக்கு அணைந்துபோவதும் அந்த வீட்டில் ஏற்படும் அமானுஷ்ய அதிர்வுகளும் எப்படி முடிவுக்கு வருகிறது. வந்து மாடியில் மறைந்திருக்கும் மிஸிஸிபி மாளிகையின் வெள்ளையின பேய் பிட்ஸ்பர்க்கின் நகரத்தின் வீட்டில் உள்ள கறுப்பினத்தவர்களை அச்சுறுத்த வந்தது ஏன், அந்த பேயை விரட்ட மதபோதகரின் ஜெபங்களுக்கு பலன் கிடைத்ததா? இறுதியாக பேய்யிடம் சிக்கிய பாய்வில்லி நிலை என்ன ஆனது போன்றவற்றை எல்லாம் ஒன்றரை மணிநேர திரைப்படமாக விறுவிறு ஜெட் வேகத்தில் சொல்லியிருக்கிறார்கள்.
இப்படத்தின் ஒரு வலுவான கதாபாத்திரமாக வலம் வருபவள் பாய்வில்லி சகோதரியான பர்னிஸ். வீட்டின் வரவேற்பறையில் ஒருஓரமாக தேமேவென்றிருக்கும் பியானோவை வைத்துதான் படத்தின் மொத்த கதையும் நகர்கிறது. ஆனால் அந்தப் பியானோவோ வாசிக்கப்படாமல் ஆண்டுக்கணக்கில் தூசுபடிந்து கிடக்கிறது. ஓரிரு தருணங்களில் இசைக்கப்படும் சந்தர்ப்பங்களும் அந்தப் பியானோவிற்கு கிடைக்கிறது. அப்படியான சந்தர்ப்பங்களில் வெவ்வேறு கதைகளின் வாசல்கள் திறக்கின்றன. இந்த பியானோவைச் சுற்றி இவ்வளவு சம்பவங்களா என்கிற அளவுக்கு ஏராளமான கதைகள் பின்னப்பட்டிருக்கின்றன.
இது ஒரு பீரியட் படம். பீரியட் படம் என்றால் அக்காலத்தின் வாழ்க்கை முறைகள், பண்பாட்டுப் பொருள்கள் பலவும் உள்ளே வர வேண்டும். ஆனால் இத்திரைப்படத்தில் அப்படியான பரந்துவிரிந்த காட்சிகள் விரிவாக எதுவுமில்லை. பியானோ லெசன் நியூயார்க் நகரில் நடத்தப்பட்ட ஒரு மேடை நாடகம். அதற்கேற்பவே மொத்த கதையையும் ஒரு வீட்டின் பல பகுதிகளை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. அதற்குள்ளாகவே அமெரிக்க வரலாற்றின் சில பகுதிகள் சொல்லப்பட்டுவிடுகின்றன, கூடியவரை வசனங்கள் வழியாகவே கடத்தப்பட்டு உணர்ச்சி வெள்ளத்தில் பார்வையாளர்களை மூழ்கடித்துவிடுகிறது.
பியானோ லெசன் நாடகமாக அரங்கேற்றம் பெற்ற வகையில் அமெரிக்காவின் புகழ்பெற்ற நாடகாசிரியர் ஆகஸ்ட் வில்சன் புலிட்சர் உள்ளிட்ட உயரிய பல விருதுகளை பெற்றார். அவரது நாடகங்களை ஏற்கெனவே டென்சல் வாஷிங்டன் என்ற புகழ்பெற்ற இயக்குநர் இயக்கியிருந்தார். பியானோ லெசன் டென்சல் மகனான மால்கம் வாஷிங்டன் இயக்கியுள்ளார். உண்மையில் மால்கம் வாஷிங்டன் திரைப்பட இயக்கமாக வெளிவந்துள்ள அவரது இந்த முதல்படம் மிகப் பெரிய நம்பிக்கையை அளிக்கக்கூடியதாக உள்ளது.
இந்நாடகம் தற்போது திரைப்படமாக தயாரிக்கப்பட்டபோதும் அதன் சாரம் குறையாமல் நடிப்பு, நிகழ்த்துமுறை, சொல்முறையில் பார்வையாளர்களை வசீகரித்துக் கொள்கிறார்கள். நாடகத்தன்மை என்றாலும் உரையாடல் நயம்மிக்க திரைக்கதையின் போக்கில் வரலாற்றுத் தரவுகளுக்கான சிற்சில இடங்கள், பிளாஷ்பேக் காட்சிகள் வழியே நம்மை அழைத்துச் செல்வதோடு வலுவான பாத்திரங்களாலும், தெறிப்பு மிக்க வசனங்களாலும் கதை சொல்லும் தன்மையின் எதிர்பாரா திருப்பங்களாலும் நம்மை கண்கொட்டாமல் பார்க்க வைத்துவிடுகிறார் இயக்குநர் மால்கம் வாஷிங்டன்.
இப்படத்தில் பாய்வில்லி என்ற பாத்திரத்தில் தனது துடிப்புமிக்க நடிப்பாற்றலால் படத்தின் வேகத்தை பாய்ச்சலாக மாற்றிய ஜான் டேவிட் வாஷிங்டனும், அதேபோல, எத்தனை சங்கடங்கள் பிரச்சினைகள் என்றாலும் அனைத்தையும் கண்டிப்பான பார்வையால் உறுதியான சொற்களால் வலிமையாக பர்னிஸ் என்ற பெண்மணியின் பாத்திரத்தை வலிமையாக நிலை நிறுத்திய டேனியல்லே டெட்வைலரும் இப்படத்தின் தனித்தன்மைக்கு மிக முக்கிய காரணிகளாவர்.
வேகமாகப் பாயும் நதியின் நீரோட்டத்தில் ஏற்படும் நீர்ச்சுழல் சிலநேரங்களில் ஆளையே இழுத்துக்கொண்டுவிடுவதுபோல இந்த பியானோவுக்கு பின்னுள்ள சம்பவங்களும் நூற்றாண்டுகளாய் சொல்லொனா துயரங்களில் மூழ்கிய ஆப்பிரிக்க அமெரிக்க கறுப்பின மக்களின் வாழ்க்கையில் உறைந்துள்ள வேதனைக் கதைகளில் நம்மை இழுத்துக்கொள்கிறது.
மிக மிக எளிமையான கதை சொல்லும் முறையில் வித்தியாசமான கதையம்சத்தில் அமெரிக்க சினிமாவை மீண்டும் ஒரு புதிய அலைக்கு இப்படம் தயார்படுத்த விரும்புகிறதோ என்றும் யோசிக்கத் தோன்றுகிறது. இந்தப் படம் தற்போது நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.
முக்கிய செய்திகள்
ஓடிடி களம்
1 day ago
ஓடிடி களம்
1 day ago
ஓடிடி களம்
1 day ago
ஓடிடி களம்
2 days ago
ஓடிடி களம்
4 days ago
ஓடிடி களம்
4 days ago
ஓடிடி களம்
7 days ago
ஓடிடி களம்
8 days ago
ஓடிடி களம்
10 days ago
ஓடிடி களம்
10 days ago
ஓடிடி களம்
13 days ago
ஓடிடி களம்
14 days ago
ஓடிடி களம்
14 days ago
ஓடிடி களம்
15 days ago
ஓடிடி களம்
15 days ago