Kishkindha Kaandam: ஒரு குடும்பம் கடத்தும் ‘சஸ்பென்ஸ்’ அனுபவம் | ஓடிடி திரை அலசல்

By குமார் துரைக்கண்ணு

ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி ஒருவரின் துப்பாக்கி காணாமல் போகிறது. அந்த துப்பாக்கி எப்படி தொலைந்து போகிறது? அதன் பின்னணியில் இருக்கும் மர்மம் என்ன? காணாமல் போன அந்த துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டதா, இல்லையா? என்பதுதான் 'கிஷ்கிந்தா காண்டம்’ (Kishkindha Kaandam) படத்தின் ஒன்லைன். (அலர்ட்: இந்தக் கட்டுரையில் சில ஸ்பாய்லர்கள் உள்ளன.)

ஒளிப்பதிவாளர் பாகுல் ரமேஷ் எழுதி, இயக்குநர் தின்ஜித் அய்யதன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் மலையாளத் திரைப்படம் ‘கிஷ்கிந்தா காண்டம்’. சைக்கலாஜிக்கல் க்ரைம் த்ரில்லர் திரைப்படங்கள் மலையாளத்துக்கு புதிதல்ல என்றாலும், இது மனிதக் கூறுகளோடு இணைந்திருக்கும் பல்வேறு சிக்கல்களை பேசியிருக்கிறது. படத்தில் வரும் பிரதான பாத்திரங்களின் வாழ்வியலும், குணாதிசயங்களும் படம் பார்க்கும் நமக்கு அவர்களுடன் ஒரு வலுவான பிணைப்பை உருவாக்குகிறது.

நம் சொந்த வாழ்க்கையிலோ அல்லது யார் மூலமாவது கேள்விபட்டது போன்ற நபர்களாகத்தான் படத்தின் முக்கிய கதாப்பாத்திரங்களை இயக்குநர் உருவாக்கியிருக்கிறார். இதன்மூலம், ஒருதரப்பு நியாயத்தை மட்டும் பேச பழக்கப்பட்டவர்களை படத்தில் வரும் அனைத்து கதாப்பாத்திரங்களின் மீதும் அனுதாபங்களை வரவழைத்து, அவர்களது தரப்பு நியாயத்தையும் பேச செய்திருக்கிறார் இயக்குநர்.

இயக்குநர் பசுமையைப் போர்த்தியபடி, கண்களை மறைக்கும் வனங்களைக் காட்டி அடர்த்தி மிகுந்த வாழ்வியல் பின்னணி கொண்ட படத்தின் பிரதான கதாபாத்திரங்களை நமக்குள் கொண்டுவந்து சேர்த்திருக்கிறார். படம் முழுக்க மரத்துக்கு மரம் தாவிக் குதிக்கும் வானரங்கள் வருகின்றன.அவை போலத்தான் இந்தப் படத்தைப் பார்க்கும்போது, நம் மனதையும், என்ன நடந்திருக்கும் என்பதை மாறி மாறி ஊகித்துக் கொண்டே இருக்கச் செய்திருக்கிறார் இயக்குநர்.

மெது மெதுவாக படம் நகர்ந்து செல்லும்போதுதான், படத்தில் வரும் அனைத்து பாத்திரங்களும் நமக்குள் அத்தனை கச்சிதமாக வந்து ஒட்டிக் கொள்கின்றன. நெருக்கமான அந்த எமோஷ்னல் கனெக்‌ஷனுக்கு படத்தின் கதைக்களத் தேர்வு சாலப் பொருத்தமாக அமைந்திருக்கிறது. இரண்டு மணி நேரத்தில், ஆடியன்ஸை சஸ்பென்ஸுடன் உட்கார வைத்து தந்தை - மகன் உறவுக்கு வலு சேர்க்கும் இடத்தில் ஆடியன்ஸின் அப்ளாஸ்களை அள்ளியிருக்கிறார் இயக்குநர் தின்ஜித்.

ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ வீரர் அப்பு பிள்ளை (விஜய ராகவன்). இவரது இரண்டாவது மகன் அஜய் சந்திரன் (ஆசிப் அலி). புற்றுநோயால் இறந்த மனைவி, காணாமல் மகன் சாச்சுவின் நினைவுகளால் வாழ்ந்து வரும் அஜய், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அபர்ணாவை (அபர்ணா பாலமுரளி) பதிவு திருமணம் செய்துகொள்கிறார். திருமணம் முடிந்து வீடு திரும்பும்போது, அஜய்யின் வீட்டில் போலீஸ், பொதுமக்கள் என பெருங்கூட்டம். அஜய்யின் அப்பா அப்பு பிள்ளையின் துப்பாக்கி காணாமல் போன தகவல், தீ போல பரவியதால் கூடிய கூட்டம்தான் அது.

அந்த சமயத்தில் அங்கு தேர்தல் வரவிருப்பதால், துப்பாக்கியை ஒப்படைக்க போலீஸார் கடிதம் அனுப்பியும், அப்பு பிள்ளை துப்பாக்கியை ஒப்படைக்காததால், போலீஸார் வீட்டுக்கே வந்து அவரிடம் விசாரணை நடத்துகின்றனர். துப்பாக்கி காணாமல் போனது குறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்க தொடங்குகின்றனர். அந்த துப்பாக்கியை யார் எடுத்து சென்றது? ஏதாவது அசம்பாவிதம் அந்த துப்பாக்கியால் நடந்ததா? அஜய்யின் மகன் சாச்சு எங்கு போனான்? அவனுக்கு என்ன ஆனது? காவல் துறை விசாரணையின் முடிவு என்ன? - இந்தக் கேள்விகளுக்கான விடைதான் படத்தின் திரைக்கதை.

படத்தின் பிரதான பாத்திரத்தில் வரும் விஜயராகவன் தனது இயல்பான நடிப்பால் ஸ்கோர் செய்திருக்கிறார். யாருக்கும் தெரிந்துவிடக்கூடாது என்று அவர் மூடி மறைத்துக் கொள்ளும் நோயின் தன்மைக்கு நியாயம் செய்திருக்கிறது அவரது நடிப்பு. படத்தில் அந்த நோய் குறித்து ரிவீல் செய்யும் இடங்களில் அவரது யதார்த்தமான நடிப்பு ரசிக்க வைக்கிறது. யாரைப் பார்த்தாலும் எரிந்து விழும் காட்சிகளிலும், க்ளைமாக்ஸ் காட்சியில் வரும் ஃபிளாஷ்பேக் காட்சியிலும் விஜயராகவன் அசத்தியிருக்கிறார்.

அஜய் கதாப்பாத்திரத்தில் வரும் ஆசிப் அலியும் கவனிக்க வைத்திருக்கிறார். படம் முழுக்க தனது தந்தையை யாருக்காகவும் விட்டுக்கொடுக்காத வகையில் அமைக்கப்பட்டிருக்கும் அவரது கதாப்பாத்திரம் அருமையாக எழுதப்பட்டிருக்கிறது. ஒரு காட்சியில் தனது அப்பாவைக் கட்டிக்கொண்டு அழுவது தந்தையின் தியாகத்தை உணர்ந்த ஒவ்வொருவருக்கும் கண்ணீரை வரவழைக்கும். அபர்ணா பாலமுரளிதான் இந்தப் படத்தின் மிக முக்கியமான கதாப்பாத்திரம். இந்தப் படத்தைப் பார்க்கும் ஒவ்வொரு பார்வையாளர்களுக்கும் ஏற்படும் சின்ன சின்ன சந்தேகத்தை எல்லாம், அப்பு பிள்ளை வீட்டுக்கு மருமகளாக செல்லும் அபர்ணா கதாப்பாத்திரம் மூலம் கேட்க வைத்து, ஒவ்வொரு சஸ்பென்ஸையும் விவரித்திருக்கிறார் இயக்குநர் தின்ஜித்.

பொதுவாகவே மறைக்கப்படும் விஷயங்கள் குறித்து ஆராய்வது அனைவருக்கும் பிடித்தமானது என்றாலும், ஒரு வீட்டுக்கு மருமகளாக செல்பவருக்கு அந்த ஆர்வம் சற்று தூக்கலாகவே இருப்பதை அபர்ணா திரையில் வெளிப்படுத்தும் விதம் சிறப்பு. அனைத்து உண்மையும் தெரிந்து இறுதிக் காட்சியில், இது தன்னுடைய குடும்பம், இந்த குடும்பத்தில் தானும் ஒருத்தியாக மாறும் பாத்திரத்தில் கனகச்சிதமாக பொருந்தியிருக்கிறார் அபர்ணா.

இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனங்களை எழுதிய பாகுல் ரமேஷே படத்துக்கு ஒளிப்பதிவு செய்திருப்பது படத்துக்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது. அடர்ந்த வனத்தில் அமைந்த ஒற்றை வீடு, உயர்ந்து நிற்கு மரங்கள், போலீஸ் ஸ்டேசன் என பாகுல் ரமேஷின் இயல்பான காட்சிப்பதிவுகள் வெகுவாக ஈர்க்கிறது. படத்தின் இசையமைப்பாளர் முஜீப் மஜீத்தின் பின்னணி இசையும், சூரஜ் ஈ.எஸ்-ன் கட்ஸும், படத்தை எங்கேஜிங்காக நகர்த்தியிருக்கிறது. டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் இப்படம் காணக்கிடைக்கிறது.

குடும்பத்துடன் பார்க்கலாம், தமிழ் டப்பிங் உள்ளது. படம் கொஞ்சம் மெதுவாக நகரும். அதேபோல், புத்திசாலித்தனம் மற்றும் பாசத்தின் பெயரால் சட்டத்தின் ஓட்டைகளை படத்தின் பிரதான பாத்திரங்கள் சாதகமாகப் பயன்படுத்தியிருப்பது நெருடல். குடும்பக் கதைகள்தான் மலையாளத் திரையுலகின் பிரம்மாஸ்திரங்கள். ஒரு குடும்ப கதைக்குள் க்ரைம், சஸ்பென்ஸ், த்ரில்லர் சம்பவங்களை மறைத்து வைத்து, அதை விடுவிக்கும் இடத்தில் நம்மை ஆக்கிரமித்துக் கொள்ளும் பல படங்கள் இதற்குமுன் வந்திருந்தாலும், குடும்பம் என்பது அன்பால் ஆனது மட்டுமல்ல, எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் ஒருவரையொருவர் விட்டுக் கொடுக்காமல் இருப்பதே, என்பதை நிரூபித்திருக்கிறது இந்த ‘Kishkindha Kaandam’!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஓடிடி களம்

2 days ago

ஓடிடி களம்

4 days ago

ஓடிடி களம்

5 days ago

ஓடிடி களம்

7 days ago

ஓடிடி களம்

9 days ago

ஓடிடி களம்

16 days ago

ஓடிடி களம்

18 days ago

ஓடிடி களம்

19 days ago

ஓடிடி களம்

22 days ago

ஓடிடி களம்

22 days ago

ஓடிடி களம்

25 days ago

ஓடிடி களம்

26 days ago

ஓடிடி களம்

26 days ago

ஓடிடி களம்

26 days ago

ஓடிடி களம்

26 days ago

மேலும்