தனது பணியிட மாறுதலுக்காக இறுதிக்கட்டத்தை எட்டிய கொலை வழக்கு விசாரணை ஒன்றை விரைந்து முடிக்கும் முனைப்பில் இருக்கும்போது காவல் துறை அதிகாரியின் காவலில் இருந்து கொலையாளி தப்பி விடுகிறார். அந்த கொலையாளியைப் பிடித்து வழக்கை முடித்து காவல் துறை அதிகாரி இடமாறுதல் பெற்றாரா, இல்லையா என்பதுதான் ‘ஷக்காஹாரி’ படத்தின் ஒன்லைன்.
படத்தின் கதையை எஸ்.ஆர்.கிரீஷ் உடன் இணைந்து எழுதி, அறிமுக இயக்குநர் சந்தீப் சுன்கத் இயக்கியிருக்கும் கன்னட திரைப்படம் 'Shakhahaari'. இது ஒரு க்ரைம் த்ரில்லர் மர்டர் இன்வெஸ்டிகேஷ்ன் திரைப்படம். குத்துப் பாடல், அதிரடி ஆக்ஷன் தமாகா, பஞ்ச் டயலாக் பட்டாசென வழக்கமான சான்டல்வுட் டெம்ப்ளேட்டுகளில் கலந்து கரைந்து போகாமல், ஒரு சிறந்த கொலை விசாரணை களத்தை கையில் எடுத்துக்கொண்டு பார்வையாளர்களுக்கு சிறந்ததொரு திரைப்பட அனுபவத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர். மர்டர் இன்வெஸ்டிகேஷன் திரைப்படங்களுக்கே உரிய ட்விஸ்ட் அண்ட் டர்ன்ஸ் படத்தை எங்கேஜிங்காக நகர்த்துகிறது. நேர்கோட்டில் பயணிக்கும் இயக்குநரின் படைப்பில் சினிமாவுக்கான க்ராஃப்ட் அனைத்தும் கச்சிதமாகப் பொருந்தியிருப்பது படத்தை ரசிக்க வைக்கிறது.
கர்நாடக மாநிலம் சிவமோஹாவின், தீர்த்தஹள்ளி தாலுகாவின் மெலிகே கிராமத்தில் இருக்கிறது சுப்பண்ணாவின் (ரங்காயணா ரகு) சிறிய ஓட்டல். இட்லி, தோசை, சித்ர அன்னம், டீ, காபி, கசாயம் என சிம்பிளான சைவ மெனுதான். ஆனால், அந்த ஊரில் இருக்கும் பலருக்கும் அந்த ஓட்டல்தான் உணவோடு சேர்ந்து ஊர் கதைகளையும் மென்று செமிக்கும் இடம். நடுத்தர வயதுடைய சுப்பண்ணாவுக்கு இந்த ஓட்டல்தான் எல்லாமே.
ஆகாசவாணி நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப தன்னுடைய வேலைகளை நிர்மானித்து வாழும் சுப்பண்ணாவுக்கு, நாடக கலையின் மீது ஆர்வம் கொண்டவர். காலை முதல் மாலை வரை ஓட்டல் வேலைகள், மாலையில் நாடக பயிற்சியென கடக்கிறது அவரது காலம். தினந்தோறும் ஓட்டலைக் கடந்து செல்லும் பேருந்தில் பயணிக்கும் அவர் வயதொத்த பெண் ஒருவரை பார்த்து மிக மெல்லிய காதலை வளர்த்து வருகிறார்.
அதேநேரம், மனைவியின் உடல்நிலை காரணமாக விருப்ப பணியிடமாறுதல் கோரி காத்திருக்கிறார் காவல் அதிகாரி மல்லிகார்ஜுன் (கோபால்கிருஷ்ண தேஷ்பாண்டே). அவர் விசாரித்து வரும் கொலை வழக்கின் விசாரணை இறுதிக் கட்டத்தை எட்டியிருப்பதால், அந்த வழக்கை முடித்துவிட்டால் இடமாறுதல் கோரிக்கையை நிறைவேற்றுவதாக மேலதிகாரி உறுதி அளிக்கிறார். இந்த நேரத்தில் கொலை வழக்கின் குற்றவாளி சிறையில் இருந்து தப்பிவிடுகிறார்.
கொலையாளி பிடிபட்டாரா? மல்லிகார்ஜுனுக்கு இடமாறுதல் கிடைத்ததா? இல்லையா? என்பதும், சுப்பண்ணா, மல்லிகார்ஜுன் இந்த இருவரது வாழ்க்கையில் நடக்கும் திருப்பங்களும், தாக்கங்களும் வழக்கு கொலை விசாரணைக்கு உதவுகிதா? இல்லையா? என்பதும்தான் இப்படத்தின் திரைக்கதை.
பச்சை வாழையிலையில் தண்ணீர் தெளித்து, ஆவிபறக்க சோறு போட்டு சூடு ஆறுவதற்குள் அஞ்சாறு கரண்டி நெய்யை ஊற்றி பருப்புப் பொடியை இஷ்டம் போல் தூவி இரண்டையும் குழைத்து பருப்புக் கூட்டோடு சேர்த்து வாயினுள் இறக்குற சுகமே தனிதான். பிறகு கதம்ப சாம்பார், காரக்குழம்பு, புளி ரசம், கெட்டி தயிர் என கூட்டுப் பொறியல், அப்பளத்துடன் அள்ளியெடுத்து சாப்பிட்டால் அந்த மாதிரி இருக்கும். இப்படி சிலருக்கு சாப்பிட பிடிக்கும்.
இன்னும் சிலருக்கு, வாழையிலையில் தண்ணீர் தெளித்த பிறகு, பெரிய வெங்காயம், வெள்ளரி, பச்சை மிளகாயுடன் சேர்த்த தயிர் பச்சடி, வெள்ளப்பூசணி அல்லது பிரட் அல்வா வச்சவுடனே டெம்ப்டாகும் நாக்கு அதை ருசி பார்க்கும். சீரக சம்பா அல்லது பாசுமதி அரிசிக்கு தோதா சரிக்கு சரியாப் போட்ட ஆடோ, கோழியோ மசாலாவில் வெந்து, சிவந்து எலும்பும் சதையுமா இலைக்கு வரும்போதே பீஸ் போடுங்களென்று வாய்வழியே குடல் வந்து கத்திட்டுப் போகும். கொழுப்பும் நெய்யும் ஒன்றென கலந்த அந்த பிரியாணியை தயிர் பச்சடியோடு சேர்த்து சாப்பிடும் போது கிடைக்கிற சுவையிருக்கே, சொல்லிமாளாது என்பர்.
இந்த இரண்டு வகை உணவுக்கும் பெயர்தான் வேறு வேறே தவிர, விலையில் இரண்டுமே ஒன்றுக்கு ஒன்று சளைத்தது அல்ல. ஆனால் தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய், புதினா, கருவேப்பிலை, கொத்தமல்லி, இஞ்சி, பூண்டு, தேங்காய், மசாலாப் பொருட்கள், எண்ணெய், நெய், தயிர் என இங்கும் அங்கும் உணவுக்கு சுவையையும், தனித்தும் காட்டும் இந்தப் பொருட்கள் எல்லாம் ஒன்றுதான். அங்கு பருப்புடன் மசிந்துக் கிடக்கும் அதே தக்காளியும், வெங்காயமும்தான் இங்கு கறியோடு நன்கு வெந்து பஞ்சுபஞ்சாகிக் கிடக்கின்றன. பயன்படுத்தப்படும் இடத்தையும், அளவையும் பொறுத்து அவை சுவையில் மாறுபடுகின்றன. ஏன் இப்படி இடத்துக்கு ஏற்றதுபோல் சுவை மாற்றுகின்றன? என தக்காளி, வெங்காயத்திடம் கேட்க முடியாது.
ஆனால், இதே மனிதர்களிடம் கேட்டால் 'சந்தர்ப்ப சூழ்நிலை' என்று தாமதிக்காமல் பதில் வரும். 'சந்தர்ப்ப சூழ்நிலை' மீது பழியைப் போட்டு தப்பித்துக் கொள்வது மனிதர்களுக்கு மிகவும் சுலபமானது. அதோடு, செய்த தவறை ஒத்துக்கொள்ள மனமின்றி நியாயப்படுத்த முயற்சிக்கும் ஒருவகை உத்தியும் கூட. அப்படி சந்தர்ப்ப சூழ்நிலைகளைக் காரணம் காட்டி தப்பிக்க முயற்சிப்பதால் ஏற்படும் விளைவுகளையும் விபரீதங்களையும் பேசும் படம்தான் இந்த 'Shakhahaari' திரைப்படம்.
படத்தின் கதையோட்டத்துக்கு ஏற்றவாறு நடிகர்களின் பங்களிப்பும், பிற டெக்னிக்ல் டீமோட ஒத்துழைப்பும் கவனம் பெறுகிறது. ஓர் அறிமுக இயக்குநர் பல திரைப்படங்களில் குணச்சித்திர பாத்திரங்களில் நடித்துள்ள ரங்காயனா ரகுவை பிரதான பாத்திரமாக்கி அவரது நடிப்பாற்றலை முழுமையாக வெளிப்படுத்த வாய்ப்பளித்திருப்பது பாராட்டுக்குரியது.
இப்படத்தில் வரும் நடிகர்கள் அனைவருமே கதைக்கு தேவையான பங்களிப்பை திருப்திகரமாக செய்துள்ளனர். ரங்காயனா ரகு திரையில் அசாத்தியங்களை நிகழ்த்தியிருக்கிறார். குறிப்பாக ஓட்டலில் ஒரு முக்கியமான காட்சியில் வரும் அவரது நடிப்பு காண்பாரை நிச்சயம் வியக்க வைக்கும். அதேபோல், காவல்துறை அதிகாரியாக வரும் மல்லிகார்ஜுனின் நடிப்பும் சிறப்பாக இருக்கிறது. டிரான்ஸ்ஃபர் வர நேரத்தில் நடக்கும் எதிர்பாராத சம்பவத்தால் ஏற்படும் அவதி, குழப்பம், கோபம், வெறுப்பு கலந்த முகபாவனையுடன் கூடிய உடல்மொழியை படம் முழுக்க அவர் கேரி செய்திருக்கும் விதம் ஈர்க்கிறது.
இந்த மர்டர் இன்வெஸ்டிகேஷன் கதையை மெருகேற்றியதில் முக்கியமானவர் விஸ்வஜித் ராவ். இவரது ஒளிப்பதிவு படத்துக்கான சஸ்பென்ஸ் டோனைக் கொடுத்திருக்கிறது. பெரும்பாலும் இரவுநேரக் காட்சிகள்தான். அதுவும் ரூரல் கர்நாடகாவுக்கான மஞ்சள்நிற பல்பின் வெளிச்சத்தில் வருவது போலத்தான் படத்தின் பெரும்பாலான காட்சிகள் வருகின்றன. அவை உறுத்தலின்றி படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர். மயூர் அம்பெல்குவின் பின்னணி இசை படத்துக்கு பலம். பாடல்கள் மனதை வருடுகின்றன. ஷஷாங் நாராயணாவின் கட்ஸ் படத்தை விறுவிறுப்பாக்குகிறது.
படத்தில் லாஜிக் மீறல்கள் இருந்தாலும், க்ரைம் த்ரில்லர் ரசிகர்களுக்கு அதிகமாவும், பொதுவான ரசிகர்களுக்கு கொஞ்சம் கம்மியாகவும் பிடிக்கும். சில ரத்தம் தெறிக்கும் காட்சிகள் உள்ளன. தமிழ் டப்பிங் இல்லை. அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் இப்படம் காணக்கிடைக்கிறது. சைவம், அசைவம் கிடைக்கும் என்ற பெயர் பலகையோடு செயல்படும் ஓட்டலில் சாப்பிட நேரும் போது சாம்பாரில் கறியோ, எலும்புத்துண்டோ வந்துவிடக் கூடாது என்ற எச்சரிக்கை உடன் கூடிய உள்ளுணர்வுதான் இந்த 'Shakhahaari' திரைப்படம்!
முக்கிய செய்திகள்
ஓடிடி களம்
1 day ago
ஓடிடி களம்
2 days ago
ஓடிடி களம்
4 days ago
ஓடிடி களம்
6 days ago
ஓடிடி களம்
13 days ago
ஓடிடி களம்
15 days ago
ஓடிடி களம்
16 days ago
ஓடிடி களம்
19 days ago
ஓடிடி களம்
20 days ago
ஓடிடி களம்
22 days ago
ஓடிடி களம்
23 days ago
ஓடிடி களம்
23 days ago
ஓடிடி களம்
23 days ago
ஓடிடி களம்
23 days ago
ஓடிடி களம்
23 days ago