Golam: த்ரில்லான விசாரணைக் களமும், சீட் நுனி திரை அனுபவமும் | ஓடிடி திரை அலசல்

By குமார் துரைக்கண்ணு

கொச்சியில் செயல்பட்டு வரும் அலுவலகம் ஒன்றின் மேனேஜிங் டைரக்டர், பணி நேரத்தில் அலுவலக கழிவறையில் மர்மமான முறையில் உயிரிழக்கிறார். அது இயற்கை மரணமா? கொலையா? - இது குறித்த காவல் துறை விசாரணைதான் ‘கோளம்’ (Golam) படத்தின் ஒன்லைன்.

பிரவீன் விஸ்வநாத் உடன் திரைக்கதையை இணைந்து எழுதி அறிமுக இயக்குநர் சம்ஜத் இயக்கியிருக்கும் மலையாளத் திரைப்படம் 'கோளம்'. கொலை விசாரணை குறித்து ஏற்கெனவே வந்துள்ள பல மலையாளத் திரைப்படங்களுக்கு நிகராக தனது முதல் படத்திலேயே முத்திரைப் பதித்திருக்கிறார் இயக்குநர். கதை சொல்லும் விதத்திலும் வெகுவாக ஈர்த்திருக்கிறார்.

உண்மைக்கு மிக நெருக்கமான படைப்புகள் பார்வையாளர்களை எளிதில் ஆட்கொள்ளும் என்பதற்கு இந்த திரைப்படம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. அலுவலகத்துக்குச் சென்று பணி செய்யும் வழக்கமே இல்லாதவர்கள், இப்படத்தைப் பார்த்தால்கூட, தங்களை சுலபமாக கனெக்ட் செய்துகொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. இயக்குநருக்கு மிகச் சிறந்த ஒத்துழைப்பை படத்தில் பணியாற்றிய நடிகர்களும், தொழில்நுட்பக் குழுவினரும் கொடுத்துள்ளனர்.

கொச்சியில் ‘வி டெக் இண்டர்நேஷ்னல்’ என்ற ஐடி கம்பெனி செயல்பட்டு வருகிறது. வழக்கமான ஒரு பணி நாளில் அந்த கம்பெனியின் எம்டி ஐசக் ஜான் (திலீஷ் போத்தன்) அந்த அலுவலகத்தின் கழிவறையில் உயிரிழந்து கிடக்கிறார். பதறிப்போன அலுவலக ஊழியர்கள் காவல்துறைக்கு தகவல் கொடுக்கின்றனர். சம்பவ இடத்துக்கு வந்து தடயங்களை சேகரித்து விசாரணை மேற்கொள்ளும் ஏஎஸ்பி சந்தீப் கிருஷ்ணாவுக்கு (ரஞ்சித் சஜீவ்) இந்த மரணத்தில் சந்தேகம் வலுக்கிறது. உடன் பணிபுரியும் அனுபவத்தில் மூத்த காவல் அதிகாரியான சிஐ அப்துல் ரஹீம் (அலென்சியர் லே லோபஸ்) அதை இயற்கையான மரணம் என்று உறுதியாக கூறுகிறார். ஆனால் சந்தீப் கிருஷ்ணா, தனது விசாரணையை தீவிரப்படுத்துகிறார். சந்தீப் கிருஷ்ணாவின் கணிப்பு சரியா, தவறா என்பதுதான் படத்தின் திரைக்கதை.

இந்தப் படம் ஒரு மெலோடியான பாடலோடு துவங்குகிறது. அந்த ஒரே பாட்டில் ‘வி டெக் இண்டர்நேஷ்னல்’ அலுவலகத்தில் பணியாற்றும் ஒவ்வொரு பணியாளரின் பின்புலமும் ரத்தினச் சுருக்கமாக காட்சிப்படுத்தி, எல்லா கதாப்பாத்திரங்களையும் அவர்களின் சுபாவங்களையும் இயக்குநர் நமக்கு அறிமுகப்படுத்தி விடுகிறார். இந்த அறிமுகம் கதைக்குள் நாம் பயணிப்பதை இலகுவாக்குகிறது.

பள்ளி,கல்லூரி போல வீட்டுக்கு அடுத்தப்படியாக அதிகமான நேரத்தை பங்கிட்டுக் கொள்ளுமிடம்தான், அலுவலகமும். பெரும்பகுதி நேரத்தை பகிர்ந்து கொண்டாலும் அலுவலகம் எப்போதும் பல ரகசியங்களை தனக்குள் புதைத்துக் கொண்டிருக்கும். கடைநிலை ஊழியர் துவங்கி உயர் பொறுப்பில் இருப்பவர்கள் வரை அவரவர் பணி நிலைக்கேற்ப அலுவலகம் பற்றிய ஏதோ ஒன்றை துல்லியமாக அறிந்து வைத்திருப்பர். அதை அவர்களுக்கு மட்டுமே அந்த அலுவலகம் சாத்தியமாக்கிக் கொண்டேயிருக்கும். டேப்ல வடியும் தண்ணீரை நிறுத்துவது தொடங்கி கேட்டோட லாக் மாட்டுவது உட்பட அது எதுவாகவும் இருக்கலாம்.

விதவிதமான உடை அணிபவர், வரும்போதே பெர்ஃபியும் வாசத்தால் கிறங்கவைப்பவர், எல்லாம் தெரிந்தவர், ஏதுமறியாதவர், எதற்கெடுத்தாலும் கோபப்படுபவர், சத்தமாக பேசி சிரிப்பவர், திடீர் திடீரென தானாக அழுது தீர்ப்பவர், அருகிலிருப்பவருக்கு கேட்காத வகையில் செல்போனில் பேசிக் கொண்டேயிருப்பவர், காரில் வருபவர், காற்றில் மிதப்பவர், டூவீலரில் பறப்பவர், நடந்தே தேய்பவர், கொலுசை ஒலிக்கச் செய்பவர், ஏதாவது கொரித்துக் கொண்டே இருப்பவர், அடிக்கடி டைம் பார்ப்பவர், அரட்டை அடிப்பவர், மன, பண கஷ்டங்களை சிகரெட் புகையாய் ஊதி தள்ளுபவர், தேநீரின் இளஞ்சூட்டில் கவலைகளைப் பொசுக்கி கொள்பவர், டயட் இருப்பவர், தைலம் தேய்ப்பவர், தண்ணீர் கேட்பவர், சாமி கும்பிடுபவர், கண்ணாடியில் முகம் பார்ப்பவர், மனதின் துயரங்களை மஸ்காரா பூசி மறைத்துக் கொள்பவர், கால் மேல் கால் போட்டு உட்காருபவர், என ஒவ்வொரு அலுவலகமும் விதவிதமான மனிதர்களின் வியத்தகு வித்தியாசங்களைக் கொண்டிருக்கும்.

8 மணி நேர உறவுகள் தான் என்பதால், அளவுகோலுடன் கூடிய அனுமதிக்கப்பட்ட வரையறைகளைக் கொண்ட அளவளாவலுக்குப் பஞ்சமிருக்காது. முகத்தைப் பார்க்கும்போதே உடன் பணியாற்றுபவர்களின் மன வெதும்பல்களை டவுன்லோடு செய்துவிட முடிந்தாலும், சம்பிரதாய விசாரிப்புடன் பேசி நகரும் நாகரிகம் தான் அலுவலக உறவுகளின் ஆகச்சிறந்த பண்பு. ஆண், பெண் என்ற இருவேறு முகங்களில் வெளிப்படும் கருணை, அன்பு, வஞ்சம், காதல், வீரம், துரோகமென அச்சுப்பிசகாமல் பார்த்து பார்த்து ஒவ்வொரு அலுவலகத்துக்கும் அலுத்துப் போயிருக்கும் .

அலுவலகத்தின் சீலிங் தொடங்கி பக்கவாட்டுச் சுவர்களுக்கும் கூட காதிருக்கும். பஞ்சிங் மெஷின், காஃபி மேக்கர், தண்ணீர் மெஷின், வாஷ்பேசின் டேப், டிவி ரிமோட், ஜன்னல், சேர் என அனைத்துக்கும் கண் இருக்கும். எந்த நேரத்தில் எது பிறழ் சாட்சியாகும் என்பது தெரியாது. கவனமும் எச்சரிக்கையும் மிகுந்து காணப்படும் அனைத்து அலுவலகத்திலும் கச்சிதமான மவுனம் நிலைத்திருக்கும். இருவர், மூவர் அல்லது கும்பலாய் சென்று திரும்பினாலும் யாரைப் பற்றியும் யாருக்கும் முழுவதுமாக தெரிந்திருக்காது. ஆனால், இந்த பொதுவியல்புகளை உள்ளடக்கி வெகுஜன ரசனையோடு எங்கேஜிங்காக ஓர் அலுவலகம், அதன் பணியாளர்கள், அலுவலகத்தின் பிராபர்டீஸ்களை வைத்துக் கொண்டு ஸ்லோ பர்னிங் மர்டர் இன்வெஸ்டிகேசன் கதையில் மீண்டும் ஒருமுறை மின்னியிருக்கிறது மோலிவுட்.

பெரும்பாலான மலையாளத் திரைப்படங்களில், காவல் துறையை எதிர்மறை கதாப்பாத்திரங்களாக மட்டுமே பயன்படுத்தாமல், சராசரி மனித வாழ்வின் ஓர் அங்கமாக காட்சிப்படுத்தியிருப்பார்கள். அந்தவகையில் இந்தப் படத்திலும், ஓர் இளம் காவல்துறை அதிகாரியின் மதிநுட்பம் சிக்கலான ஒரு வழக்கைத் தீர்க்க எவ்வாறு உதவுகிறது என்பதை நேர்த்தியாக விவரித்திருக்கிறார் இயக்குநர். திலீஷ் போத்தன், ரஞ்சித் சஜீவ், அலென்சியர் உட்பட மொத்தமாக சேர்த்தால் 20 பேர் தான் படத்தில் நடித்திருக்கிறார்கள்.

அனைவரது பங்களிப்பும் சிறப்பாக இருக்கிறது. ரஞ்சித் சஜீவ் நடிப்பில் இன்னும் கொஞ்சம் வேரியசன் இருந்திருக்கலாம். விஜய்யின் கேமராவும், அபி சால்வின் தாமஸின் இசையும் படத்தை எங்கேஜிங்காக மாற்றுவதில் பெருமளவு உதவியிருக்கிறது. மகேஷ் புவன் ஆனந்தின் கத்தரியில் காட்சிகள் நச்சென நறுக்கப்பட்டிருப்பது அடுத்தடுத்த காட்சிகளைப் பார்ப்பதற்கான ஆவலைத் தூண்டுகிறது.

க்ரைம் த்ரில்லர் படங்களை விரும்புகிறவர்கள் மட்டுமின்றி, அனைவருமே ரசித்துப் பார்க்கும் ஒரு சிறப்பான திரை அனுபவத்தை இந்தப்படம் தருகிறது. அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் இப்படம் காணக்கிடைக்கிறது. இனி அலுவலகம் சென்று பயோமெட்ரிக் வைக்கும்போது உண்டாகப்போகும் ஒருவித தயக்கம்தான் இந்த ‘கோளம்’ திரைப்படம்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஓடிடி களம்

3 hours ago

ஓடிடி களம்

3 days ago

ஓடிடி களம்

4 days ago

ஓடிடி களம்

5 days ago

ஓடிடி களம்

5 days ago

ஓடிடி களம்

10 days ago

ஓடிடி களம்

13 days ago

ஓடிடி களம்

16 days ago

ஓடிடி களம்

17 days ago

ஓடிடி களம்

18 days ago

ஓடிடி களம்

18 days ago

ஓடிடி களம்

24 days ago

ஓடிடி களம்

26 days ago

ஓடிடி களம்

26 days ago

ஓடிடி களம்

26 days ago

மேலும்