பிருந்தா - த்ரிஷாவின் அறிமுக சீரிஸ் சுவாரஸ்யம் தந்ததா? | ஓடிடி திரை அலசல்

By கலிலுல்லா

காலத்துக்கேற்ற திரை வடிவங்களில் தன்னை தகவமைத்துக் கொள்ளும் கலைஞர்களின் திரை ஆயுள் என்பது நீளக்கூடியது. அந்த வகையில் திரைப்படங்களில் இருந்து தற்போது ஓடிடிக்கு நகர்ந்திருக்கிறார் த்ரிஷா. அவரின் முதல் வெப் சீரிஸ் ‘பிருந்தா’ தெலுங்கில் உருவான இந்தத் தொடர் சோனி லிவ் ஓடிடியில் காணக் கிடைக்கிறது. குறை சொல்ல முடியாத தமிழ் டப்பிங்குடன் வெளியாகியுள்ளது.

இருளடங்கிய நேரத்தில் ஊர் மக்கள் திரண்டு நின்று கொண்டிருக்கிறார்கள். ‘பெண் குழந்தையை பலியிட்டால் தான் கடவுளின் கோபம் தணியும்’ என்கிறார் அங்கிருக்கும் சாமியார். எந்தக் குழந்தை என்பதையும் கைகாட்டி சொல்லிவிடுகிறார் அவர். சுற்றியிருக்கும் ஊர் மக்களிடம் அந்தக் குழந்தையின் தாய் மன்றாடிக் கெஞ்சுகிறார். இரவோடு இரவாக ஈரமில்லாத அந்த ஊரிலிருந்து தப்பிச் செல்ல முயன்று தன் குழந்தையை லாரியில் ஏற்றி அனுப்பிவிடுகிறார் அந்தத் தாய். ஆனால், அவர் கொல்லப்படுகிறார். கட் செய்தால் தெலங்கானாவின் காவல் நிலையம் ஒன்றில் எஸ்.ஐ ஆக வேலை பார்த்து வருகிறார் பிருந்தா (த்ரிஷா).

ஒருவித மன அழுத்தத்தில் இருக்கும் அவர் சக பணியாளர்களிடம் அதிகம் பேசாமல் வேலையை மட்டும் கவனிக்கிறார். இப்படியான சூழலில், திடீரென ஒரு நாள் குளத்தில் பிரேதம் ஒன்று மிதப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைக்கிறது. காவல் ஆய்வாளர் அதனை தற்கொலை என்று சுருக்க, இல்லை அது கொலை என திட்டவட்டமாக மறுக்கிறார் த்ரிஷா. அவர் கூறியது போலவே கொலை என நிரூபணமாக அடுத்தடுத்து இதே பாணியில் ‘சீரியல்’ கொலை அரங்கேறுவதைக் கண்டு அலறுகிறது காவல் துறை. ஒருகட்டத்தில் அது சீரியல் கொலை அல்ல, கும்பல் கொலைகளும் அரங்கேற்றப்படுகின்றன என விசாரணையில் தெரிய வர, யார் இதனை செய்கிறார்கள்? எதற்காக செய்கிறார்கள்? பின்னணி என்ன? - இதுவே திரைக்கதை. மொத்தம் 8 எபிசோடுகள். ஒவ்வொன்றும் கிட்டத்தட்ட 40 நிமிடங்கள் நீளமுடையது.

வித்தியாசமான முறையில் அரங்கேறும் தொடர் கொலைகள். அதற்கு பின்னணியில் ஒரு சைக்கோ கொலைகாரன். ஒவ்வொரு நூலாக பிடித்து அவரை நெருங்கும் காவல் துறை, இறுதியில் அதற்கான காரணம் என 100 வெப் சீரிஸ்கள் வெளியாகியுள்ளன. ஆனால், எடுத்துக்கொள்ளும் கதைக்கரு மட்டுமே இத்தகைய வெப் சீரிஸ்களிலிருந்து தனித்து நிற்கும். அதன்படி, கடவுளின் பெயரால் நிகழ்த்தப்படும் ‘மூடநம்பிக்கைகள்’ குறித்து அழுத்தமான கேள்வி எழுப்புகிறது இந்த வெப் சீரிஸ்.

கொலைகள், அதில் மறைந்திருக்கும் மர்மங்கள், சூடுபிடிக்கும் விசாரணை, மையக்கதையில் இருந்து விரியும் கிளைக்கதைகள், ஒன்றுக்கும் மற்றொன்றுக்குமான தொடர்பு, அதன் வழியே பயணிக்கும் திரைக்கதையால் ஒவ்வொரு எபிசோடும் விறுவிறுப்பாகவே நகர்கிறது. ஆனால், பின்னணியை விவரிக்கும் கடைசி 2 எபிசோடுகளின் நீளம் அயற்சி. அனைத்து மதங்களிலும் மூட நம்பிக்கைகள் வேர்விட்டு ஆலமரமாக வளர்ந்திருப்பதை சுட்டிக்காட்டியிருப்பது சிறப்பு. ஆனால், அதனை பொருத்தமான காரணங்களுடன் சொல்லியிருக்கலாம் என்பதை மொத்த தொடர் முடிவிலும் உணர முடிகிறது.

தவிர, சஸ்பென்ஸ் க்ரைம் த்ரில்லர் என்ற கதைக்களத்தில் அறிமுக இயக்குநர் சூர்யா மனோஜ் வாங்கலா ‘பாலின அசமத்துவம்’ பற்றியும் பேசியிருப்பது கவனிக்க வைக்கிறது. சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் பெண் போலீசாக த்ரிஷா எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பேசப்பட்டுள்ளன. அதேசமயம் த்ரிஷா ‘நாயகி’ என்ற ஒரே காரணத்தினால் அவரே எல்லாவற்றையும் கண்டுபிடித்து தீர்வு காண்பது திகட்டும் ‘ஷீரோயிசம்’. தொடரில் சில இடங்களில் வரும் திருப்பங்களும், எதிர்பாராத கனெக்‌ஷன்ஸும் சுவாரஸ்யத்தை கூட்டுகின்றன.

இதற்கு முன்பு தமிழில் வெளியான ‘அயலி’ தொடர் சமூகத்தில் நிலவும் மூட நம்பிக்கைகளை காத்திரமாக விமர்சித்தது. அதே கருவைக் கொண்ட ‘பிருந்தா’ தொடர் பாதிக்கப்பட்டவர்களை குற்றவாளிகளாக்கி ‘சைக்கோ’ என எதிர்மறையில் காட்சிப்படுத்தியிருப்பது நெருடல். காட்சிகளுடன் பயணிக்கும் சக்தி காந்த் கார்த்திக்கின் பின்னணி இசையும், தினேஷ் கே பாபுவின் நேர்த்தியான ஒளிப்பதிவும் பலம்.

கடந்த கால கசப்பனுபவங்களையும், ஏதோ ஒன்றை தொலைத்த மனநிலையையும் உணர்வுகளில் கச்சிதமாக வெளிப்படுத்துகிறார் த்ரிஷா. காவல் துறை கதாபாத்திரத்தில் மேலதிகாரியால் பிரச்சினைகளை எதிர்கொள்ளும்போது தக்க சமயத்தில் பதிலடி கொடுத்து ‘ராங்கி’யாக மிரட்டுகிறார். அவருக்கான சண்டைக்காட்சி மட்டும் தாமரையில் விழுந்த தண்ணீர். உடன் பயணிக்கும் காவலராக ரவீந்திர விஜய், நெகிழ்வான காட்சி ஒன்றில் உடைந்து அழும்போது கலங்கடிக்கிறார்.

அப்பாவித்தனமும், மூர்க்கமும் கலந்த கதாபாத்திரத்தில் ஆனந்த் சாமியின் நடிப்பு அபாரம். இந்திரஜித் சுகுமாறனின் அமைதியான வில்லத்தனம் கவனிக்க வைக்கிறது. ஜெயப்பிரகாஷின் பக்குவமான நடிப்பு ஏற்ற பாத்திரத்துடன் பொருந்துகிறது. மேலும், குழந்தைகள் கதாபாத்திரத்தில் நடித்தவர்கள் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

பெரிய அளவில் எங்கும் போராடிக்காமல் கதையின் போக்கிலே நகரும் தொடர் சில இடங்களில் மட்டும் தெலுங்கு வாசனை நுகர வைக்கிறது. கிராமத்து காட்சிகள் யதார்த்தத்துடன் படமாக்கப்பட்டுள்ளன. மொத்தமாக, சோனி லிவ் ஓடிடியில் வெளியாகியிருக்கும் இந்தத் தொடர் த்ரிஷா ரசிகர்களுக்கும், க்ரைம் த்ரில்லர் விரும்பிகளுக்கும் ஏற்ற தீனி. மற்றபடி பேசப்பட வேண்டிய கதைக்கருவைக் கொண்ட மோசமில்லாத முயற்சி!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஓடிடி களம்

2 hours ago

ஓடிடி களம்

1 day ago

ஓடிடி களம்

2 days ago

ஓடிடி களம்

2 days ago

ஓடிடி களம்

7 days ago

ஓடிடி களம்

10 days ago

ஓடிடி களம்

13 days ago

ஓடிடி களம்

14 days ago

ஓடிடி களம்

15 days ago

ஓடிடி களம்

15 days ago

ஓடிடி களம்

21 days ago

ஓடிடி களம்

23 days ago

ஓடிடி களம்

23 days ago

ஓடிடி களம்

23 days ago

ஓடிடி களம்

24 days ago

மேலும்