2019-ஆம் ஆண்டு வெளியாகி உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்ற தொடர் ‘தி பாய்ஸ்’. கரோனா காலகட்டத்தில் பொழுதை போக்குவதற்காக ஓடிடி தொடர்களில் தஞ்சம் புகுந்தவர்கள் பலரும் இத்தொடரின் சுவாரஸ்யமான திரைக்கதையால் ஈர்க்கப்பட்டனர். இதனால், உலகில் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட தொடர்களில் ஒன்றாக மாறியது ‘தி பாய்ஸ்’. அடுத்தடுத்த சீசன்களும் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இதன் நான்காவது சீசன் வெளியாகியுள்ளது.
துணை அதிபர் பதவிக்கு போட்டியிடும் விக்டோரியா நியூமேனை கொல்லும் பொறுப்பை தி பாய்ஸ் குழுவுக்கு சிஐஏ கொடுக்கிறது. இன்னொரு பக்கம் தி பாய்ஸ் குழுவின் தலைவனாக இருந்த பில்லி பட்சர் காம்பவுண்ட் வி எனப்படும் தற்காலிக சூப்பர் ஹீரோவாக மாறும் ரசாயனத்தை எடுத்துக் கொண்டதன் விளைவாக ட்யூமரால் பாதிக்கப்பட்டிருக்கிறார். ஹோம்லேண்டருக்கு ஆலோசனை கூறும் உலகின் அதிபுத்திசாலிப் பெண் சிஸ்டர் சேஜ், உயிருக்குப் போராடும் தந்தையை காப்பாற்ற ‘காம்பவுண்ட் வி’யை நாடும் ஹூயி, ஹோம்லேண்டருக்கும் அவரது மகன் ரையானுக்கும் இடையிலான போராட்டம் என பல கதைகளை அலசுகிறது இந்த நான்காவது சீசன்.
உலகைக் காக்கும் சூப்பர் ஹீரோக்கள் அயோக்கியர்களாக இருந்தால் என்ன ஆகும்? இதுதான் ‘தி பாய்ஸ்’ தொடரின் ஒன்லைன். இதை மையமாக வைத்து ஒவ்வொரு சீசனிலும் சுவாரஸ்யமான திரைக்கதை, விறுவிறுப்பான சில காட்சிகளின் மூலம் ரசிகர்களின் ஃபேவரிட் தொடர்களில் ஒன்றாக மாறியுள்ளது இத்தொடர். அந்த வரிசையில் இந்த சீசனிலும் சில மறக்கமுடியாத ‘அட்டகாச’ எபிசோட்கள் இருந்தாலும் சில ஏமாற்றங்களும் இருக்கத்தான் செய்கின்றன என்பதை மறுக்கமுடியாது.
இந்த சீசன் தொடங்குவதே மூன்றாவது எபிசோடுக்கு மேல்தான் எனலாம். அந்த அளவுக்கு சீசனின் தொடக்கம் பெரியளவில் ஈர்க்கத் தகுந்த அம்சங்கள் எதுவுமின்றி மிக மெதுவாகத்தான் நகர்கிறது. பில்லி பட்சரின் ட்யூமர், தி பாய்ஸ் குழுவுக்கு அவருக்குமிடையிலான விரிசல், ஹூயி-ன் அப்பாவின் உடல்நிலை என இதே காட்சிகளே திரும்ப திரும்ப காட்டப்படுகின்றன.
» திகில் காட்சிகளின் நடுவே ‘குபீர்’ காமெடி - 'Stree 2' ட்ரெய்லர் எப்படி?
» ஹிப்ஹாப் ஆதி இயக்கி நடிக்கும் ‘கடைசி உலகப் போர்’ - முதல் தோற்றம் வெளியீடு
நான்காவது எபிசோடில் ஹோம்லேண்டர் தான் பால்ய காலத்தில் அடைக்கப்பட்டிருந்த ஆய்வகத்துக்கு செல்லும் எபிசோடிலிருந்து சீசன் சூடுபிடிக்க்றது. அந்த எபிசோட்தான், ‘தி பாய்ஸ்’ ரசிகர்களுக்கு உண்மையான தீனி என்று சொல்லும் அளவுக்கு அடுத்து என்ன நடக்கும் என்ற பதைபதைப்புடன் நகர்கிறது. இதன் பிறகு அடுத்தடுத்த எபிசோட்களும் சூப்பர் ஹீரோக்களை கொல்லும் வைரஸ், ஹோம்லேண்டர் கஸ்டடியில் இருக்கும் காம்பவுண்ட் வி-யை ஏ-ட்ரெய்ன் திருடுவது என புல்லட் வேகத்தில் நகர்கின்றன.
இந்த சீசனின் உச்சம் என்றால், அது மார்வெல் ஸ்பைடர்மேனை நகலெடுத்து உருவான ‘வெப்வீவர்’ கதாபாத்திரமும் அதை தொடர்ந்து காட்சிகளும்தான். பேட்மேனை கலாய்த்து உருவாக்கப்பட்ட டெக் நைட் என்ற சூப்பர் ஹீரோவின் குகையில் நடக்கவும் சம்பவங்கள் எல்லாம் அருவருப்பு மிகுந்த ‘குபீர்’ ரகம்.
இந்த சீசனின் பிரச்சினை என்னவென்று பார்த்தால், அது இத்தொடர் தொடங்கியபோது எங்கு நின்றதோ அங்கேயே இன்னும் நின்றுகொண்டிருப்பதுதான். ரசிகர்கள் எதிர்பார்ப்பது ‘கெட்ட’ சூப்பர்மேன் போன்ற கதாபாத்திரமான ஹோம்லேண்டரும், அவரை அழிக்க துடிக்கும் பில்லி பட்சரும் நேருக்கு நேர் மோத வேண்டும் என்பதுதான். ஆனால் இந்த சீசனிலும் அப்படி ஒரு காட்சி கூட இல்லாதது பெரும் ஏமாற்றம்.
கடைசி வரை தி பாய்ஸ் குழுவால் ஹோம்லேண்டரை நெருங்க கூட முடியாதது நெருடல். என்னதான் வில்லன் வலிமையான ஆளாக இருந்தாலும் ஹீரோவுடன் மோதும்போதுதானே அது பார்ப்பவர்களுக்கு அடுத்தது என்ன என்ற எதிர்பார்ப்பை உருவாக்கும். அப்படி எந்த காட்சிகளும் இந்த சீசனில் இல்லை.
முந்தைய சீசன்களில் மார்வெல், டிசி சூப்பர் ஹீரோக்களையும் அதன் திரைப்படங்களையும் கலாய்த்து தள்ளிய ‘தி பாய்ஸ்’ தொடர், இந்த சீசனில் கொஞ்சம் அல்ல சற்று அதிகமாகவே அமெரிக்க அரசியலை கையில் எடுத்துள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த பரபரப்பான சூழலில் வெறுப்பு பிரச்சாரங்கள் குறித்து ‘தி பாய்ஸ்’ பேசும் கருத்துகள் முக்கியமானவை. இதனாலோ என்னவோ எப்போதும் இல்லாத வகையில் கடைசி எபிசோடில் ‘இவை முற்றிலும் கற்பனையே’ என்ற டிஸ்க்ளைமரை படக்குழு இடம்பெறச் செய்திருக்கிறது.
ஹோம்லேண்டர் - பில்லி பட்சர் நேரடியாக மோதிக் கொள்ளும் காட்சிகளை எதிர்பார்த்த ரசிகர்களுக்கு சிறிய ஏமாற்றம் இருந்தாலும், சில அட்டகாசமான காட்சிகளாலும், அடுத்த சீசனுக்கான எதிர்பார்ப்பை தூண்டும் இறுதி எபிசோடாலும் மீண்டும் ஒருமுறை முத்திரை பதித்திருக்கிறது ‘தி பாய்ஸ்’ சீசன் 4. இத்தொடர் அமேசான் ப்ரைம் தளத்தில் தமிழிலும் காணக் ஒன்கிடைக்கிறது
முக்கிய செய்திகள்
ஓடிடி களம்
10 hours ago
ஓடிடி களம்
1 day ago
ஓடிடி களம்
1 day ago
ஓடிடி களம்
2 days ago
ஓடிடி களம்
3 days ago
ஓடிடி களம்
4 days ago
ஓடிடி களம்
7 days ago
ஓடிடி களம்
8 days ago
ஓடிடி களம்
9 days ago
ஓடிடி களம்
9 days ago
ஓடிடி களம்
14 days ago
ஓடிடி களம்
17 days ago
ஓடிடி களம்
20 days ago
ஓடிடி களம்
21 days ago
ஓடிடி களம்
22 days ago