இளம் வயது மனைவியிடம் மிருகத்தனமாக நடந்து கொள்வதை வழக்கமாகக் கொண்ட பணக்கார கணவர் ஒருநாள் எதிர்பாராத விபத்தில் சிக்கி படுத்தப் படுக்கை ஆகிறார். இந்தச் சூழலைத் தனக்கு சாதகமாக்கி அந்த இளம் மனைவி ஆடியிருக்கும் சதுரங்க ஆட்டம்தான் இந்தப் படத்தின் ஒன்லைன்.
வினய் தாமஸ் உடன் இணைந்து எழுதி, இயக்குநர் சித்தார்த் பரதன் இயக்கியிருக்கும் திரைப்படம் 'சதுரம்'. வரம்பு மீறிய உறவை அடிப்படையாகக் கொண்ட க்ரைம் டிராமா இது. படத்தின் தொடக்கம் முதல் இறுதிக் காட்சி வரை படத்தை எங்கேஜிங்காக நகர்த்தியிருக்கிறார் இயக்குநர். மொத்தமே 10 கதாபாத்திரங்களை வைத்துக் கொண்டு இரண்டரை மணி நேரம் போரடிக்காமல் கதை சொன்ன விதம் சிறப்பு.
எளிதில் ஊகிக்கக்கூடிய காட்சிகள்தான் அடுத்து வரப்போகிறது என்றாலும், அவை படம் பார்க்கும்போது பெரிய உறுத்தலாக இல்லை. ஆபத்தில் இருக்கும் ஒரு பெண்ணுக்கு உதவ முன்வருபவர்களின் உண்மையான முகம் என்னவாக இருக்கும் என்பதை இயக்குநர் ஒளிவு மறைவின்றி எடுத்துக் காட்டியிருக்கிறார். அழகும் அறிவும் கொண்ட துணிச்சலான பெண் ஒருத்தியின் காதல், காமம், பழியுணர்சியை நாலாபுறமும் சமமாகப் பிரித்து இயக்குநர் சித்தார்த் பரதன் கட்டியெழுப்பியது தான் இந்த 'சதுரம்'.
கேரள மாநிலத்தில் வசிக்கும் வயதான பணக்காரர் எல்தோ (அலென்சியர்). இவர் வயதில் தன்னை விட இளையவரான சலேனாவை (சுவாசிகா) திருமணம் செய்து கொள்கிறார். தனது இளம் மனைவியை மலைப் பிரதேசத்தில் இருக்கும் தனக்குச் சொந்தமான எஸ்டேட்டுக்கு அழைத்துச் செல்கிறார். அங்குதான், சலேனா எல்தோவின் உண்மையான சுயரூபத்தைப் பார்க்கிறார். எல்தோவின் இரக்கமற்ற, மூர்க்கத்தனமான நடவடிக்கைகள், சலேனாவின் வாழ்க்கை சூன்யமாகிப் போனதை அவளுக்கு உணர்த்துகிறது. மேலும், சின்ன சின்ன விஷயங்களுக்காக ரத்தம் கட்டிப்போகும் அளவுக்கு தாக்கப்படுவதோடு, அவளது விருப்பமில்லாமல், பாலியல் ரீதியான துன்புறுத்தல்களையும் அனுபவிக்கிறாள்.
» துல்கர் சல்மானின் ‘லக்கி பாஸ்கர்’ செப்.7-ல் ரிலீஸ்!
» பாடகர் ஜெயச்சந்திரன் உடல்நிலை பற்றி வதந்தி: குடும்பத்தினர் விளக்கம்
இப்படியாக செல்லும் வாழ்க்கையில், சலேனாவுக்கு எஸ்டேட்டை சுற்றிக் காட்டுவதற்காக எல்தோ அழைத்துச் செல்கிறார். அப்போது நிகழும் எதிர்பாராத விபத்தில், தலையில் பலத்த காயம்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் எல்தோ, கை, கால்கள் முடங்கி படுத்தப் படுக்கையாகி விடுகிறார். அவரை கவனித்துக் கொள்வதற்காக பல்தஸர் (ரோஷன் மேத்யூ) என்ற ஹோம் நர்ஸ் ஒருவரை சலேனா பணியமர்த்துகிறார். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை குவிந்து கிடக்கும் சொத்துகள், நடைபிணமாக கிடக்கும் கணவன், அவள் கண்களின் அசைவைப் பார்த்து செயல்பட காத்துக்கிடக்கும் ஹோம் நர்ஸான இளைஞன் என இந்த மொத்த சூழலையும், மனிதர்களையும் எப்படி சலேனா தனக்கானதாக மாற்றிக் கொள்கிறாள்? சலேனாவின் கணவர் என்ன ஆனார்? அவருடைய சொத்துகள் சலேனாவுக்கு வந்தடைந்ததா? இல்லையா? - இந்தக் கேள்விகளுக்கான விடைகள்தான் படத்தின் திரைக்கதை.
இந்தப் படத்தின் பலமே 'சலேனா' கதாப்பாத்திரத்தில் வரும் சுவாசிகா, ஓர் இளம் வயது மனைவியின் ஆசைகள், விருப்பங்கள், ஏக்கங்களைச் சுமப்பவராகவும், குரூரமான கணவனின் வக்கிரம், வன்முறை, சுரண்டலின் ரணங்களை அனுபவிப்பவராகவும், படத்தின் முதல் முப்பது நிமிடங்கள் விதவிதமான பாவங்களை வெளிக்காட்டி ஸ்கோர் செய்திருக்கிறார். அதேபோல, சுவாசிகா மது அருந்தும் காட்சிகள் படம் பார்ப்பவர்களை தள்ளாட வைக்கிறது. சுவாசிகாவின் அழகும் பொலிவும் படம் பார்ப்பவர்களின் கண்களை களவாடிக் கொள்கிறது. தான் நினைத்ததை சாதிக்க எந்த விளிம்புக்கும் செல்லத் துணியும் துணிச்சலான, புத்திக்கூர்மை கொண்ட அழகான இளம் மனைவி கதாப்பாத்திரத்தில் சிறப்பான பங்களிப்பைத் தந்திருக்கிறார் சுவாசிகா.
அவரது கதாப்பாத்திரத்துக்கு ஏற்ற துணை பங்களிப்பைச் செய்து சிறப்பித்திருக்கிறார் ரோஷன் மேத்யூ. ஒரு ஹோம் நர்ஸ், வெளிநாடு செல்லத் துடிக்கும் இளைஞன், சபலத்தால் சிக்கிக் கொள்ளும் சூழ்நிலைக் கைதியென தனக்கான சின்ன சின்ன இடங்களை எல்லாம் அவருக்கே உரிய பாணியில் அசத்தியிருக்கிறார். செய்த தவறை நினைத்து மனதுருகி அழும் காட்சிகளில் ரோஷன் மேத்யூ நம்மை ஈர்க்கிறார். இவர்கள் தவிர அலைன்ஸர், ஜாபர் இடுக்கி மற்றும் வக்கீல், பணிப்பெண் உட்பட அனைவரும் தங்களது பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர். பிரதீஷ் வர்மாவின் ஒளிப்பதிவும், பிரஷாந் பிள்ளையின் இசையமைப்பும், தீபு ஜோசப்பின் கட்ஸும் படத்துக்கு தொழில்நுட்ப ரீதியாக வலு சேர்த்திருக்கிறது.
மனித சமூகம் நாள்தோறும் கடந்து செல்லும் பத்திரிகை செய்தியான வரம்பு மீறிய உறவின் தொடக்கப் புள்ளியை பட்டும் படாமலும் பேசுகிறது இத்திரைப்படம். இப்படத்தில் வரும் முக்கியமான ஆண் கதாப்பாத்திரங்கள் குரூரர்களாகவும், சபல புத்தி கொண்டவர்களாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளனர். நிம்மதியாகவும் நேர்மையாகவும் வாழ்வதற்கு எத்தனையோ வழிகள் இருந்தும், படத்தின் நாயகி எடுக்கும் முடிவு ஒருபோதும் ஏற்புடையதல்ல. இருந்தாலும், க்ரைம் த்ரில்லர் படங்களை விரும்பி பார்ப்பவர்கள் மிஸ் பண்ணாமல் பார்க்க வேண்டிய படங்களில் ஒன்று இந்த 'சதுரம்' திரைப்படம்.
அதேநேரம் இது வயது வந்தோருக்கான படம். குழந்தைகளுடன் பார்ப்பதைத் தவிர்க்கவும். படத்தில் மருத்துவ ரீதியான வன்முறைக் காட்சிகளும் உண்டு. எனவே, அத்தகைய காட்சிகளை விரும்பாதவர்கள் இந்தப் படத்தை தவிர்ப்பது நல்லது. 2022-ல் திரையரங்குகளில் வெளியான இத்திரைப்படம், மலையாளப் படங்களை அதிகமாக வெளியிடும் ஓடிடி தளமான Saina play ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.
முக்கிய செய்திகள்
ஓடிடி களம்
5 hours ago
ஓடிடி களம்
3 days ago
ஓடிடி களம்
4 days ago
ஓடிடி களம்
4 days ago
ஓடிடி களம்
5 days ago
ஓடிடி களம்
9 days ago
ஓடிடி களம்
11 days ago
ஓடிடி களம்
13 days ago
ஓடிடி களம்
16 days ago
ஓடிடி களம்
20 days ago
ஓடிடி களம்
21 days ago
ஓடிடி களம்
23 days ago
ஓடிடி களம்
25 days ago
ஓடிடி களம்
27 days ago
ஓடிடி களம்
1 month ago