Guruvayoor Ambalanadayil: பிருத்விராஜ் - பசில் ஜோசப் காம்போவின் காமெடி கலாட்டா | ஓடிடி திரை அலசல்

By கலிலுல்லா

துபாயில் பணிபுரிந்துவரும் வினு (பசில் ஜோசப்) மற்றும் அஞ்சலி (அனஸ்வரா ராஜன்) ஆகியோரின் திருமண ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. காதல் தோல்வியிலிருக்கும் வினுவை தேற்றி திருமணத்துக்கு தயார் செய்தது, அவருக்கு ஆதரவாக இருப்பது உள்ளிட்ட காரணங்களால், அஞ்சலியின் அண்ணன் ஆனந்தன் (பிருத்விராஜ்) மீது அளவு கடந்த அன்பும் மரியாதையும் வைத்திருக்கிறார் வினு. மேலும், ஆனந்தனிடமிருந்து பிரிந்த அவரது மனைவியை மீண்டும் அவருடன் சேர்க்க முயற்சித்து அதிலும் வெற்றி பெறுகிறார். ஆகவே ஆனந்தன் - வினு இருவர்களுக்கிடையிலான உறவு பசை போல இறுக்கமாக ஒட்டிக்கிடக்கிறது.

துபாயிலிருந்து கேரளா வரும் வினு, ஆனந்தனை மகிழ்ச்சியுடன் சந்திக்கிறார். ஆனால், அதன் பிறகு நிகழும் திருப்பம் ஒன்றினால் இருவரும் மோதிக்கொள்கின்றனர். இதனால், திருமணம் நடப்பதே கேள்விக்குறியாகிறது. இருவரின் மோதலுக்கு காரணம் என்ன? இறுதியில் பிரச்சினைகளைத் தாண்டி அஞ்சலியை வினு கரம் பிடித்தாரா என்பதுதான் திரைக்கதை. மலையாள படமான இது டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் தமிழிலும் காணக்கிடைக்கிறது.

திருமணம் மற்றும் அதைச்சுற்றி நடக்கும் நிகழ்வுகளை முடிந்த வரை ஜாலியாக கொடுக்க முயன்றிருக்கிறார் ‘ஜெய ஜெய ஜெய ஜெய ஹே’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் விபின் தாஸ். தன்னளவில் பிரச்சினைகளைக் கொண்ட இரண்டு கதாபாத்திரங்கள், அவர்களின் உரையாடல்கள், கோமாளித்தனங்கள், அவர்களால் பாதிக்கப்படும் பெண்கள் என இரண்டு ஆண்களுக்கிடையிலான மோதல்களால் உருவெடுக்கும் திரைக்கதை பெரும்பாலும் போராடிக்காமல் நகர்கிறது.

குறிப்பாக தமிழில் வெளியான சுந்தர்.சியின் ‘உள்ளத்தை அள்ளித்தா’ படத்தில் இடம்பெற்ற ‘அழகிய லைலா’ பாடலை வெட்டி ஆங்காங்கே தூவி விட்டிருப்பதும், பார்வையாளர்களுக்கு வெளிப்படுத்திவிட்டு, அதன் பிறகு கதாபாத்திரங்கள் உணரும் அந்த ட்விஸ்ட் ஆகியவை ரசிக்க வைக்கிறது.

இயல்புத்தன்மையுடன் நகைச்சுவை திணிக்காமல் போகிற போக்கில் எழுதியிருந்த விதம், திருமணத்தை நிறுத்த நடக்கும் நாடகங்கள், துணை கதாபாத்திரங்கள் செய்யும் சேட்டைகள், யோகிபாபுவின் என்ட்ரி களத்தை சுவாரஸ்யமாக்கி கொடுத்துள்ளது. பிருத்விராஜ் - பசில் ஜோசப் இருவருக்குமான கெமிஸ்ட்ரி படத்துக்கு பெரும் பலம். தன்னுடைய முந்தையப் படத்தில் திருமண முறையையும், அதில் பாதிக்கப்படும் பெண்களின் நிலையையும் அழுத்தமாக பதிவு செய்திருந்த இயக்குநர் விபின் தாஸ், இம்முறை தீபு பிரதீப் எழுத்தில் காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து பிரச்சினைகளை மேலோட்டமாக பேசியிருக்கிறார்.

பெண்களை மையப்படுத்திய கதையில் அவர்களின் மன ஓட்டங்களை பதிவு செய்ய தவறுகிறது படம். மறுபுறம் தங்கள் மீதான குறைகளை மறைக்க, பெண்களைக் குற்றப்படுத்தும் ஆண்களை வினு கதாபாத்திரத்தின் மூலம் காட்சிப்படுத்தியிருப்பது கவனிக்க வைக்கிறது.

‘ப்ரோ டாடி’ படத்துக்குப் பிறகு முழு நீள நகைச்சுவையில் ஈர்க்கிறார் பிருத்விராஜ். மனைவியை மீண்டும் அழைத்துச்செல்ல வரும் காட்சி, ஆங்காங்கவே வெளிப்படுத்தும் கச்சிதமான டைமிங் காமெடி, இறுதியில் கொஞ்சம் ஆக்ஷன் என வெகுஜன ரசனைக்கு தீனிபோடும் கதாபாத்திரத்தில் ஸ்கோர் செய்கிறார்.

அப்பாவியான முகத்தோற்றம் கொண்ட பசில் ஜோசஃப்பின் சின்ன சின்ன ரியாக்‌ஷன்கள் கூட எளிதான புன்னைக்க வைக்கின்றன. அவரது ஆக்ரோஷ ட்ரான்ஸ்ஃபமேஷன், எதிர்பாராத திருப்பத்தின்போது கொடுக்கும் ரியாக்‌ஷன்ஸ், திருமணத்தை நிறுத்த செய்யும் கேமாளித்தனங்களால் சார்ந்த கதாபாத்திரத்துக்கு நடிப்பால் நியாயம் சேர்க்கிறார்.

சொல்ல முடியாத சோகத்தை தன்னகத்தே கொண்ட பெண்ணை தேர்ந்த நடிப்பால் பிரதிபலிக்கிறார் நிகிலா விமல். ஆனால், அந்த கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் இல்லாதது நெருடல். அழகில் ஈர்க்கும் அனஸ்வரா ராஜனுக்கு நடிப்பில் பெரிய வேலையில்லை. மலையாளத்தில் யோகிபாபுவுக்கு இது முதல் படம். தன்னுடைய வழக்கமான உடல்மொழியால் சொன்னதை செய்திருக்கும் அவர், சில இடங்களில் புன்முறுவலுக்கு உத்தரவாதம் கொடுக்கிறார். மற்ற துணை கதாபாத்திரங்கள் எழுதப்பட்ட விதமும், நடிப்பும் திரையோட்டத்தை சோர்வடையாமல் பார்த்துக்கொள்கின்றது.

அன்கித் மேனன், டப்ஸி இசையில் பாடல்கள் கவரவில்லை. பின்னணி இசை தேவையான உணர்வையும், எனர்ஜியையும் கடத்துகிறது. நீரஜ் ரவியின் ஒளிப்பதிவில் குவாலிட்டியான காட்சிகளும், ஜான்குட்டியின் நேர்த்தியான தொகுப்பும் படத்துக்கு பலம். பெரிய அளவில் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் ஜாலியாக பார்த்து சிரிக்க ஒருமுறை ‘குருவாயூர் அம்பலநடைக்கு’ பயணிக்கலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஓடிடி களம்

3 hours ago

ஓடிடி களம்

1 day ago

ஓடிடி களம்

2 days ago

ஓடிடி களம்

2 days ago

ஓடிடி களம்

7 days ago

ஓடிடி களம்

10 days ago

ஓடிடி களம்

13 days ago

ஓடிடி களம்

14 days ago

ஓடிடி களம்

15 days ago

ஓடிடி களம்

15 days ago

ஓடிடி களம்

21 days ago

ஓடிடி களம்

23 days ago

ஓடிடி களம்

23 days ago

ஓடிடி களம்

23 days ago

ஓடிடி களம்

24 days ago

மேலும்