Sweet Tooth Season 3: நிதானமும் நெகிழ்ச்சியும் கொண்ட இறுதி சீசன் எப்படி? | ஓடிடி திரை அலசல்

By சல்மான்

ஒரு மிகப் பெரிய ஆட்கொல்லி வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவுகிறது. இன்னொருபுறம் மிருகங்களின் உருவத்துடன் குழந்தைகள் பிறக்கின்றன. தன் தந்தையுடன் காட்டில் வளரும் கஸ் என்ற மானின் கொம்புகள் கொண்ட சிறுவன், பின்பு தந்தையை இழந்து தனியாகிறான். காட்டுக்கு வரும் ஜெப் என்ற மனிதனின் உதவியுடன் தன் தாயை கண்டுபிடிக்கும் பயணத்தை தொடங்குகிறான்.

உலகை புரட்டிப் போட்ட வைரஸுக்குக் காரணம் மனித உருவத்துடன் பிறக்கும் ஹைப்ரிட் குழந்தைகள் தான் என்று என்று அவர்களை தேடித் தேடி கொல்கின்றது ‘தி லாஸ்ட் மென்’ என்ற மனிதக் கூட்டம். இதுதான் ‘ஸ்வீட் டூத்’ முதல் இரண்டு சீசன்களின் அடிநாதம்,

தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது சீசனில், தன் தாய் பேர்டி அலாஸ்காவில் இருப்பதை தெரிந்து கொள்ளும் கஸ், ஜெப் மற்றும் தன் நண்பர்களுடன் இணைந்து அலாஸ்கா செல்வதற்கான பயணத்தில் இறங்கிறான். முந்தைய சீசனில் தி லாஸ்ட் மென் கூட்டத் தலைவன் அபாட் இறந்துவிடவே, இப்போது ஹைப்ரிட் குழந்தைகளைக் கொல்லும் படலத்தை கையில் எடுத்திருக்கிறார் ஸாங் (Zhang) என்ற பெண்.

கஸ் தனது கனவில் தோன்றும் குகைக்குச் சென்று அங்கு என்ன இருக்கிறது என்று தெரிந்து கொள்ள விரும்புகிறான். கஸ்ஸை கொல்வதன் மூலம்தான் வைரஸை அழிக்க முடியும் என்று எண்ணுகிறார் ஸாங். அவரிடமிருந்து கஸ் தப்பித்தானா? அவனுடைய நோக்கம் நிறைவேறியதா என்பதை நெகிழ்ச்சியுடன் சொல்லி முடிகிறது ‘ஸ்வீட் டூத் சீசன் 3’.

‘ஸ்வீட் டூத்’ தொடரின் சிறப்பம்சமே மற்ற தொடர்களைப் போல ரத்தம் தெறிக்கும் கோர காட்சிகளோ, ஆபாச வார்த்தைகளோ எதுவுமின்றி அனைவரும் பார்க்கும்வகையில் மனதுக்கு இதமான காட்சியமைப்புகளைக் கொண்டிருப்பதுதான். அது இந்த சீசனிலும் நீடிக்கவே செய்கிறது.

ஆரம்ப எபிசோட்களில் வழக்கத்தை விட நிதானமாக நகரும் காட்சிகள் சற்றே தொய்வடைய வைத்தாலும் போக போக திரைக்கதையின் வேகம் ஜெட் வேகம் எடுக்கிறது. முந்தைய சீசன்களைப் போலவே ஜெப் - கஸ் இடையிலான காட்சிகள் நெகிழ்ச்சிக்கு உத்தரவாதம் தருகிறது. இதில் ஒரு படி கூடுதலாக இறுதி எபிசோட்களில் கஸ் குறித்து ஜெப் பேசும் வசனங்கள் கண்கலங்க வைக்கின்றன.

எனினும் ஜெப், கஸ் தவிர்த்து மற்ற கதாபாத்திரங்கள் பெரிதாக மனதில் பதியும்படி எழுதப்படவில்லை. முந்தைய சீசன்களில் அழுத்தமாக எழுதப்பட்ட டாக்டர் சிங் கதாபாத்திரம் இதில் பெரியளவில் ஈர்க்கவில்லை. அவரிடம் ஏற்படும் திடீர் மாற்றங்களும் பார்ப்பவர்களுக்கு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

இத்தொடரில் குறிப்பிட்டு சொல்லப்படவேண்டிய அம்சம், இறுதி எபிசோடில் கஸ் பேசும் வசனம். மனிதர்களை வெறுக்க வேண்டிய அனைத்துக் காரணங்களும் அவனுக்கு இருந்தும் இதுவரை மனிதர்களை நேசித்து வந்த கஸ், மனிதர்களால் அனைத்தையும் இழந்தபிறகு பேசும் வார்த்தைகள் கண்கலங்க வைத்துவிடுகின்றன. மனிதர்கள் இந்த பூமிக்கு எந்த அளவுக்கு தகுதி அற்றவர்களாக இருந்து வருகிறார்கள் என்ற இயற்கையின் வார்த்தைகளாக அதனை பார்க்கலாம்.

ஹைப்ரிட் குழந்தைகள், நேர்த்தியான கிராபிக்ஸ், கலர்ஃபுல் ஆன ஒளிப்பதிவு, ‘போஸ்ட் அபோகலிப்டிக்’ தன்மைகொண்ட கலை இயக்கம் என வழக்கம்போல கச்சிதமான மேக்கிங்.

மொத்தத்தில் இரண்டு சீசன்களாக நடந்து வந்து இயற்கைக்கும் மனிதனுக்கும் இடையிலான யுத்தம் இந்த சீசனில் சற்றே நிதானமாகவும், நெகிழ்வுப் பூர்வமான காட்சிகளுடன் நிறைவடைந்துள்ளது. நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் இத்தொடர் காணக்கிடைக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE