ONCE UPON A STAR: பின்னணிக் குரல் கலைஞர்களுக்கான வரலாற்று கவுரவம் | ஓடிடி திரை அலசல்

By பால்நிலவன்

மருந்து கம்பெனி ஏற்பாடு செய்து தந்துள்ள பயணத்தின் வழியே ஆங்காங்கே திரையில் படம் ஓட்டிக் காட்டி மக்களை மகிழ்வித்து தங்கள் கம்பெனி மருந்துகளையும் விற்றுச் செல்லும் ஒரு குழுவைப் பற்றிய படம் ‘ஒன்ஸ் அப்பான் எ ஸ்டார்’ (ONCE UPON A STAR).

மருந்து விற்பனைக்காக ஊர் ஊராக பயணிக்கும் சினிமா திரையிடல் குழு ஆங்காங்கே ஸ்கிரீன் கட்டி படம் ஓட்டும்போது கூடவே லைவ் டப்பிங் செய்வார்கள். திரையில் பேசா படம் ஓட... எதிரே டப்பிங் ஸ்கிரிப்ட் வைத்துக்கொண்டு பின்னணிக் குரல் கலைஞர்கள் நிகழ்த்துக் கலையாக பேசி திரைப்படத்திற்குள் நேரடியாக குரல் கொடுப்பார்கள். மக்களும் குரல் கலைஞர்களின் திறமையை கண்டுணர்ந்து சினிமாவைப் பொருத்தி ரசித்து கைதட்டி ஆரவாரிப்பார்கள். இடைவேளையின்போது முக்கிய நோக்கமான மருந்து விற்பனையும் ஜோராக நடக்கும்.

பல கீழ்திசை நாடுகளை ஒப்பிடும்போது நாமெல்லாம் தொழில்நுட்பத்தில் நிறைய வளர்ந்திருக்கிறோம் என்றுதான் சொல்ல வேண்டும். நமது திரைப்படங்களில் 1930களில் டப்பிங் பேசும் முறை இருந்தது. முதன்முதலாக சென்னை எலட்க்ரிக் தியேட்டரில் 1913-ல் படம் திரையிடத் தொடங்கும்போது, டப்பிங், இசைக்குழுவினர் துணையுடன் படம் திரையிட்டார்கள். சென்னை தங்கசாலையில் முதன்முதலாக இயங்கத் தொடங்கிய சினிமா சென்ட்ரல் திரையிரங்கில் 1931ல் முதல் பேசும்படங்களான ஆலம்ஆரா, காளிதாஸ் திரையிடப்படும் வரையிலும் இதே நிலைதான்.

பிறகு தொழில்நுட்பங்கள் பெருகப் பெருக நமது சினிமாக்கள் எவ்வளவோ முன்னேற்றங்களை காணத் தொடங்கின. ஆனால் தாய்லாந்து போன்ற நாடுகள் 1960, 70களில் கூட மிகவும் பின்தங்கிய நிலையிலேயே இருந்தன என்பதை என்பதை 'ஒன்ஸ் அப் ஆன் ய ஸ்டார்' திரைப்படம் நமக்கு எடுத்துக் காட்டுகிறது. இப்படியான சம்பவங்கள் தாய்லாந்து நாட்டில் 50, 60களில் நடந்தது. 70களின் தொடக்கத்தில் சிலகாலம் நடந்தது. இந்த கட்டமைப்பை அடிநாதமாகக் கொண்டு 2.17 மணிநேரப் படமாக எடுத்திருக்கிறார்கள். தாய்லாந்து நாட்டின் பல்வேறு நிலப்பரப்பின் நெடிய பாதைகளில் நாமும் பயணம் செய்கிறோம்.

ஒரு மருந்து விற்பனைக்கான பயண-சினிமா திரையிடல் குழுவில் (Traveling Pharma-Cinema Unit) மனித், மேன் மற்றும் காவ் ஆகிய மூன்று பேர் மட்டுமே இயங்கி வருகின்றனர். அவர்களின் ஒரே நேரடி-டப்பிங் கலைஞரும் குழுவின் தலைவருமான மனித் பெண் கதாபாத்திரங்களின் குரல்களையும் அவரே வழங்கி வருகிறார். அவரது குரல் நடிப்பு பார்வையாளர்களுக்கு பிடித்திருக்கிறது என்றாலும் பெண்குரலை அவரே தரும்போது மட்டும் சில இடங்களில் அது பார்வையாளர்கள் மத்தியில் கேலி கிண்டலை உருவாக்குகிறது. குறைவான வருவாயில் அவர்களது பயணக்குழு சற்றே போராடி வருகிறது. அதனால் பெண் டப்பிங் கலைஞரை நியமனம் செய்ய நிறுவனம் ஏற்கெனவே அனுமதி மறுத்துள்ளது.

நிறுவனத்திற்கு தெரியாமல் அதற்கான அறிவிப்பையும் வெளியிடுகிறார்கள். ஏனெனில் பெண் டப்பிங் கலைஞரை வேலைக்கு சேர்ப்பதில் அவர்களது நிறுவனத்தில் அனுமதியில்லை. ருயாங்கே என்ற பெண் வழியில் ஒரு நகரத்தில் அவர்களை சந்தித்து வேலைக்கு சேருகிறார். அவர் ஏற்கெனவே வேறொரு குழுவில் டப்பிங் கலைஞராக வேலைபார்த்தவராம்.

குழுவில் அவரது வருகைக்குப் பிறகு அவர்களது மருந்து விற்பனை சூடு பிடிக்கிறது. ஹீரோவுக்கான குரலாக மனித் பேச, ஹீரோயினுக்கான குரலாக ருயாங்கே தனது அனுபவத்தைக்கொண்டு மிகச்சிறந்த டப்பிங்கை வழங்குகிறார். இவர்களுடன் அந்த சிற்றுந்து போன்ற வேனில் அந்த இளம்பெண்ணும் பயணிக்கிறார். ஆங்காங்கே டேரா போட்டு தங்குமிடங்களில் அவர்கள் சமைத்ததையும் தயங்காமல் உடன் சாப்பிடுகிறார். அவர்களுக்குப் போட்டியாக அப்பகுதியில் சுற்றிவரும் சினிமா திரையிடல் குழுவை எதிர்த்து போராடும் தேவையும் அவர்களுக்கு ஏற்படுகிறது.

இவ்வளவுதான் இப்படம் என்றால் நிச்சயம் அது 'தாய்லாந்து சினிமா ஒரு பார்வை' எனும் தலைப்பாக சூட்டப்படத்தகுந்த டாக்குமெண்டரியாகத்தான் இருக்கும். ஆனால் இப்படம் டாக்குமெண்டரியில்லை. மிகச் சிறந்த மனித உறவுகளுக்கும் சிக்கல்களுக்கும் ஊடாடும் விறுவிறுப்பான கதையம்சம் உள்ளடக்கிய சர்வதேச தரத்துடன் கூடிய மிகச்சிறந்த சினிமாவாக உருவெடுத்திருக்கிறது இத்திரைப்படம்.

இயக்குநர் நான்ஸி நிமிபுத்ர் (Nonzee Nimibutr) தனது முந்தைய படைப்புகளுக்காக தாய்லாந்து கலாச்சார அமைச்சகத்தின் சிறப்பு விருது பெற்றவர். கலாச்சார அமைச்சகத்தின் சிறப்பு விருது பெற்ற 5 பேரில் ஒருவராக கொண்டாடப்படுகிறார் நான்ஸி நிமி புதுர். இப்படத்தில் சினிமா திரையிடலுக்கான காட்டுப் பயணம், வழியில் பல்வேறு சிக்கல்கள், மக்களின் மாறுபட்ட கலாச்சாரம். புத்த பிக்குகளின் உள்ளூர் அரவணைப்பு மற்றும் அதிகாரம் உள்ளிட்ட அரசியல் நடப்பியல் உண்மைகள் தேசிய நடிகர் மீது மக்கள் கொண்டுள்ள அபிமானம் என ஒரு படத்திற்குள்ளாகவே ஒரு பயணத்தின் வழியே ஒட்டுமொத்த நாட்டின் ஆன்மாவையும் நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்தியுள்ளார் நான்ஸி.

இப்படத்தில் ஒரு முக்கிய காட்சி... காட்டு வழியில் ஒரு ஆற்றுவெள்ளம் குறுக்கிடுகிறது. அது மாவோயிஸ்ட்கள் கட்டுப்பாட்டுப் பகுதி வழியில் அவர்களிடம் சிக்கிக்கொள்ள அவர்களோ இவர்களிடம் சினேகம் பாராட்டி மாட்டு வண்டிகளை ஏற்பாடு செய்து இவர்களது சினிமாத் திரை, புரஜெக்டர்கள், பேட்டரிகள், மைக்ரோபோன்கள் போன்றவற்றை வண்டியில் ஏற்றி வெள்ளத்தின் ஊடே இவர்களையும் மாட்டு வண்டிகளில் ஏற்றி அழைத்துச்சென்று மலைக்கிராமங்களில் வாழும் மக்களுக்கு படம் ஓட்டிக்காட்ட உதவியாயிருக்கிறார்கள்.

அதேபோல வேறொரு பகுதியில் மாவோஸ்ட்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் ராணுவம் நிரந்தரம் முகாம் அமைத்துள்ளப் பகுதியில்... அங்கு படம்ஓட்டிக்காட்டும்போது ஹீரோ மித்ர பஞ்சாயன் நாட்டுக்காக சண்டையிட்டு வெற்றியடையும் காட்சியில் உற்சாக வெள்ளத்தில் பார்வையாளராக அமர்ந்திருக்கும் ராணுவ தளபதி வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு எல்லோருக்கும் இன்ப அதிர்ச்சி தரும் இடம்.... கைதட்டி ராணுவ அதிகாரிகளும் வீரர்களும் ஆரவாரிக்கும் அந்த இடம் உன்னதம். ஒரு காலகட்டத்தின் ஒரு நாட்டின் சினிமா சரித்திரத்தை சொல்ல வந்த இயக்குநர் தேசத்திற்கான சரித்திர கதைபோன்ற வலிமையோடு நாட்டுப்பற்றையும் சேர்த்து சொன்னவிதம் தனி மேஜிக்.

இப்படத்தில் மைய இழையாக ஊடுருவும் முக்கியமான ஒன்றையும் சொல்லியாக வேண்டும். தாய்லாந்தின் தேசிய நடிகராக கொண்டாடப்படுபவர் மித்ர சாய் பஞ்சா Mitr Chaibancha (1934-1970). தனது இளவயதிலேயே குறுகிய காலத்தில் 266 படங்களில் நடித்த அவரது படங்கள் என்றால் மக்களுக்கு கொள்ளைப் பிரியம். அதனாலேயே இந்த மருந்துக் கம்பெனி சினிமா திரையிடல் குழுவினர் அவரது படங்களையே அதிகளவில் திரையிட்டு மக்களிடம் நன்மதிப்பை பெறுகின்றனர்.

தாய்லாந்து அரசின் தங்கப் பதக்கம் விருதுபெற்ற மித்ர சாய் பஞ்சாவை படப்பிடிப்பு தளம் ஒன்றில் நடித்துக் கொண்டிருக்கும்போது இக்குழுவினர் அவ்வழியே செல்லும் சமயத்தில் அவரை நேரில் சென்று சந்தித்து வாழ்த்து பெறுவார்கள். அப்போது அவர் சொல்வார், ''உங்களைப்போன்ற குரல் பின்னணி கலைஞர்கள்தான் என்னைபோன்றவர்களை மக்களிடம் கொண்டுபோய் சேர்க்கின்றீர்கள்... அதன்றாக எனது மனப்பூர்வமான நன்றி.'' திரும்பிய பிறகு கூட அவரை சந்தித்ததை மிகவும் பெருமையாக கருதுகின்றனர்.

எதோ ஒரு ஊரில் இந்த மருந்து கம்பெனி சினிமா திரையிடலின்போது மித்ர சாய் பஞ்சா படப்பிடிப்பின்போது ஹெலிகாப்டரிலிருந்து 300 அடி உயரத்திலிருந்து விழுந்து தவறி விழுந்து உயிரிழந்து விட்டதாகவும் பின்னர் அறிகின்றனர். ரேடியோ செய்திகேட்டு குழுவினர் கதறி அழுகின்றனர். மித்ர வின் இறுதிச் சடங்கிலும் கலந்துகொள்கின்றனர். இப்படத்தில் அவரது உயிரிழந்த உடலைக் காணவரும் மக்கள் கதறி அழுவதைப் பார்க்கும்போது நம்ம ஊர் கேப்டன் விஜய்காந்துக்கு இறுதிச் சடங்குக்கு உணர்வுபூர்வமாக மக்கள் கலந்துகொண்டு கதறி அழுத காட்சிகளே நினைவுக்கு வருகின்றன.

அவ்வப்போது இன்ஸ்பெக்ஷன் வரும் கம்பெனி மேலாளர் எய்ச்சன் ஒருமுறை ஒரு சிறுநகரத்தில் வண்டி ஓய்விலிருந்தபோது அங்கு ஆய்வு மேற்கொள்ள வருகிறார். அப்போது சினிமா உபகரணங்கள், மருந்து விற்பனை கையிருப்பு விற்பனை நிலவரம் போன்றவற்றை ஆய்வு மேற்கொள்கிறார். சிற்றுந்துபோன்ற அந்த வேன் உதிரி பாகங்கள் எல்லாம் உறுதியாக இருக்கின்றனவா என்பதை ஆய்வு செய்ய வண்டியை சுற்றிச்சுற்றி வரும் போது பெண் டப்பிங் கலைஞரை அவர் கண்ணில் மாட்டாமல் மறைக்க முயற்சிக்கும் இடம் உச்சபட்ச காமெடி.

வேறொரு நகரத்தில் படம் ஓடிக்கொண்டிருக்கும்போது அந்த பெண் டப்பிங் கலைஞர் விதிகளை மீறி நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்பதை அறிந்து கையும் களவுமாக இவர்கள் சிக்குகிறார்கள். அதன்காரணமாகவே அதன்பிறகான ஒரு பயணம் கடைசி பயணமாக அமைவதும் அந்த ஒரு கடைசி பயணத்தில் ஒரு திருவிழாவின்போது திரையிடப்படும் ஹெலிகாப்டர் விபத்தில் திடீர் மரணம் ஏற்பட்ட நடிகர் மித்ர சாய்பஞ்சாவின் நடிப்பிற்கு உயிர் கொடுத்து பார்வையாளர்களின்உள்ளம் உருக்கும்விதமாக நடித்த தங்கள் நிறுவனத்தின் மருந்து பயணக்குழுவின் டப்பிங்கலையில் அபரிதமான திறமையை நேரில் கண்டறிந்து போட்டிக் குழுவினர், பொதுமக்கள் மட்டுமல்ல அவர்களின் அன்புக்கு கம்பெனி மேலாளர் எய்ச்சன் அடிபணிவதும் தனிக்கதை.

இக்குழுவில் இணையும் பெண் டப்பிங் கலைஞரைப் பொறுத்தவரை தன் வாழ்க்கையில் ஒரு அலுவலக செகரட்டரியாகவோ அல்லது அலுவலக எழுத்தராகவோ வரவேண்டும் என்பதுதான் அவரது லட்சியமாம். தட்டச்சு பயிலவும் அதற்கான வேலையைத் தேடவும் தேவையான பொருட்செலவுக்கான வருவாய்க்காகத்தான் இந்த வேலையில் ஈடுபடுவதாக அவர் தெரிவிக்கிறார். அதேநேரம் சினிமா ஹீரோயின் குரல்களுக்கு கச்சிதமாகப் பொருந்தி அவர்களது வேலைக்கு உறுதுணையாக இருப்பதில் முழு ஈடுபாடு காட்டுகிறார்.

ஒரு அலுவலகத்தில் ஒரு பெண் பணியாளர் நுழைந்தால் அங்கு உள்ளும் புறமுமாக என்னஎன்ன பிரச்சினைகளை எதிர்கொள்ளநேரிடுமோ அதையெல்லாம் அந்த பெண் பணியாளர் எதிர்கொள்ளத்தான் செய்கிறார். ஆனால் அவரது லட்சியத்திற்கும் மரியாதைக்கும் எந்தவித குறைபாடுமின்றி அந்த குழுவினர் அவரை மிகவும் கண்ணியமாக நடத்துகிறார்கள்.... இதற்கிடையில்தான், மனித் மற்றும் காவ் இருவரும் ருயாங்கே காதலில் விழுகிறார்கள்.

அத்தகைய நிலையில் அவர் என்ன முடிவெடுத்தார்? அவர் அதைத்தாண்டி தனது லட்சியத்தை நோக்கி சென்றாரா என்பதையெல்லாம் முழுநீள திரைப்படத்தின் முக்கால் பங்கு திரைக்கதையில் மையம் கொள்கிறது. பெண் டப்பிங் கலைஞர்களுக்கு மட்டுமல்ல இந்தக் குழுவில் இருக்கும் ஒவ்வொரு ஆண்களுக்குமே ஒவ்வொரு லட்சியம் இருப்பதை காணமுடிகிறது.

ஆண்களின் உலகத்தில் தொடங்கும் சினிமா காலங்கள் மாறிய பிறகு பெண்ணின் டைரிக்குறிப்புகளாக நிறைவெய்திய விதத்தில் இத்திரைப்படம் சர்வதேச தரத்தோடு மிளிர்கிறது. பின்னணி குரல் கலைஞர்களுக்கான கவுரவமாகவும் உலகின் சினிமா என்ற பெருமையும் இப்படம் திகழ்கிறது.

பச்சைப்பசேல் என்ற தாய்லாந்து நிலவியல் காட்சிகளை அள்ளித்தரும் ஒளிப்பதிவாளர் தீராவத் ருஜிம்தம் கேமராவின் துணையோடு, இயக்குநர் நான்ஸி நிமிபுதுர் மனித அன்பின் தோரணங்களாக கட்டி தொங்கவிட்டுள்ள ஒரு நிறைவான சினிமாவான 'ஒன்ஸ் அப்பான் எ ஸ்டார்' நெட்ஃப்ளிக்ஸில் காணக் கிடைக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஓடிடி களம்

17 hours ago

ஓடிடி களம்

1 day ago

ஓடிடி களம்

1 day ago

ஓடிடி களம்

2 days ago

ஓடிடி களம்

6 days ago

ஓடிடி களம்

9 days ago

ஓடிடி களம்

10 days ago

ஓடிடி களம்

13 days ago

ஓடிடி களம்

18 days ago

ஓடிடி களம்

19 days ago

ஓடிடி களம்

20 days ago

ஓடிடி களம்

22 days ago

ஓடிடி களம்

25 days ago

ஓடிடி களம்

1 month ago

ஓடிடி களம்

1 month ago

மேலும்