தலைமைச் செயலகம்: அதிர்வூட்டியதா அரசியல் சதுரங்க ஆட்டம்? | ஓடிடி திரை அலசல்

By கலிலுல்லா

ஊழல் குற்றம்சாட்டபட்டு தீர்ப்புக்காக காத்திருக்கும் முதல்வர், அவரின் நாற்காலியை குறிவைத்து நடக்கும் அரசியல் சதுரங்கம், நடுவே சில கிளைக்கதைகளாக உருவாகியிருக்கிறது ‘தலைமைச் செயலகம்’ வெப் சீரிஸ். வசந்தபாலன் இயக்கியுள்ளார். ஜீ5 ஓடிடியில் காணக் கிடைக்கிறது.

அகில இந்திய எழுச்சி தமிழக முற்போக்கு கழகத்தின் தலைவரும், தமிழக முதல்வருமான அருணாச்சலத்துக்கு (கிஷோர்) எதிரான ஊழல் வழக்கின் தீர்ப்பு விரைவில் வர இருக்கிறது. அவருக்கு சிறை தண்டை விதிக்கப்பட்டால், அடுத்த முதல்வர் யார் என்ற கேள்விகள் எழ, மறுபுறம் வழக்கின் போக்கை மாற்றும் முயற்சிகளும் நடக்கின்றன. அடுத்த முதல்வருக்கான ரேஸில் அருணாச்சலத்தின் மகள் அமுதவல்லி (ரம்யா நம்பீசன்) முந்திக்கொண்டு நிற்க, மருமகன் ஹரியும் (நிரூப் நந்தகுமார்) காய் நகர்த்துகிறார்.

ஆனால் முதல்வரோ, தன்னுடைய அரசியல் ஆலோசகரான கொற்றவைக்கு (ஸ்ரேயா ரெட்டி) முக்கியத்துவம் கொடுப்பது, அமுதாவுக்கும் ஹரிக்கும் அது பிடிக்கவில்லை. கிட்டத்தட்ட கொற்றவையும் முதல்வர் ரேஸுக்குள் நுழைந்துவிட, அருணாச்சலம் சிறை சென்றாரா? அரசியல் சதுரங்க விளையாட்டில் யாருக்கு கிடைத்தது அந்த முதல்வர் நாற்காலி? - இதையொட்டிய நகர்வுதான் வெப் சீரிஸின் திரைகதை.

அத்துடன் ஜார்க்கண்டில் 15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொலை வழக்கில் துர்கா என்ற பெண்ணை சிபிஐ தேடுகிறது. யார் அந்தப் பெண்? அவருக்கும் மேற்கண்ட அரசியல் கதைக்கும் என்ன தொடர்பு என்பதை சுவாரஸ்யத்துடன் இணைத்திருக்கும் முயற்சி ‘தலைமைச் செயலகம்’.

மொத்தம் 8 எபிசோடுகள். கிட்டதட்ட 4 மணி நேரம் பயணிக்கும் இந்தத் தொடர் பெரும்பாலும் எங்கேஜிங்காகவே நகர்கிறது. அதற்கு காரணம், யார் நல்லவர், யார் கெட்டவர் என்பதை யூகிக்க முடியாத கருப்பு வெள்ளை கதாபாத்திரங்கள், தொடர் நெடுங்கிலும் பயணிக்கும் தமிழக, இந்திய அரசியல் தலைவர்களின் ஒப்புமைகள், சமகால அரசியல் சூழலுடன் ஒத்துப்போகும் காட்சிகள் எல்லாவற்றையும் கோத்து ‘அப்டேட் வெர்ஷன’ ஆக மாற்றியிருப்பது தொடருக்கு உயிர் கொடுக்கிறது.

இந்தியைக் கற்றுக்கொள்ள சொல்லும் டெல்லி, ஊழல் வழக்கு, குடும்ப அரசியல், கீழ்வெண்மனி சம்பவம், ஹெலிகாப்டர் விபத்து, மாநில அரசின் மீதான பாகுபாடு, மத்திய அரசின் ஆதிக்கம், கன்டெய்னர், சில்வர் டம்ளர், நக்சல் இயக்கங்கள், பழங்குடி மக்கள், மார்க்சிய, அம்பேத்கரிய - பெரியாரிய கொள்கை, சமூக நீதி, முஸ்லிம் சிபிஐ ஆஃபீஸர், பெருமுதலாளிகள் கடன் தள்ளுபடி, ஜேஎன்யு, கட்சி உடைப்பு, எம்எல்ஏக்கள் பறிப்பு என ஏராளமான விஷயங்களை பேசுகிறது தொடர்.

“ஒரு தலைவனோ, தலைவியோ மக்கள் மீது வைத்திருக்கும் காதல்தான் நீதி. அந்த நீதிக்காக சில குற்றங்கள் நடக்கலாம், தண்டனைகூட கிடைக்கலாம், அதை சட்டம்னு புரிஞ்சுகணுமே தவிர, அது நீதி கிடையாது”, “என் கைக்கு வர விலங்க அவ கைக்கு கட்டாதீங்க”, “மலையில இருக்கிற எறும்பு தான், தான் இந்த மலைய சுமக்குதுன்னு நெனைக்குமாம்” போன்ற வசனங்கள் கவனிக்க வைக்கின்றன.

இன்றைய 2கே கிட்ஸ் தலைமுறைக்கு காடு என்பது வெறும் ரெசார்ட் என்ற புரிதலும், ஆண் - பெண் பழக்கத்தை தவறாக கருதும் புரிலின்மை இன்றைய தலைமுறையிலும் தொடர்வதை படம்பிடித்து காட்டுகிறது. ஒருபக்கம் அரசியல் டிராமாவும், மறுபுறம் த்ரில்லருமாக நகரும் தொடர் பரபரப்பை கடந்துகொண்டிருக்க, சில இடங்களில் தொய்வு இல்லாமல் இல்லை. குறிப்பாக பரத்துக்கான ட்ராக் ஒரு கட்டத்தில் சோர்வைத் தருகிறது. அதேபோல 8-ஆவது எபிசோடின் முடிவை கணித்துவிட முடிகிறது என்பதுமே மைனஸ். தேவைக்கு அதிகமான நீளம் டபுள் மைனஸ்.

ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிக்கொண்டு தவிக்கும் முதல்வராக கிஷோர் தனது அக, மன போராட்டங்களை உணர்ச்சிகளின் வழியே கச்சிதமாக கடத்தியிருக்கிறார். அரசியல் முதிர்ச்சி பெற்ற பத்திரிகையாளராக ஸ்ரேயா ரெட்டியின் புதிரான கதாபாத்திரமும், அதற்குரிய அவரின் பங்களிப்பும் பாராட்டத்தக்கது. ரம்யா நம்பீசன் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தினாலும், அவருக்கும் தந்தைக்குமான ‘பாண்டிங்’ மிஸ்ஸாவதால் கதாபாத்திரத்துடன் ஒட்டமுடியவில்லை.

போராளிக் குழுவைச் சேர்ந்த கனி குஸ்ருதி அலட்டிக்கொள்ளாத, மிரட்டலான நடிப்பால் கவர்கிறார். கட்டுடல் மேனியுடன் போலீஸாக பொருந்துகிறார் பரத். ஆனால் அவர் கதாபாத்திரம் ஆழமாக இல்லையோ என தோன்றவைக்கிறது. ஒரு சின்ன சென்டிமென்ட் காட்சியில் ஸ்கோர் செய்துவிடுகிறார் சந்தானபாரதி.

நிரூப் நந்தகுமார், ஷாஜி சென், ஆதித்யா மேனன், தர்ஷா குப்தா,ஒய்.ஜி.மகேந்திரன், சித்தார்த் விபின், கவிதா பாரதி தேவையான பங்களிப்பு செலுத்துகின்றனர். ஜிப்ரான் இசை தொடருக்கு கூடுதல் பலம். கயிற்றின் வழியே ஃபோகஸ் வைக்கும் காட்சி தொடங்கி, ஸ்ரேயா ரெட்டியின் வீட்டின் ஷில்அவுட்ஸ் என ரவிசங்கரனின் ஃப்ரேம்கள் அழகியல். தேவையான பரபரப்புக்கு ரவிக்குமாரின் ‘கட்ஸ்’ உதவுகிறது.

அப்படி என்ன ஊழலைத்தான் முதல்வர் செய்தார் என்பது தெளிவாக சொல்லப்படாதது, தொடரின் நீளம், கிளைக்கதைக்கான சுற்றல் உள்ளிட்ட சில குறைகள் இருந்தாலும், தமிழின் அழுத்தமான அரசியல் தொடராக ‘தலைமைச் செயலகம்’ கவனிக்க வைக்கிறது. தவறவிடக்கூடாத தமிழ் வெப் சீரிஸ் இது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE