ஈரம் காயாத சாலையின் மீது விழுந்துக் கிடக்கிறது, தெரு விளக்கொன்றின் வெளிச்சம். அச்சாலையின் அமைதியைக் கெடுத்தபடி வந்து நிற்கிறது ஓர் இருசக்கர வாகனம். வண்டியிலிருந்து இறங்கும் ஒருவன் பல வீதிகளின் வழியே செல்லும் பாதையில், கேமிராவுடன் நம் கண்களும் பயணிக்கும் அந்த நேரம் அதிகாலை 3 மணி என திரையில் காட்டப்படுகிறது. தூரத்தில் கதறித்துடிக்கும் சிறுமியின் ஓலம், நடந்து செல்பவனை மறக்கடித்து அச்சத்தம் வரும் திசையை நோக்கி, நம் கவனத்தைத் திருப்புகிறது. சிறுமியின் சத்தம் வரும் இடத்தை நோக்கி, நடந்துச் செல்பவனின் காலடித் தடங்கள் துல்லியமாக நகர்ந்து சேர்வது. சிறுமியின் இந்த நிலைக்கும் அவனும் உடந்தை என்பதை உணர்த்துகிறது.
வலியின் வேதனையில், சுருண்டு விழுந்து அப்பெண் குழந்தைக்கு நிகழ்த்தப்பட்ட ரணம், மனிதனுடைய மிருகத்தனத்தின் உச்சபட்சம். அந்த அறையில் ஏற்கெனவே இருந்தவனும், வண்டியில் இறங்கி நடந்து வந்தவனும் சேர்ந்து அப்பெண் குழந்தையின் தலையணையை வைத்து மூச்சை நிறுத்தி கொலை செய்கின்றனர். அக்குழந்தையை அங்கிருந்து அப்புறப்படுத்தி, மயானத் தொழிலாளி ஒருவரை மிரட்டி பணம் கொடுத்து, எரியூட்டி சிதைக்கின்றனர். மனித மிருகங்களின் இச்சைக்கு இணங்காமல் நெருப்பில் வெந்து தணியும் அப்பெண் குழந்தையின் காற்றில் கலக்கும், இந்தக் காட்சியுடன் தொடங்குகிறது, ‘பாக்ஷக்’ (Bhakshak) இந்தி திரைப்படம்.
பிஹார் மாநிலம் முசாஃபர்புரில் உள்ள ஆதரவற்ற பெண் குழந்தைகள் காப்பகத்தில் நடந்த உண்மைச் சம்பவத்தைத் தழுவி இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. ஜோத்ஸ்னா நாத் உடன் இயக்குநர் புல்கிட் இணைந்து எழுதி இப்படத்தை இயக்கியிருக்கிறார். காத்திரமான கதைக்களத்தைக் கையில் எடுத்த இயக்குநர், அரசியல் அழுத்தங்களுக்குப் பயந்து தடுமாறியிருப்பது அப்பட்டமாகத் தெரிகிறது.
குறிப்பாக, இதுபோன்ற விவகாரங்களில் ஊடகங்கள், தனிமனிதர்களின் முயற்சிகளையும் தாண்டி, பொறுப்புடன் பணியாற்ற வேண்டிய கடமை அரசுக்கும், காவல் துறைக்கும் தார்மிகப் பொறுப்பு உள்ளதை இயக்குநர் மறந்திருப்பது சோகம்.
» கவனம் ஈர்க்கும் தபு, கரீனா கபூர், கீர்த்தி சனோனின் ‘Crew’ முதல் தோற்றம்!
» “நான் ரெடி” - விஜய் படத்தை இயக்குவது குறித்து கவுதம் வாசுதேவ் மேனன்
முனாவர்பூரில் ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கான காப்பகத்தை நடத்தி வருபவர் பன்ஷி சாஹு (ஆதித்ய ஸ்ரீவத்சவா). இவர் 3 தினசரி பத்திரிகைகளை நடத்தி வருவதுடன், அம்மாநில அரசியல் தலைவர்களின் செல்வாக்கைப் பெற்ற நம்பிக்கைக்குரிய நபராகவும் இருந்து வருகிறார். இந்தக் காப்பகத்தில் உள்ள பெண் குழந்தைகளுக்கு எதிராக வன்கொடுமைகள் நடப்பதாக சமூக தணிக்கை அறிக்கை வெளியிட்டு பல ஆண்டுகளாகியும், அந்த காப்பகத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்து வருகிறது. அதேநேரம் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் அக்காப்பகத்தில் தொடர்ந்து கொண்டே வருகிறது.
இந்த தகவல், பாட்னாவில் இருக்கும் (independent Journalist)செய்தியாளர் வைஷாலி சிங் (பூமி பெட்னேகர்) மற்றும் அவரது கேமராமேன் பாஸ்கர் சிங் (சஞ்சய் மிஸ்ரா) ஆகியோருக்கு கிடைக்கிறது. தனக்கு கிடைத்த தகவல் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் பல்வேறு முயற்சிகளை எடுக்கிறார். பொதுமக்கள் மத்தியில், பிரபலம் இல்லாத தனது சேனலின் உதவியுடன், அநீதிக்கு எதிராக வாயடைத்துக் கிடைக்கும் அரசாங்கத்தை எதிர்த்து முனாவர்பூர் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் எதிராக நடந்து வரும் வன்கொடுமைகளில் இருந்து குழந்தைகளை அவர் மீட்டாரா, இல்லையா என்பதுதான் இப்படத்தின் திரைக்கதை.
நாட்டின் பல இடங்களில் நடக்கும் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்து தீவிரமாக பேச வேண்டிய இந்தப் படத்தை, மெலோ டிராமா பாணியில் கையாண்டிருக்கிறார் இயக்குநர். படத்தில் நூறு தடவைக்கு மேல் பன்ஷி சாஹு பெயரைச் சொல்லி, சொல்லி பயமுறுத்தும் இயக்குநர். பன்ஷி சாஹுவின் கதாப்பாத்திரத்தை மிகவும் பலவீனமாக உருவகித்திருப்பது பலவீனம். அதேபோல், மிகச் சிறந்த கலைஞரான சஞ்சய் மிஸ்ரா படத்தில் வீணடிக்கப்பட்டிருக்கிறார். படத்தின் ஒரே ஆறுதல் நாயகி பூமி பெட்னேகர் மட்டும்தான்.
விறுவிறுப்பாக நகர்ந்து பார்வையாளர்களை பதைபதைக்க வேண்டிய புலனாய்வு விசாரணைக் கதையை தட்டையாக அணுகி மழுங்கடிக்கப்பட்டிருக்கிறது. பொதுவாக, ஒரு தவறை அல்லது புகாரை ஓர் ஊடகமோ அல்லது செய்தியாளரோ அம்பலப்படுத்த முடியும். அதைத்தாண்டி அந்த புகாரை விசாரித்து மேல் நடவடிக்கை எடுத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி பெற்றுத் தரவேண்டியது காவல் துறையின் கடமை.
இந்தப் படத்தில், செய்தியாளரான வைஷாலி சிங் முனாவர்பூர் சிறுமிகள் காப்பகம் குறித்து செய்தி வெளியிட்டு காவல் துறையின் உதவியை நாடுகிறார். அதற்கு காவல் துறை அதிகாரி, எப்படியாவது ஆதாரத்தைக் கொண்டு வரும்படி வைஷாலி சிங்கிடம் கூறுகிறார். அவரும் ஆதாரத்தைக் கொண்டுவர அதன்பிறகு காவல் துறை நடவடிக்கை எடுப்பதுதான் வேடிக்கை.
மேலும், செய்தியாளர்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும், என்ன மாதிரியான செய்திகளை சேகரிக்க வேண்டும் என இறுதிக் காட்சியில் பாடம் எடுப்பது, பரிதாபத்தின் உச்சம். தொழில்நுட்பக் குழுவினரின் பணி ஆறுதல். உரக்கப் பேச வேண்டிய உண்மைக் கதையை தழுவி எடுக்கப்பட்ட காரணத்தால் ஒருமுறை இப்படத்தைக் காணலாம். நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இப்படம் காணக் கிடைக்கிறது. தமிழ் டப்பிங்கும் உள்ளது.
முக்கிய செய்திகள்
ஓடிடி களம்
1 day ago
ஓடிடி களம்
3 days ago
ஓடிடி களம்
10 days ago
ஓடிடி களம்
12 days ago
ஓடிடி களம்
13 days ago
ஓடிடி களம்
16 days ago
ஓடிடி களம்
17 days ago
ஓடிடி களம்
19 days ago
ஓடிடி களம்
20 days ago
ஓடிடி களம்
20 days ago
ஓடிடி களம்
20 days ago
ஓடிடி களம்
20 days ago
ஓடிடி களம்
20 days ago
ஓடிடி களம்
21 days ago
ஓடிடி களம்
23 days ago