ஓடிடி திரை அலசல் | Mast Mein Rehne Ka: வெறுமையில் துளிர்க்கும் காதலும், வாழ்வின் 2-ம் இன்னிங்ஸும்!

By கலிலுல்லா

“இந்த அலைய பாத்தா தான் பாவமா இருக்கு... எதையோ தொலைச்சிட்டு தேடிட்டே கரைக்கு வந்து ஹெல்ப் ஹெல்ப்பன்னு கேக்குது. எப்டி உதவ முடியும்... அந்த அலை மாதிரி தான் என் வாழ்க்கையும்...” என்கிறார் ஜாக்கி ஷெராஃப். சில சமயங்களில் யாருமில்லாத வாழ்வின் வெறுமையில் மூழ்கி கிடக்கும்போது, எங்கிருந்தோ வந்த கை ஒன்று தோளைத் தட்டி, “இது வாழ்க்க நமக்கு கொடுத்த ரெண்டாவது சான்ஸ்” என சொல்லும். அதுதான் நீனா குப்தாக்களின் குரல். ஷாக்கி ஷெராஃப், நீனா குப்தாக்களின் தனிமையையும், துணையின் அரவணைப்பையும் பேசுகிறது இந்த ’மஸ்த் மெயின் ரெஹ்னா கா’ (Mast Mein Rehne Ka) இந்திப் படம். அமேசான் ப்ரைம் ஓடிடியில் காணக் கிடைக்கிறது.

மனைவியின் இழப்புக்குப் பிறகு வெறுமையின் துணையைப் பற்றிக்கொண்டு அயற்சிமிகு வாழ்வை கொஞ்சம் கொஞ்சமாக கடக்க கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார் காமத் (ஜாக்கி ஷெராஃப்). அந்நியர்களிடம் உடைத்து பேசி உரையாடல் நிகழ்த்தும் சுபாவம் கொண்டவரல்ல என்பதால் அவருக்கு நண்பர்களென சொல்லிக்கொள்ள யாருமில்லை. இவரின் சூழலையொத்தவர், பிரகாஷ் கவுர் (நீனா குப்தா). கணவர் இறந்து மகனுடன் கனடாவில் வாழ்ந்து வந்த கவுர், மருமகளின் தொல்லையால் மீண்டும் மும்பை திரும்பி தனியே வாழ்கிறார்.

நொடியில் நிகழும் அற்புதம் காதலாக அவர்களை இணைக்கிறது. அதை அவர்கள் அப்படி வெளிப்படுத்தவில்லை என்றாலும், அதானே அர்த்தம். இருவரையும் கைகோக்க வைத்த தனிமை இறுதியில் என்ன செய்தது என்பது கதை. இதனிடையே நான்ஹே குப்தா - ராணிக்கு இடையில் மற்றொரு காதல் கதையும் பயணிக்கிறது. முதுமையின் மென்மையான காதலையும், இளமையின் துள்ளலான காதல் கதையையும் சொல்கிறது இந்த ‘Mast Mein Rehne Ka’ - “கவலைப்பாடமல் மகிழ்ச்சியாக இரு” என்பதே இதன் அர்த்தம்.

உடனிருந்தவரின் மறைவுக்குப் பின் சருகாகும் வாழ்க்கையின் தனிமையிலிருந்து மீட்க ‘தேவதூதர்களாக’ யாராவது வந்தால் எப்படியிருக்கும் என்பதை மிகைத்தன்மையின்றி சாதாரண திரைமொழியில் சொல்லியிருக்கிறார் இயக்குநர் விஜய் மௌரியா. படம் தொடக்கத்தில் மெதுவாக செல்வதுபோல தோன்றினாலும், ஜாக்கி ஷெராஃப் - நீனா குப்தாவின் சந்திப்புக்குப் பின்னான உரையாடல்கள், ஷெராஃப்பின் ‘இன்ட்ரோவர்ட்’ குணம் உடையும் இடம், அந்நியர்கள் வீடுகளுக்குள் புகுந்து செய்யும் சேட்டைகள் என வேகமெடுக்கிறது படம்.

இது ஒருபுறம் என்றால், மும்பையின் தெருக்களில் யாசகம் கேட்டு வாழும் மோனிகா பன்வாருக்கும், டெய்லரான அபிஷேக் சவுகானுக்கும் இடையில் மலரும் எளிய மனிதர்களின் காதல் ரசிக்க வைக்கிறது. அதற்காக எழுதப்பட்ட காட்சிகளும், பெண்ணின் உடலைப்பற்றி மோனிகா பேசும் வசனமும் கவனிக்க வைக்கின்றன. திருட்டும் தொடர்ந்து வரும் குற்றவுணர்ச்சியும், பாதிக்கப்பட்டவர்களின் மன்னிப்பும் கதையின் அடர்த்தியை கூட்டுகின்றன.

தனிமையைத் தாங்கிய தளர்ந்த நடை, முதுமையை வரித்துக்கொண்ட முகம், நிதானத்தை வெளிப்படுத்தும் உடல் மொழியிலும், இறுதியில் பேசும் மோனோலாக் காட்சியிலும், கதாபாத்திரத்துக்கான நடிப்பில் கச்சிதம் சேர்க்கிறார் ஜாக்கி ஷெராஃப். எல்லாவற்றையும் லேசாக எடுத்துக்கொள்ள துணியும் நீனா குப்தாவின் நடிப்பும், ஜாக்கி ஷெராஃப்புடனான அவரது கெமிஸ்ட்ரியும் படத்துக்கு பலம். மும்பையில் வாழப்போராடும் சாமானியனாக அபிஷேக் சவுகான் குற்றவுணர்ச்சியில் கலங்கும் இடத்தில் கவனம் பெறுகிறார்.

அவரது அப்பாவியான முகம் கதாபாத்திரத்துக்கு சேர்க்கும் நியாயம். துணிச்சலான, எதற்கும் அஞ்சாத, போகிற போக்கில் எல்லாவற்றையும் புறந்தள்ளுகிற பெண்ணாக மோனிகா பன்வாரின் நடிப்பும், கதாபாத்திர வடிவமைப்பும் ஈர்க்கிறது. யதார்த்தமான நடிப்பால் நினைவில் தேங்குகிறார். ராக்கி சாவந்த் சிறப்புத் தோற்றத்தில் வந்து செல்கிறார். நாகராஜ் ரத்தினத்தின் ஒளிப்பதிவும், அனுராக் சைகியாயின் பின்னணி இசையும் கதையின் போக்கை தொழில்நுட்ப ரீதியாக பலப்படுத்த உதவுகின்றன.

கணிக்ககூடிய, வழக்கமான பாணியிலான காட்சிகள், சில இடங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லாமல் இல்லை. ஆனாலும், வாழ்க்கையில் இரண்டாம் வாய்ப்பு உண்டு என்பதை வலியுறுத்தும் படம் “கவலைப்பாடமல் மகிழ்ச்சியாக இரு” என்பதையும் தூறலைப் போல லேசாக உணர்த்திச் செல்கிறது. வாசிக்க > ஓடிடி திரை அலசல் | Falimy: பசில் ஜோசப்பின் ஓர் இறுக்கம் தளர்த்தும் படைப்பு!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE