ஓடிடி திரை அலசல் | Neru: ஜீத்து ஜோசப் - மோகன்லாலின் மற்றொரு தரமான சம்பவம்!

By கலிலுல்லா

கொடுமை இழைக்கப்பட்ட பார்வையற்ற பெண் ஒருவர், கண்கள் கட்டப்பட்ட நீதி தேவதையின் வழியே ‘நீதி’ பெற முயல்வது ‘நேரு’ (Neru). மலையாளத்தில் உண்மை என்று பொருள். ஹாட்ஸ்டார் ஓடிடியில் தற்போது காணக்கிடைக்கிறது.

சிறுவயதிலிருந்தே சாரா (அனஸ்வரா ராஜன்) தனது வாழ்க்கையில் வெளிச்சத்தைக் கண்டதில்லை. பார்வையிழந்த அவருக்கு இருக்கும் ஒரே ஆறுதல் சிற்பங்களை உருவாக்குவது. இருண்ட வாழ்க்கையில் இருக்கும் அவரை மேலும் இருளுக்குள் தள்ளி விடுகிறது அந்தப் பாலியல் வன்கொடுமை. தனக்கு நேர்ந்த அநீதிக்கு எதிராக பெற்றோர் உதவியுடன் நீதிமன்றத்தை நாடுகிறார் சாரா. அரசுத் தரப்பு வழக்கறிஞர் திறமையற்று இருப்பதால் மாற்று வழக்கறிஞரைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள். ஆரம்பத்தில் இந்த வழக்கிற்குள் நுழைய மறுக்கும் விஜயமோகன் (மோகன்லால்), பின்னர் வழக்காட ஒப்புக்கொண்டு களமிறங்குகிறார். குற்றவாளிக்கு எதிரான பிரதான ஆதாரங்களற்ற இந்த வழக்கை விஜயமோகன் வென்றாரா? சாராவுக்கான நீதி கிடைத்ததா? - இதுதான் படத்தின் திரைக்கதை.

மீண்டும் நிகழ்ந்திருக்கிறது ஜீது ஜோசஃப் - மோகன்லால் மேஜிக்! பாலியல் வன்கொடுமையும், அதற்கான சட்டப் போராட்டமும் பல படங்களில் பார்த்தவை என்றாலும், ‘பார்வையற்ற’ பெண்ணின் போராட்டம் என்பது மாற்றுப் பார்வை. அதிலும், குற்றவாளிக்கு சாதகமான அம்சங்கள் கொண்ட சிக்கலான வழக்கில், அதன் முடிச்சுகளை கொஞ்சம் கொஞ்சமாக அவித்து தனது சுவாரஸ்யமான திரைக்கதை மூலமாக அயற்சியில்லாமல் நகர்த்திருக்கிறார் இயக்குநர்.

“உண்மையில் பாலியல் வன்கொடுமைக்குள்ளான பெண் இப்படி பேசமுடியுமா என எனக்குத் தோன்றவில்லை” என எதிர்தரப்பு வழக்கறிஞர் கூற, “அவமானத்துக்கு பயந்து ஒடுங்கி, விதின்னு மனச தேத்திக்கிட்டு ஊமையா வாயடிச்சு போய் நிக்கணும்னு நினைக்கிறீங்களா? காலம் மாறிடுச்சு சார்...” என நீதிமன்றமே அதிரும்படி உடைத்துப் பேசுகிறார் மோகன்லால். படமும் அத்தகைய உடைப்புதலைத்தான் நிகழ்த்துகிறது.

ஆங்காங்கே சில வசனங்கள் ‘அட’ என்ற ஆச்சரியப்பட வைப்பது தான் கோர்ட் ரூம் டிராமாவில் பார்வையாளர்கள் எதிர்பார்ப்பது. அப்படி பாதிக்கப்பட்ட பெண் சாரா நீதிமன்ற கூண்டில் நின்று எதிர்தரப்பு வழக்கறிஞர்கள் கேள்விகளை எதிர்கொள்ளும் விதமும் அதற்கான வசனங்களும் சிறப்பு.

இந்திய நீதித் துறையை சில இடங்களில் கேள்வி கேட்கும் இப்படம், நீதிமன்ற உரையாடலைக் கடந்து அதன் எமோஷனல் கலந்த எழுத்தால் உயிர்பெறுகிறது. குறிப்பாக க்ளைமாக்ஸ் புல்லரிப்புடன் கூடிய நிறைவு.

‘பிங்க்’, ‘நேர்கொண்ட பார்வை’ படங்களின் டெம்ளேட் போல ஆரம்பத்தில் வழக்கை ஏற்க மறுத்து, ‘நான் கோர்ட்டுக்கு போய் 5 வருஷமாச்சு. இப்போ என்னால முடியாது’ போன்ற வழக்கமான ஹீரோயிச பிம்பங்கள் மோகன்லாலுக்கான கட்டமைப்பு என்றாலும், அவருக்கான பின்கதை ஏதோ ஒரு புள்ளியில் படத்துக்கு உதவுவது சாந்தி மாயா தேவி மற்றும் ஜீத்து ஜோசப் ஆகியோரி ‘ரைட்’டிங் நுணுக்கம்.

பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண் ஒடுங்கி, பயந்து அவமானப்பட்டு வாழத்தேவையில்லை. எங்கே, எப்போது, என்ன நடந்தது என்பதையும், தலைநிமிர்ந்து நடக்கலாம் என்பதை படம் நிறுவுவது பாராட்டுக்குரியது. இருதரப்பு வாதங்களையும், பிரதிவாதங்களையும் முட்டிமோத வைத்திருப்பது, எளிதாக பெண்ணை கேரக்டர் அசாசினேஷன் மூலம் பலவீனப்படுத்த மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளும் கவனிக்க வைக்கிறது.

ஓரிடத்தில் மட்டும் கோபத்தை வெளிப்படுத்துவதைத் தாண்டி, மற்ற எல்லா இடங்களிலும் அதிருப்தி, மகிழ்ச்சி, சோகம் அனைத்து உணர்வுகளையும் உள்ளடக்கிய ஆரவாரமற்ற ரியாக்‌ஷன்களை கச்சிதமாக கடத்துகிறார் மோகன்லால். கூடுதல் உணர்ச்சியையும் வெளிப்படுத்தாமல் குறிப்பிட்ட மீட்டரிலேயே அதனை மெயின்டென் செய்திருப்பது கதாபாத்திரத்துக்கு செய்யும் நியாயம்.

பாதிக்கப்பட்ட பெண்ணாக அனஸ்வரா ராஜன், வலியை தாங்கி நின்று போராடும் இடங்களிலும், அதனை வெளிப்படுத்தும் இடங்களில் கவனம் பெறுகிறார். குறிப்பாக, க்ளைமாக்ஸ் காட்சியில் கலங்கடிக்கிறார். தவிர பிரியாமணி, சித்திக், சாந்தி, ஜெகதீஷ், மேத்யூ வர்கீஸ் கதபாத்திரம் கோரும் நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

விஷ்ணு ஷ்யாம் பின்னணி இசை இறுதிக்காட்சியின் தன்மையை இன்னும் தீவிரமாக்க உதவுகிறது. தொந்தரவில்லாமல் கதையுடன் கலந்து அந்த மூட்-ஐ கடத்தும் பாடல் கவனிக்க வைக்கிறது. பெரும்பாலும் வீட்டுக்கு வெளியிலிருந்து நிகழ்வுகளை காட்சிப்படுத்தியிருக்கும் சதீஷ் குருப்பின் பாலியல் வன்கொடுமை காட்சிகளை சென்சிட்டிவாக அணுகியிருக்கிறது. நீதிமன்ற உரையாடல்களுக்கு நடுவே தேவைக்கேற்ப சம்பவங்களை கோர்த்திருந்த விநாயக்கின் படத்தொகுப்பு பலம்.

படம் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் காணக்கிடைக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஓடிடி களம்

18 hours ago

ஓடிடி களம்

1 day ago

ஓடிடி களம்

2 days ago

ஓடிடி களம்

2 days ago

ஓடிடி களம்

3 days ago

ஓடிடி களம்

4 days ago

ஓடிடி களம்

7 days ago

ஓடிடி களம்

8 days ago

ஓடிடி களம்

9 days ago

ஓடிடி களம்

9 days ago

ஓடிடி களம்

14 days ago

ஓடிடி களம்

17 days ago

ஓடிடி களம்

20 days ago

ஓடிடி களம்

21 days ago

ஓடிடி களம்

22 days ago

மேலும்