ஸ்பானிஷ் மொழியில் வெளியாகி உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய தொடர் என்றால் அது சந்தேகமே இல்லாமல் ‘மனி ஹெய்ஸ்ட்’ வெப் தொடர் தான். சிவப்பு நிற ஹூடி உடைகள், ஓவியர் சல்வடோர் டாலி முகமூடிகள் என அந்த தொடரில் இடம்பெற்ற அனைத்து அம்சங்கள் பெரும் வரவேற்பை பெற்றவை. ஹெய்ஸ்ட் பாணி படங்களுக்கும், தொடர்களுக்கும் ஒரு புதிய கதவை அந்தத் தொடர் திறந்தது என்றால் அது மிகையல்ல. அந்த ‘மனி ஹெய்ஸ்ட்’ தொடரில் ஒரு முக்கிய கதாபாத்திரமாக ரசிகர்களின் மனம் கவர்ந்த ’பெர்லின்’ கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த புதிய தொடர் ‘பெர்லின்’, அதே அளவு விறுவிறுப்பும் பரபரப்பும் கொண்டிருந்ததா என்பதை பார்க்கலாம்.
ஒரு பணக்காரருக்கு சொந்தமான சில அரியவகை நகைகளை கொள்ளையடிக்க திட்டமிடுகிறார் பெர்லின் (பெட்ரோ அலோன்சோ). அவருக்கு உறுதுணையாக இருப்பவர், அனுபவமிக்க கொள்ளையரான டேமியன் (ட்ரிஸ்டன் உல்லாவ்). இந்த கொள்ளையை செய்து முடிக்க பெரிய அனுபவம் இல்லாத இரண்டு இளைஞர்கள், இரண்டு இளம்பெண்களை தேர்வு செய்கிறார் பெர்லின். தான் கொள்ளையடிக்க திட்டமிடும் அந்த பணக்காரரின் மனைவியான கமில் (சமந்தா சிக்யுரோஸ்) மீது காதல் வயப்படும் பெர்லின், அந்த காதலுக்காக எதையும் செய்ய துணிகிறார். இன்னொரு புறம் பெர்லினின் கொள்ளைக் குழுவில் உள்ள கேமரூன், ரோய், கேய்லா, ப்ரூஸ் ஒவ்வொருவருக்கும் ஒரு சிக்கலான பின்னணி உள்ளது. தனது மனைவி தன்னை விட்டு பிரிந்ததால் டேமியனும் கடும் மன உளைச்சலில் இருக்கிறார். இந்த உறவுச் சிக்கல்கள் கொள்ளையில் ஏற்படுத்திய தாக்கம் என்ன? அந்த தாக்கத்தை தாண்டி தன்னுடைய திட்டத்தை பெர்லின் நிறைவேற்றினாரா என்பதே இந்தத் தொடரின் கதை.
முந்தைய பாகமான, ‘மனி ஹெய்ஸ்ட்’-ல் நடக்கும் கொள்ளைக்கு மூலகர்த்தா புரொஃபசர் என்றால், இதில் பெர்லின். கொள்ளையின் ஆதி முதல் அந்தம் வரை அனைத்தையும் திட்டமிடுகிறார். கிட்டத்தட்ட ‘மனி ஹெய்ஸ்ட்’ பாணியிலேயே திரைக்கதை எழுதப்பட்டிருந்தாலும், முந்தைய பாகத்தைப் போல துணை கதாபாத்திரங்களுக்கான முன்கதை, சீட்டின் நுனிக்கு கொண்டு வரும் த்ரில் காட்சிகள் ஆகியவற்றை குறைத்து இதில் கதாபாத்திரங்களின் காதல் பக்கங்கள் விரிவாக பேசப்படுகிறது. இன்னும் சொல்லப் போனால் கொள்ளை தொடர்பான காட்சிகள் தொடரின் பாதியிலேயே முடிவுக்கு வந்துவிடுகின்றன. அதன் பின் நடப்பவை எல்லாம் கதாபாத்திரங்களுக்கு இடையிலான ஆழமான உணர்வுப் போராட்டங்கள் தான். அந்த வகையில் இந்த ‘பெர்லின்’ தொடரை ‘மனி ஹெய்ஸ்ட்டை’ காட்டிலும் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் தரும் தொடராக எழுதியிருக்கிறது அலெக்ஸ் பினா மற்றும் எஸ்தெர் மார்ட்டினெஸ் இணை.
» ஷைன் டாம் சாக்கோ நிச்சயதார்த்தம்
» பிரம்மரிஷி விஸ்வாமித்ரா: ரிலீஸுக்கு பிறகு காமெடி சேர்த்து ரீ-ரிலீஸ் ஆன படம்!
‘மனி ஹெய்ஸ்ட்’ தொடரின் தொடக்கத்தின் வெறுப்பை சம்பாதித்து இறுதியில் ரசிகர்களின் மனதை வென்ற பெர்லின் பெட்ரோ அலோன்சோ, இதில் ஒவ்வொரு காட்சியிலும் வசீகரிக்கிறார். மனி ஹெய்ஸ்ட் தொடருக்கு முந்தைய காலகட்டம் என்பதால் தனது தோற்றத்துக்கு நியாயம் செய்யவும் மெனக்கெட்டுள்ளார். கமில் ஆக வரும் சமந்தா சிக்யுரோஸ், டேமியன் ஆக வரும் ட்ரிஸ்டன் உல்லாவ் என அனைவரும் தங்கள் பங்கை சிறப்பாக செய்திருக்கின்றனர். குறிப்பாக மோசமான கடந்த காலத்தை மறக்க கொள்ளையில் ஈடுபடும் கேமரூன் கதாபாத்திரத்தில் நடித்த பெகோனா வர்காஸ் ஈர்க்கிறார். ஆங்காங்கே மனி ஹெய்ஸ்ட்டில் வரும் நெய்ரோபி கதாபாத்திரத்தை இவரது தோற்றம் நினைவூட்டுகிறது.
பெர்லின் குழு செய்யும் விஷயங்களை யாரேனும் நிஜ வாழ்க்கையில் செய்தால் அரை நாளில் அவர்களை போலீஸ் பிடித்துவிடும். ஆனால் திரையில் அதை பார்க்கும்போது ஒரு நொடி கூட அதையெல்லாம் யோசிக்கவிடாமல் நம்மை ஈர்த்துக் கொள்வதே இத்தொடரின் வெற்றி. போலீஸ் கண்ணில் மண்ணை தூவி சிசிடிவி காட்சிகளை அழிப்பது, ஒரு மிகப்பெரிய லாரியின் மேலே போலீஸுக்கு தெரியாமல் படுத்தபடி செல்வது எல்லாம் மிகப்பெரிய லாஜிக் ஓட்டைகள் என்றாலும், அடுத்தடுத்த காட்சிகளின் ஓட்டத்தால் அவை எளிதில் மறக்கடிக்கப்பட்டு விடுகின்றன.
பெர்லின் - கமில் இடையில் காதல் மலரும் காட்சிகள் ஒரு நேர்த்தியான பிரெஞ்சு சினிமாவில் வரும் காதல் காட்சிகளை ஒத்திருக்கிறது. அவற்றில் ஒளிப்பதிவும் இசையும் சேர்ந்து நாம் பார்த்துக் கொண்டிருப்பது த்ரில்லர் சீரிஸ்தானா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் அவை உருவாக்கப்பட்டுள்ளன. அதே போல கேமரூன் - ரோய், கேய்லா - ப்ரூஸ் இடையிலான காதல் காட்சிகள் சிறப்பாக எழுதப்பட்டுள்ளன. மனி ஹெய்ஸ்ட்டிலும் கதாபாத்திரங்களின் காதல் பக்கங்கள் பேசப்பட்டிருந்தாலும் அவற்றை பரபரப்பான கொள்ளை காட்சிகள் ஓவர்டேக் செய்துவிடும். ஆனால் அதில் கொள்ளை காட்சிகளை விட அழுத்தமான காதல் காட்சிகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது சிறப்பு. அதே கதாபாத்திரங்களின் பின்னணியை காட்சிகளாக விரிக்காமல் வசனங்களிலேயே நமக்கு உணர்த்தி விடுவதும் ஆறுதல்.
மனி ஹெய்ஸ்ட்டில் வந்த சில முக்கிய கதாபாத்திரங்களின் சர்ப்ரைஸ் கேமியோக்கள் இதில் உள்ளன. அவை நம் தமிழ்ப் படங்களில் வைப்பது போல பெயரளவில் இல்லாமல் கதையோடு வருவது போல அமைக்கப்பட்டிருப்பது சிறப்பு. எனினும் கடைசி இரண்டு எபிசோட்களை அவசரகதியில் முடித்திருப்பது அப்பட்டமாக தெரிகிறது. அதுவரை பெர்லினுக்கு ஏற்படும் சிக்கல்கள், கடைசி இரண்டு எபிசோட்களில் அடுத்தடுத்து சரியாவது போல வைக்கப்பட்டிருக்கும் காட்சிகள் உறுத்துகிறது. எட்டு எபிசோட் கொண்ட தொடரில் கூடுதலாக இரண்டு எபிசோட்களை நீட்டித்து லாஜிக்குடன் எழுதியிருந்தால் இன்னும் நிறைவு தந்திருக்கும்.
மனி ஹெய்ஸ்ட் போல விறுவிறுப்பும் பரபரப்பும் குறைவாக இருந்தாலும் மனித உணர்வுகளை சற்றே ஆழமாக பேசியதில் ‘பெர்லின்’ தொடர் ஜெயிக்கிறது. லாஜிக் ஓட்டைகளை சரிசெய்து, இறுதிப் பகுதியை அவசரமாக முடிக்காமல் இன்னும் ஆழமாக பேசியிருந்தால் மனி ஹெய்ஸ்ட்டை விட ஒரு படி மேலே கொண்டாடப்பட்டிருக்கும் இந்த ‘பெர்லின்’. இத்தொடர் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் தமிழிலும் காணக்கிடைக்கிறது.
முக்கிய செய்திகள்
ஓடிடி களம்
16 hours ago
ஓடிடி களம்
1 day ago
ஓடிடி களம்
2 days ago
ஓடிடி களம்
2 days ago
ஓடிடி களம்
3 days ago
ஓடிடி களம்
4 days ago
ஓடிடி களம்
7 days ago
ஓடிடி களம்
8 days ago
ஓடிடி களம்
9 days ago
ஓடிடி களம்
9 days ago
ஓடிடி களம்
14 days ago
ஓடிடி களம்
17 days ago
ஓடிடி களம்
20 days ago
ஓடிடி களம்
21 days ago
ஓடிடி களம்
22 days ago