ஓடிடி திரை அலசல் | The Railway Men: பதைபதைக்க வைக்கும் ஒரு பேரழிவின் அதிர்வுகள்!

By கலிலுல்லா

நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் இந்த வாழ்க்கை எவ்வளவு பாக்கியம் நிறைந்தது என்பதை சில வரலாற்று நிகழ்வுகள் நமக்கு உணர்த்திவிடுகின்றன. அந்த வரலாற்றின் பேரழிவு பக்கங்களை புரட்டும்போது, அதில் புரையோடிக்கிடக்கும் வலியும் வேதனையும் அவ்வளவு எளிதில் நம்மிடமிருந்து அகன்றுவிடுவதில்லை. அப்படியான ஒரு பெரும் அழிவின் சாட்சியத்தை வெப் சீரிஸாக வடித்திருக்கிறார் இயக்குநர் ஷிவ் ராவைல். 15,000-க்கும் மேற்பட்ட மக்களின் உயிரைப் பறித்த உலகின் மோசமான தொழிற்சாலை பேரிழிவான ‘போபால் விஷ வாயு’ கசி்வு குறித்து பேசும் இந்தத் தொடர் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி தற்போது காணக் கிடைக்கிறது.

1984-ம் ஆண்டு டிசம்பர் 2-ம் தேதி இரவு போபாலின் ‘யூனியன் கார்பைட் ஆலை’யிலிருந்து Methyl isocyanide (MIC) என்கிற விஷவாயு வெளியான சம்பவத்தில் ஆலை நிர்வாகத்தின் ‘திமிரை’யும், அரசின் அலட்சியத்தையும், வெளிச்சமிட்டு காட்டும் இந்தத் தொடர், போபால் ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் இஃப்தேகார் சித்திகியிடமிருந்து (கேகே மேனன்) தொடங்குகிறது. நேர்மையான அதிகாரியான சித்திகி 10 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த விபத்தில் சிறுவனை காப்பாற்றிய தவறியதால் குற்றவுணர்ச்சியில் இருக்கிறார். சம்பவத்தன்று நைட் ஷிப்ட் வர வேண்டியவர், காலையிலேயே வேலைக்கு வந்துவிடுகிறார். இதற்கு மறுபுறம் யூனியன் கார்பைட் ஆலையிலிருந்து அன்று இரவு விஷ வாயு வெளியேறி மக்கள் உயிரிழக்கின்றனர்.

என்ன நடக்கிறது என்பது புரியாமல் திகைக்கும் சித்திகி மக்களை காபாற்ற போராடுகிறார். அவருக்கு உதவியாக லோகோ பைலட் இமாத் ரியாஸ் (பாபில் கான்) இணைகிறார். அத்துடன் மத்திய ரயில்வேவின் பொது மேலாளர் ரதி பாண்டே (ஆர் மாதவன்) பல்வேறு தடைகளைத் தாண்டி போபால் மக்களுக்கான மருத்துவ உதவிகளை ரயிலில் அனுப்பும் முயற்சிகளில் தீவிரம் காட்டிக்கொண்டிருக்க, முக்கியமான கோப்புகளை அழித்துகொண்டு, பிரச்சினையை அலட்சியமாக கையாள்கிறது யூனியட் கார்பைட் ஆலை நிர்வாகம். இதற்கு நடுவே பத்திரிகையாளரின் புலனாய்வு, பணத்தை கொள்ளையடிக்க வரும் திருடன், இந்திரா காந்தி கொலையின் தாக்கம், ரயில்வே ஊழியரின் மகள் திருமணம் என கிளைக்கதைகள் விரிய முழுமையான பேக்கேஜாக உருவாகியிருக்கிறது ‘தி ரயில்வே மென்’.

கிட்டதட்ட தலா 1 மணி நேரம் கொண்ட 4 எபிசோடுகளையும் ஒரே மூச்சில் பார்த்துவிடும் அளவுக்கான எங்கேஜிங் திரைக்கதை இந்த சீரிஸின் பெரும் பலம். ஒருபுறம் விஷவாயு பரவுவது, மறுபுறம் போபாலுக்குள் வரும் கோரக்பூர் எக்ஸ்பிரஸ் ரயிலை தடுத்து நிறுத்துவது, அந்த ரயிலில் பயந்து பயந்து பயணிக்கும் சீக்கிய குடும்பம், உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டு வர முயலும் பத்திரிகையாளரின் முயற்சி, இதற்கிடையில் மக்களை மீட்க அரசு காட்டும் அலட்சியம், இவ்வளவு பெரிய பிரச்சினையை ஆலை நிர்வாகம் எந்தவித பதற்றமும் இல்லாமல் கையாள்வது என ஒவ்வொரு தரப்பிலும் அழுத்தம் சேர்த்து பார்வையாளர்களை இருந்த இடத்திலிருந்து எழுந்திருக்க விடாமல் பார்த்துக்கொள்கிறார் இயக்குநர்.

குறிப்பாக, வெறும் விஷவாயு சம்பவத்தை மட்டும் பேசாமல் 1984 காலக் கட்டத்தில் இந்திரா காந்தி சுட்டுக்கொல்லப்பட்டச் சம்பவத்தின் எதிரொலியாக சீக்கியர்கள் மீது நடத்தப்பட்ட வன்முறைகளையும், அதையொட்டி இழையோடும் மனித நேயம் என அரசியல் காட்சிகளும் அழுத்தமாக பதிவு செய்யப்படுகின்றன. போபால் விஷவாயு விபத்துக்கு இரு ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான Plant safety assessment file May 1982 Report-ஐ வெளியிடாமல் ஒளித்து வைத்தது, ஊழியர்களுக்குப் பாதுகாப்பு பயிற்சி ஆறு மாதம் என்பதற்கு பதிலாக இரு வாரங்களாக சுருக்குவது; Methyl Iso Cyanide வெளியானதை ரகசியமாக காப்பது என யுனியன் கார்பைட் நிர்வாகத்தையும் சீரிஸ் தோலுரிக்கிறது.

‘ரயில்வே ஸ்டேஷன் மிஷின்களால் இயங்குவதில்லை; மனிதர்களால் இயங்குகிறது’, ‘விஷ வாயு போயிடுச்சு; ஆனாலும் மாஸ்க் போட்டு தான் வாழ்றோம்’ போன்ற வசனங்கள் கவனம் பெறுகின்றன. விஷவாயுவால் ஏற்பட்ட தாக்கம் தலைமுறையாய் தொடர்வதை வெளிப்படுத்தும் காட்சிகள் கலங்கடிக்கின்றன. கர்சீஃப், மாஸ் அணிவது, இடுகாட்டில் குவிந்த பிணங்கள் என கரோனா காலத்தையொத்த சம்பவங்களால் காட்சிகளுடன் எளிதில் கனெக்ட் ஆக முடிகிறது.

காற்றில் கலந்த விஷவாயுவை முறியடிக்கும் சோடியம் தயோசல்பேட் மருத்தை போபாலுக்கு எடுத்துச் செல்ல டெல்லியிலிருந்து கிளம்பிய ஆய்வாளர், அவர் சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பப்படுகிறார். காரணம், அந்த மருந்தை உபயோகப்படுத்தினால் காற்றில் விஷம் கலந்தது உறுதியாகிவிடும் என்பதும், யூனியன் கார்பைடின் தலைவர் ஆண்டர்சன் இந்தியாவிலிருந்து பத்திரமாக அமெரிக்காவுக்கு வெளியேற்றப்படுவது என அரசின் நாடகங்களை தொடர் அம்பலப்படுத்துகிறது.

வயதான ஸ்டேஷன் மாஸ்டராக கேகே மேனன் கண்டிப்புடன் கூடிய இரக்குமுள்ளவராக சம்பந்தப்பட்ட கதாபாத்திரத்திலும், அதற்கு உயிர்கொடுத்த நடிப்பிலும் ஈர்க்கிறார். லோகோ பைலட் இமாத்’தாக நடித்திருக்கும் பாபில்கான், (இம்ரான்கானின் மகன்), மாதவன், திவ்யேந்து, ஜூஹி சாவ்லா உள்ளிட்டோர் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். பிணங்கள் குவிந்து கிடக்கும் சுடுகாட்டில் ரூபைஸின் கேமராவில் இறுதி டாப் ஆங்கிள் ஷாட் பேரழிவின் பெரும்துயரத்தை ஓரிரு நொடிகளில் கடத்திவிடுகிறது. சாம் ஸ்லேட்டர் இசையில் இறுதி எபிசோடில் வரும் பாடல் உருக்கம். சமரசமில்லாத யஷ்ராஜ் பிலிம்ஸின் பிரமாண்ட புரொடக்ஷன் வேல்யூ கதைக்களத்தின் மீதான நம்பகத்தன்மையை கூட்டி நெருங்கத்தை உண்டாக்குவது பாராட்டு.

மொத்தமாக, போபால் விஷவாயு சம்பவத்தையும், அதிலிருக்கும் அரசியலையும், மக்களை காக்க போராடிய ரயில்வே ஊழியர்களின் தியாகத்தையும் வெளிப்படுத்தும் முக்கியமான வரலாற்று ஆவணமாக உருவாகியுள்ளது ‘தி ரயில்வே மென்’ தொடர். பார்த்து முடித்ததும், கொடைக்கானல் யுனிலீவர் ஆலை மற்றும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையும் கண்முன் வந்து செல்கின்றன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE