மும்பையின் மெட்ரிகுலேஷன் பள்ளி ஒன்றில் படித்த 7 நண்பர்களின் பதின்பருவம் தொடங்கி இளமைப் பருவம் வரை அவர்களது வாழ்வில் நடக்கும் சுவாரஸ்ய சம்பவங்களும், திருப்பங்களும்தான் ‘ஜீ கர்தா’ (Jee Karda) வெப் சீரிஸின் ஒன்லைன்.
இயக்குநர் அருணிமா ஷர்மா, ஹுசைன் தலால் மற்றும் அப்பாஸ் தலால் உடன் இணைந்து எழுதி இயக்கியிருக்கும் இந்தி வெப் சீரிஸ் 'ஜீ கர்டா'. மெட்ரோ நகரங்களில் வாழும் லோயர் மிடில் க்ளாஸ், மிடில் க்ளாஸ், அப்பர் மிடில் கிளாஸ் இளைய தலைமுறையின் வாழ்வியல், ஆண் - பெண் உறவுகள் குறித்து பேசுகிறது இந்த இணையத் தொடர். எட்டு எபிசோடுகளைக் கொண்ட இத்தொடர் பதின்பருவம் தொடங்கி திருமண வயது வரை நண்பர்களாக இருக்கும் 7 பேரின் வாழ்வியலின் அக - புற வெளிகளின் வழியே ஊடுருவிச் செல்கிறது. இந்த 7 நண்பர்களின் கடந்த கால நினைவுகளை, நிகழ்காலத்து சம்பவங்களுடன் இணைத்துப் பொருத்திப் பார்த்திருக்கிறது இந்த 'ஜீ கர்டா' வெப் சீரிஸ்.
"நீ உன் அண்ணங்கிட்ட ஜாக்கிரதையா இரு, நீ உன் தகுதியை மட்டும் மறந்துடாதே, நீ அப்பாகிட்ட பாத்து ஜாக்கிரதையா இரு, நீ காதல், கீதல் பண்ணிடாதே, நீ இனிப்புக்கிட்டயே போகாதே, நீ தைரியமா இரு, நீ 22-ல ஜாக்கிரதையா இரு, 2022..." - கிறிஸ்துமஸ் கார்னிவலுக்குச் சென்ற 7 பள்ளி மாணவர்களின் முகம் பார்த்து அவர்களது எதிர்காலத்தைக் கணித்த மந்திரவாதிச் சொல்லும் இந்த குறிச்சொல்லுடன்தான் இந்த வெப் சீரிஸ் தொடங்குகிறது. ஷீத்தல், லாவண்யா (தமன்னா), பிரீத், அர்ஜூன், ரிஷப், ஷாகித் மற்றும் மெல்ராய் உள்ளிட்ட 7 நண்பர்களை பற்றிய கதை என்றாலும், இந்த 7 பேரின் வாழ்க்கை, தனிப்பட்ட முறையில் அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து மிக நெருக்கமாக அலசுகிறது இந்தத் தொடர்.
சமீர் - ஷீத்தல் திருமண நாள் விழாவுக்கு வந்த ரிஷப் லாவண்யாவிடம் புரப்போஸ் செய்கிறார். பழரசக் கலவையின் உற்சாக மிகுதியில் வெளித்தள்ளப்படும் வார்த்தைகளாக இல்லாமல். திருமணத்தை நோக்கி நகர்கிறது இந்த புரப்போஸல். திருமண நாள் நெருங்க நெருங்க ரிஷப், லாவண்யாவிடம் ஏற்படும் நெருக்கமும் பிணக்கமும், உரசலும் விரிசலும் என்ன மாதிரியான பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது. அந்தப் பிரச்சினைகளை சமாளிக்க மற்ற 5 நண்பர்கள் எப்படி ஒருவருக்கொருவர் ஒத்தாசையாக இருக்கிறார்கள். ரிஷப் - லாவண்யா ஜோடி திருமணம் நடந்ததா இல்லையா என்பதுதான் இந்த வெப் சீரிஸின் திரைக்கதை.
» “கன்டென்ட் தான் கிங்” - ‘போர் தொழில்’ குறித்து ராதிகா மகிழ்ச்சி
» ‘ஆதிபுருஷ்’ படத்துக்கு தடை விதிக்க வேண்டும் - பிரதமர் மோடிக்கு திரைப்பட தொழிலாளர் சங்கம் கடிதம்
இந்த வெப் சீரிஸ் மும்பையை கதைக்களமாக கொண்டது. இந்தியாவில் பெங்களூரு, சென்னையின் யுவன் யுவதிகளின் கலாசார பின்புலங்களைவிட, மும்பை சற்று கூடுதலான சிறப்புகளையும், வாழ்வியல் மாற்றங்களையும் கொண்டதாக காணப்படுகிறது. இரவு நேர மெரைன் டிரைவ் போல, கடல்பகுதி இருட்டாகவும், கடற்கரை விளக்குகளின் வெளிச்சத்தைப் பிரகாசித்துக் கொண்டும் இருப்பதைப் போல, அங்குள்ள இளைய தலைமுறைகளின் கலாசார உறவுகளை இந்த வெப் சீரிஸ் பிரதிபலிக்கிறது. இருளின் நிசப்தத்தையும் வெளிச்சத்தின் கதகதப்பையும் அதன் உச்சம் வரை சென்று பார்த்து கொஞ்சி ரசித்து திருப்தி கொள்கின்றன இந்த வெப் சீரிஸின் பெரும்பாலான கதாபாத்திரங்கள்.
ஹைஃபை மாடர்ன் சொசைட்டியின், காதலில் எல்லா தவறுகளும் சரியே என்று பொருள் கொள்ளப்படுகிறது. உணர்விலும், உறவிலும் 'மனசுக்குப் பிடித்ததை செய்வது' உண்மையானது என்பதை நிறுவ முயற்சித்திருக்கும், இத்தொடரில் வரும் கதாப்பாத்திரங்கள் தங்களது மனசுக்குப் பிடித்ததை கிடைத்த நேரத்தில் எல்லாம் பரிசோதித்துப் பார்த்துக்கொள்கின்றன. அப்படி மனசுக்குப் பிடித்ததைச் செய்யும்போது ஏற்படும் சிக்கல்களையும், சந்திக்க நேரிடும் தடைகள் குறித்தும், அதனால் ஏற்படும் மனதளவிலான பாதிப்புகள் பற்றி பேசுகிறது இந்தத் தொடர்.
இதுபோன்ற பிரச்சினைகள் எல்லா மட்டங்களிலும் நிகழ்ந்தாலும், அடுத்தவர் வீட்டுக்குள் நடப்பதை அறிந்துகொள்ள ஆவலைத் தூண்டும் சராசரி மனித மனநிலை வெப் சீரிஸை ஒரே மூச்சில் பார்த்துவிடச் செய்கிறது. அந்தளவுக்கு எங்கேஜிங்காகவே இந்த வெப் சீரிஸ் பார்வையாளர்களை அடுத்தடுத்த எபிசோட்களுக்கு நகர்த்திச் செல்கிறது.
ஆஷிம் குலாட்டி, சுகைல் நய்யார், அன்யா சிங், ஹுசைன் தலால், சாயன் பானர்ஜி, சம்வேத்ன சுவல்கா என பலரும் சீரிஸில் இருந்தாலும், நடிகை தமன்னா ஒட்டுமொத்த பார்வையாளர்களின் விழிப்படலத்தையும் நிறைத்துக் கொள்கிறார். 'லாவு' என்ற கதாப்பாத்திரத்தில் வரும் தமன்னா பார்வையாளர்களின் மனங்களை லாவகமாக கொள்ளை கொள்கிறார். முகம் பார்க்கும் கண்ணாடி முன் தோன்றும் முதல் காட்சியில் இருந்து, காரின் பின்னிருக்கையில் அமர்ந்து செல்லும் இறுதிக் காட்சி வரை, தமன்னாவைப் பார்க்கும் கேமரா லென்ஸின் கண்ணாடிக்கும், நமக்கும் வெட்கத்தில் முகம் சிவந்துப் போகிறது. நவநாகரிக உடையில், தமன்னா வரும் காட்சிகள் கோடை வெயிலைத் தணிக்க கொட்டித் தீர்த்த மழை சாலையில் தேங்குவதைப் போல் பார்வையாளர்களின் மனதில் தேங்கி நிற்கிறது. நெருக்கமான காட்சிகள் தொடங்கி, செய்த தவறுக்காக மனதுருகும் காட்சி வரை அவரது நடிப்பு கவனிக்க வைத்தாலும், இளமையும் அழகும் பார்வையாளர்கள் மனதை கலைத்துவிடுகிறது.
தமன்னா தவிர்த்த ஆஷிம் குலாட்டி, சுகைல் நய்யார், அன்யா சிங், ஹுசைன் தலால், சாயன் பானர்ஜி, சம்வேத்ன சுவல்கா என அனைவருமே தங்களது பங்களிப்பை நிறைவாக செய்துள்ளனர். அதுவும் ஆஷிம் குலாட்டி அர்ஜூன் கதாப்பாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார். பிரீத்தாக வரும் அன்யா சிங் உளவியல் ஆலோசகராக பார்வையாளர்களை ஆற்றுப்படுத்தி ஆறுதலளித்திருக்கிறார்.
ஷாகித் கதாப்பாத்திரத்தில் வரும் ஹுசைன் தலால் தனியார் பள்ளி ஆசிரியராகவும், மிடில் கிளாஸ் மனிதராகவும் மனுசன் பின்னியெடுக்கிறார். அதுவும் வேலைபார்க்கும் பள்ளியில் இருந்து ராஜினாமா செய்துவிட்டு, மாணவர்களைச் சந்தித்துப் பேசும் காட்சிகள் ரசிக்கும்படியாக உள்ளன. ஷீத்தலாக வரும் சம்வேத்ன சுவல்கா, மிடில் கிளாஸ் கூட்டுக் குடும்பத்தில் சந்திக்கும் பிரச்சினைகளையும், அதனால் ஏற்படும் வலிகளையும் பார்வையாளர்களுக்கு இயல்பாக கடத்தியிருக்கிறார்.
மகேந்திர ஷெட்டியின் கேமரா கோணங்களும், காட்சிகளுக்கான லைட்டிங்களும், வெப் சீரிஸ் முழுவதையும் உற்றுநோக்கச் செய்திருக்கிறது. 7 நண்பர்களில் 3 பெண்கள், 4 ஆண்கள் அனைவரையும் காட்சிப்படுத்தியிருக்கும் விதம் பார்வையாளர்களின் கண்களை கவர்ந்திருக்கிறது.
சச்சின் ஜிகாரின் பின்னணி இசையும், பாடல்களும் இந்த இணையத் தொடருக்கு வலு சேர்த்திருக்கிறது. மொத்தத்தில் இந்த வெப் சீரிஸ், மார்டினி கிளாஸ் ஒன்றில் தாராளமாக காமத்தை ஊற்றி, அதனுடன் மிக்ஸிங்குக்காக சென்டிமென்ட், பாடல்கள், குடும்பம், சின்னச் சின்ன சண்டைகள் சேர்த்து குலுக்கி, கலர்புஃல்லான புளூ பெர்ரி பழம் ஒன்றை டம்ளரின் மேல் வைத்து பரிமாறியிருக்கிறார்.
முழுக்க வயது வந்தோருக்கான இந்தத் தொடரை குழந்தைகளுடன் பார்ப்பதை தவிர்க்கவும். தமிழ் டப்பிங் உள்ளது. ஆனாலும், ஹெட்செட் இல்லாமல் பார்க்க முடியாது. அதேபோல், சிறுவயது முதல் கோ-எஜுகேஷன் பள்ளியில் படிக்காதவர்கள், பாரம்பரியம், பண்பாடு, கலாச்சாரங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களுக்கு அந்நியத்தன்மை ஏற்படலாம்.
மெட்ரோ நகரங்களில் வாழும் ஓர் இளமையான கலர்புஃல்லான இளம் வயதுகாரர்களின் உலகத்தை, பார்த்து ரசிக்க விரும்புகிறவர்களை இந்தத் தொடர் ஈர்க்கும். தமிழ் டப்பிங்கில் கொஞ்சம் கெட்ட வார்த்தைகளைக் குறைத்திருக்கலாம் அல்லது மியூட் போட்டிருக்கலாம். இதுபோல, சுட்டிக்காட்ட குறைகள் இருந்தாலும், 'ஜீ கர்தா' இளையோரை வெகுவாக ஈர்க்கவே செய்திருக்கிறது. அமேசான் ப்ரமை் ஓடிடி தளத்தில் இந்தத் தொடர் காணக் கிடைக்கிறது.
முக்கிய செய்திகள்
ஓடிடி களம்
9 hours ago
ஓடிடி களம்
2 days ago
ஓடிடி களம்
3 days ago
ஓடிடி களம்
3 days ago
ஓடிடி களம்
4 days ago
ஓடிடி களம்
5 days ago
ஓடிடி களம்
6 days ago
ஓடிடி களம்
9 days ago
ஓடிடி களம்
10 days ago
ஓடிடி களம்
11 days ago
ஓடிடி களம்
11 days ago
ஓடிடி களம்
16 days ago
ஓடிடி களம்
19 days ago
ஓடிடி களம்
22 days ago
ஓடிடி களம்
23 days ago