ஓடிடி திரை அலசல்: All the bright places - பதின்பருவ வாழ்க்கையின் மீது ஒரு புதிய வெளிச்சம்

By பால்நிலவன்

இன்றைய வளரிளம் பருவத்தினரின் பள்ளிப் பருவ நாட்களில் நடைபெறும் சம்பவங்களை மையப்படுத்திய கதையைக் கொண்டதுதான் ‘ஆல் தி பிரைட் ப்ளேசஸ்’ (All the bright places).

சரி, பள்ளி மாணவர்கள் கதைதானே என்ன பெரியதாக சொல்லிவிடப் போகிறார்கள். மிஞ்சி மிஞ்சி போனால், ஒரு காதல், ஒரு பிரிவு, ஒரு முத்தம், கொஞ்சம் எல்லை மீறல்... இதைத்தானே சொல்லப் போகிறார்கள் என்று நினைத்துக்கொண்டுதான் வெகு சாதாரணமாக படத்துக்குள் நுழைகிறோம். உண்மையில், படம் ரொம்ப சீரியஸாகவெல்லாம் இல்லை. ஐஸ்க்ரீம், பர்கர் சாப்பிட்டுக்கொண்டே பார்க்க வேண்டிய ஒரு படம்தான் இது. ஒரு பெரிய சம்பவத்தை இப்படம் கையாளப் போகிறதோ என்றெல்லாம் கருதினால் அப்படியெதுவும் காட்சி ரீதியான சம்பவங்கள் ஏதுமில்லை. அப்படியெனில் நாம் பர்கரை நிம்மதியாக சாப்பிடலாம்தான். ஆனால், இப்படம் ஓர் அன்பான டியூஷன் ஆசிரியரைப் போல மெல்ல மெல்ல ஓர் அற்புதமான திசையை நோக்கி அழைத்துச் செல்கிறது.

வகுப்பறை, பாட்டு, நட்பு, காதல், பயணங்கள் என்றெல்லாம் நகர்ந்து செல்லும் இப்படத்தில் எதிர்காலம் குறித்த எந்தவித நிச்சயமுமற்ற இன்றைய இளம் தளிர்களின் அந்த ஆளுமை சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை கையில் எடுக்கத் தொடங்குகிறது. இன்றைய வளரிளம் பருவத்தினருக்கு சுய ஆளுமைதான் பிரதானப் பிரச்சினை. தன்னை ஆளத் தெரியாத குழப்பவாதிகளாக பலரும் இருப்பதை அன்றாட வாழ்க்கையிலேயே பார்க்கிறோம். ஆளுமையை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்ற தெளிவு படம் முடியும் தருவாயிலும் பொட்டில் அடித்தாற்போல் சொல்லி நகர்ந்துவிடுகிறது இத்திரைப்படம்.

ஒரு பள்ளி மாணவி தற்கொலைக்கு முனைகிறாள். அவளை சக மாணவன் காப்பாற்றுகிறான். தற்கொலைக்கு ஒரு காரணம் இருக்கிறது. அவன் அவளை மீட்டெடுத்த பிறகு அவர்களுக்குள் நட்பு உருவாகிறது. அதுவே காதலாகவும் மாறுகிறது. பிறகு ஒருநாள் அவன் தற்கொலைக்கு முனைகிறான். அதற்கு வேறு ஒரு காரணம் இருக்கிறது. அவனுடைய சக மாணவி அவனை காப்பாற்றினாளா, அவளால் என்ன செய்ய முடிந்தது என்பதுதான் இப்படத்தின் பின்பாதி நமக்கு முன்வைக்கும் 'யங் அடல்ட்' என்ற களத்தின் ஆய்வு ரீதியான கதை மையம்.

இண்டியானா மாகாணத்தின் ஒரு சிறு ஊர். அவ்வூரின் உயர்நிலைப் பள்ளியில் இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கு புவியியல் ஆசிரியர் ஒரு புராஜெக்ட் தருகிறார். அதாவது இண்டியானாவில் உங்களுக்கு பிடித்த இடங்கள் எது என்பதை தேர்வு செய்து அந்தப் பயணத்தைப் பற்றி அங்கு என்ன பார்த்தோம் என்பதைப் பற்றி எழுதித் தர வேண்டும். தனியாகவும் செல்லாம் இரண்டிரண்டு பேராக நண்பர்கள் துணையோடும் செல்லலாம், அது பிரபலமான இடமாக இருக்கவேண்டிய அவசியமுமில்லை என்கிறார்.

தற்கொலைக்கு முயன்ற தன்னால் காப்பாற்றப்பட்ட வயலட் என்ற மாணவியை சக மாணவன் பிஞ்ச் ஒரு நாள் வாட்ஸ்அப்பில் தனியே சந்திக்க அழைக்கிறான். இரவில் வழக்கமாக அவர் தற்கொலை முயற்சி மேற்கொண்ட அதே இடம் அப்படியான இன்னொரு இரவில் சந்திக்கிறார்கள். அவன் நாம் ஒன்றாக புராஜெக்ட் தொடர்பாக இண்டியானா இடங்களை சுற்றிப் பார்த்து வரலாமா என அழைக்க, அவள் மறுத்து பிரிந்து சென்றுவிடுகிறாள். அவள் மனநிலையில் இன்னமும் அதே பழைய பிரச்சினை. பொதுவாக வகுப்பறையிலேயே அவள் யாரிடமும் பேசுவதில்லை.

அதற்குக் காரணம் அவளுக்கு நேர்ந்த ஒரு கோர விபத்து சம்பவம். பாலத்தின் கீழே குறுக்காக சென்ற கார் விபத்துக்குள்ளாகிவிட மருத்துவமனையில் உயிர் தப்பியிருக்கும் வயலட் என்ற இந்த மாணவிக்கு தன்னுடன் காரில் பயணித்த தன் தங்கை விபத்தில் மரணமடைந்த செய்தியே கிடைக்கிறது. அதன் பிறகு உலகமே மாறிவிடுகிறது. விபத்தின் அதிர்வு ஒரு புறம், தான் உயிர் பிழைத்த பிறகு தனக்கு உயிர்த் தோழியாக இருந்த தங்கையை இழந்த பிறகு இந்த உலகமே இருண்டுபோனது போன்ற உணர்வு இன்னொருபுறம். வயலட் மவுனத்திற்கு இதுதான் காரணம். ஆதனால்தான் வகுப்பறையில் மற்றவர்கள் எல்லாம் பேசி, விளையாடி சிரிக்கையில் இவளால் அவர்களுடன் ஈடுகொடுக்க முடியவில்லை. இதற்கிடையில்தான் பிஞ்ச் என்ற மாணவனை அதே பாலத்தில் சந்திக்கிறாள் வயலட். அவர்களது நட்பு அவன் இடையறாத முயற்சியால் மட்டுமே வளர தொடங்குகிறது.

அடிக்கடி வாட்ஸ்அப் வழியே நுழைத்து நல்ல நல்ல பொன்மொழிகள் மேற்கோள்களை எடுத்துச் சொல்லி அவளது இறுக்கமான தன்மையை அசைத்து மெல்ல அவளை ஒரு சகஜ நிலைக்கு கொண்டு வருகிறான். அதாவது துன்பங்களை கொண்டாட வேண்டாம்; வாழ்க்கையில் வாழக் கிடைத்த சின்னச் சின்ன அழகிய தருணங்களை மட்டுமே கொண்டாட முற்படுவோம் என்பது போன்ற பாஸிட்டி எனர்ஜிடிக் வார்த்தைகள். மேலும், மனநோய் போராட்டத்தில் சிக்கி மீண்டு தனது தனிமைகள் குறித்து நாவல்களை எழுதிய ஆங்கில பெண் எழுத்தாளர் வர்ஜினா உல்ஃப்பை பற்றியும் பேசத் தொடங்க அவள் முகம் மலர்கிறாள். அவளும் வர்ஜினியா உல்ப்பை படித்தவள். எனவே, பதிலுக்கு வேறு சில மேற்கோள்களை அவளும் சொல்கிறாள். இணை பிரியா நட்பின் புதிய முனைக்கு அவர்கள் வருகிறார்கள்.

அவர்கள் அடிக்கடி சந்தித்து ஒருநாள் புராஜெக்ட் தொடர்பாக செல்ல முடிவெடுக்கிறார்கள். அங்கேயும் ஒரு தடை அந்த முன்கோபியுடனா அடிக்கடி மட்டம் அடிக்கும் அந்த பயல் உடனா புராஜெக்ட் என்று சக மாணவ மாணவிகள் கிண்டல் அடிக்கிறார்கள். உண்மைதான். எப்படி வயலட் ஒரு மௌனசாமி என்பதுபோன்ற ஒரு பார்வை வகுப்பறையில் இருக்கிறதோ அதேபோல பிஞ்ச் பற்றியும் அவன் ஒரு முன்கோபி என்று யாரோ பிடிக்காத சிலரால் கிளப்பிவிடப்பட்டிருந்தது.

மாணவன் பிஞ்ச்சின் தந்தை இளம்வயதில் தன்னை கொடுமைப்படுத்தியது, குடும்பம் சிதறுண்டபோக அவர் நடந்துகொண்டவிதங்கள் தற்போத தனது தமக்கையின் நிழலில் அவன் வாழும் சூழல் அடிக்கடி பள்ளிக்கு மட்டம் போட்டுவிட்டு தனிமையை நாடி ஒரு ப்ளுஹோல் போன்ற வனந்தர நீர்த்தடாகத்திற்கு தனிமையை நாடிச் செல்லுதல், பள்ளியில் யாராவது கிண்டலடித்தால் பதிலடியாக கைநீட்டுவது போன்ற அவனது குணங்களை அவள் புரிந்துகொள்வதோடு, அதனை மெல்ல மெல்ல தனது அன்பின் வார்த்தைகளில் அவனை சகஜ நிலைக்கு கொண்டுவர முயற்சிக்கிறாள்.

மெல்லிய சம்பவங்களையே அடிப்படையாக வைத்து கனமான விஷயங்களை பேசும் அற்புத திரைக்தையை Jennifer Niven மற்றும் Liz Hannah ஆகிய இருவரும் உருவாக்கச் சொல்லி இயக்குநர் ஒதுங்கி நின்று அவர்கள் கொடுத்த ஸ்கிரிப்டை வைத்து ஒரு தடத்தை பதிக்கும்விதமான படத்தை இயக்குநர் பிரேட் ஹேலி வலியான இதயங்களுக்கு ஒத்தடம் தரும்விதமாக உருவாக்கித் தந்திருக்கிறார்.

மற்றவர்களின் கிண்டல்களை மீறி அவர்கள் இண்டியானா புராஜெக்ட் பயணம் எப்படி அமைந்தது, அதற்கு பிறகு நேர்ந்த பிரச்சினைகள் என்ன, தன்னை தற்கொலையிலிருந்து மீட்ட சக மாணவனின் சோக முடிவை தன்னால் ஏன் தடுக்க முடியல்லை, பிறகு அப்பிரச்சினையிலிருந்தும் அவள் எப்படி வெளியே வருகிறாள் என்பதை இயக்குநர் பிரேட் ஹேலி காய்ந்த சிமெண்ட சுவரில் பிரைமர் அடித்தற்கு மேலே மேலே இனிய பாடல்கள், இண்டியானா மாகாணத்தின் அழகிய வயல்வெளிகள், நட்பின் விட்டுக்கொடுத்தல்கள், வகுப்பறை அரசல்புரசல்கள், நவீன வாழ்க்கைக்கான சிறந்த மேற்கோள்கள் என விதவிதமான வண்ணங்களை மேலும் மேலும் தீட்டி அழகு செய்வது போல தீட்டிச் செல்கிறார்.

இன்றைய இளைஞர்களின் சின்னச் சின்ன குழப்பத்துக்கெல்லாம் பெரிய முடிவுகளை எடுத்து அனைவரையும் வேதனையில் ஆழ்த்துபவர்களாக அவசர முடிவுக்காரர்களாக இருக்க வேண்டிய தேவையென்ன என்ற கேள்வியை எழுப்பி சின்னச் சின்ன ஏராளமான காட்சிகளுடன் ஒரு புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சியுள்ளார்.

இப்படம் முடிந்தபிறகு இப்படத்தின் பார்வையாளர்களாக இருந்த நாமும் நமது பிரச்சினைகளை எப்படி கையாள்கிறோம் என்பது குறித்தும் இப்படத்தின் நீட்சியாகவே யோசிக்கத் தொடங்கிவிடுகிறோம். ஜெனிபர் நிவன் என்ற பெண்மணி எழுதிய All the bright places என்ற நாவலையே அடிப்படையாகக் கொண்டது இத்திரைப்படம். அந்த நாவலை ஒட்டியே நாம் மறக்கவியலாத இரு மிகச் சிறந்த கதாபாத்திரங்களை, முக்கியமாக அந்த இளம் பையன் பிஞ்ச் கேரக்டரை வடிவமைத்த விதம் அழகு. வயலட்டாக நடித்த எல்லி பேனிங், பிஞ்ச்ஆக நடித்த ஜஸ்டிஸ் ஸ்மித் ஆகிய இருவரும் மிகச் சரியாக பொருந்தியுள்ளனர்.

வெறும் வகுப்பறை பள்ளி வளாகம் என்று இல்லாமல் பல்வேறு தரப்பிலும் கதை கச்சிதமாக நகர்ந்து செல்கிறது. ஒருமுறை வெளியே செல்ல கார் எடுத்துவந்துவிடுகிறான் பிஞ்ச்.. ஒரு கார் விபத்து காரணமாக காரில் செல்வதை வெறுக்கும் வயலட் அவனுடன் காரில் வர மறுக்கும்போது அவள் வீட்டிற்கு சென்று அவளுடைய தாய் தந்தையருடன் பிஞ்ச் பேசி சமாதானப்படுத்தி அழைத்துச் செல்ல விரும்புவான். அவர்கள் ''எங்க பொண்ணுக்கு எது நல்லதோ அதுதான் எங்களுக்கும் நல்லது'' என்று மறுத்துவிடுவார்கள்.

அதேபோல பிஞ்ச்சின் தமக்கை அடிக்கடி தனது தம்பிக்கை அறிவுரைகள் கூறுவார். 'தந்தையின் கொடுமைகள் நிறைந்த பழைய சம்பவங்களை மறந்து ஒழுங்காக பள்ளிக்கு செல்... தனிமையைத் தேடி போக வேண்டாம்...' என இரு தரப்பு பின்னணியும் அழுத்தமாக சொல்லப்பட்டுள்ளன. ஒரு இடத்தில் மட்டும் பயணத்தின் வழியே ஒரு காட்சியில் சற்றே எல்லை மீறல். நல்ல வேளையாக ஒரு ஜம்ப் கட். ஆரம்பத்திலேயே கத்தரி விழ அதை கடந்துவிடுகிறோம். என்றாலும் பதின்பருவத்து மாணவர்கள் எனும்போது இந்த மீறல் தேவைதானா என்றும் கேள்வி எழுகிறது. அப்போதுதான் ''அட நாம் பார்த்துக்கொண்டிருப்பது ஒரு சினிமா ஆயிற்றே'' என்ற ஞாபகம் வருகிறது நமக்கு.

தவிர, வேகம்... துடிப்பு... கோபம்... எல்லாமே உலக அறிஞர்கள் குறித்த மேற்கோள்களை நேரத்துக்கு தகுந்தாற்போல் சொல்லும் லாவகம் என படத்தின் சுவாரஸ்யத்தின் ஆணிவேராக திகழ்கிறது பதின்பருவ மாணவனான பிஞ்ச் கேரக்டர். உண்மையில் தன்னை தற்கொலையிலிருந்து காப்பாற்றிய அப்படியொரு முன்கோபக்காரனை இந்த நாவலாசிரியை சந்தித்திருக்கிறார். அவனது நல்ல சொற்களை கேட்டிருக்கிறார். தனது இழப்புகளின் காரணமாக பேசாமடந்தையாக இருந்த தன்னை கலகலப்பாக்கியவன் அவன்தான். ஆனால், அவன் தற்கொலையை தடுக்கமுடியாத நிலையில் இருந்த நாட்களின் வேதனையை ஆற்றிக்கொள்ளவே இந்த நாவலை எழுதியிருக்கிறார்.

வாழ்க்கையில் ஜெயித்து மேலே எழுந்து வரவேண்டுமேயொழிய, ஒரு பிரச்சினையின் காரணமாக மனம் பாதித்துவிட்டது என்று தலையை கவிழ்ந்துகொண்டு சோகமே உருவாக அப்படியே மண்ணுக்குள் புதைந்துவிட லாகாது என்பதை ஒரு நீதிக் கதை போல சொல்லிக் கொண்டிராமல் கிளைமாக்ஸில் பிஞ்ச் மாணவனுடன் முன்பு சென்ற இண்டியானா வயல்வெளிகளில் செல்கிறாள். தனது வகுப்பறை தோழிகள் தோழர்களுடன் ஆர்ப்பாட்டமின்றி மெல்லிய ஆடல் பாடல் என மறைந்த நண்பனின் சோகத்தை ஆற்றிக்கொள்கிறாள். All the Bright Places திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் பார்க்கக் கிடைக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஓடிடி களம்

15 hours ago

ஓடிடி களம்

3 days ago

ஓடிடி களம்

4 days ago

ஓடிடி களம்

5 days ago

ஓடிடி களம்

5 days ago

ஓடிடி களம்

10 days ago

ஓடிடி களம்

13 days ago

ஓடிடி களம்

16 days ago

ஓடிடி களம்

17 days ago

ஓடிடி களம்

18 days ago

ஓடிடி களம்

18 days ago

ஓடிடி களம்

24 days ago

ஓடிடி களம்

26 days ago

ஓடிடி களம்

26 days ago

ஓடிடி களம்

26 days ago

மேலும்