மோசமான படங்களில் நடிப்பதற்கு பதில் வீட்டில் இருக்கலாம்: மனம் திறந்த மனிஷா கொய்ராலா

By செய்திப்பிரிவு

மும்பை: 'கங்குபாய் கத்யாவாடி' படத்துக்குப் பிறகு பாலிவுட் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகி வரும் வெப் தொடர் ‘ஹீராமண்டி’. நெட்ஃப்ளிக்ஸ் தயாரிக்கும் இத்தொடர் சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டத்தின் பின்னணியில் உருவாகி வருகிறது. இதில் மனிஷா கொய்ராலா, சோனாக்‌ஷி சின்ஹா, அதிதி ராவ் ஹைதரி, ரிச்சா சதா, ஷர்மின் சேகல் மற்றும் சஞ்சீதா ஷேக் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். சுந்திரத்திற்கு முந்தைய இந்தியாவில் அதிகம் அறியப்படாத பாலியல் தொழிலாளர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்தத் தொடர் உருவாக உள்ளது.

இந்த நிலையில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு ‘ஹீராமண்டி’ தொடர் தனக்கு ஒரு திருப்புமுனையாக இருக்கும் என்று நடிகை மனிஷா கொய்ராலா தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேட்டி ஒன்றில் பேசிய அவர் கூறியுள்ளதாவது:

வெற்றி என்பது என்னைப் பொறுத்தவரை நாம் செய்ய விரும்பும் விஷயங்களை, செய்ய விரும்பும் நேரத்தில் சுதந்திரமாக செய்ய முடிவதுதான். இந்த துறையின் மீதான காதல்தான் என்னை தொடர்ந்து இயங்க வைக்கிறது. நடிப்பு மற்றும் சினிமாவை நான் மிகவும் நேசிக்கிறேன்.

நான் என்னுடைய கரியரை தொடங்கும்போது நாட்குறிப்பின் பக்கங்களை நிரப்புவது மிகவும் முக்கியம். அதாவது ஒரு நடிகர் அல்லது நடிகை அடுத்த 3 ஆண்டுகளுக்கு பிஸியாக இருந்தால், அவர்தான் வெற்றிகரமான நடிகராக வருவார் என்று எனக்கு சொல்லப்பட்டது. எனவே நான் அதில் தான் கவனம் செலுத்தினேன்.

ஆனால் மோசமான படங்களில் நடிப்பதற்கு பதில், வீட்டில் இருந்து குடும்பத்துடன் நேரம் செலவழிப்பது, தோட்டத்தை பராமரிப்பது, பயணம் மேற்கொளவது, ட்ரெக்கிங் செய்வது போன்ற நமக்கு பிடித்த விஷயங்களில் ஈடுபடலாம்.

ஆரம்பத்தில் நான் நடித்த ‘1942: எ லவ் ஸ்டோரி’, ‘பம்பாய்’ ஆகிய படங்கள் எனக்கு திருப்புமுனையாக அமைந்தன. அதே போல ‘ஹீராமண்டி’ படமும் 20 ஆண்டுகளுக்குப் பிறகு எனக்கு திருப்புமுனையாக அமையும் என்று நம்புகிறேன்.

ஒரு நடிகையாக, நாங்கள் எப்போதும் ஆண் நடிகர்களுக்கு அடுத்த இடத்தில் இருப்பதை இயல்பாக எடுத்துக் கொள்கிறோம். இது ஒரு ஆணாதிக்கம் நிறைந்த துறை. சஞ்சய் லீலா பன்சாலி போன்ற ஒரு சில இயக்குநர்களின் படங்களில் மட்டுமே பெண்கள் பிரதான பாத்திரங்களாகவும், பாக்ஸ் ஆபீசில் பெரும் வெற்றி கொடுப்பவர்களாகவும் இருக்கின்றனர்.

இவ்வாறு மனிஷா கொய்ராலா கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE