“ஓடிடியில் படைப்புச் சுதந்திரத்தின் பெயரில் அதிகரிக்கும் ஆபாசத்தை ஏற்க முடியாது” - மத்திய அமைச்சர்

By செய்திப்பிரிவு

படைப்பு சுதந்திரம் என்ற பெயரில் ஓடிடி தளங்களில் ஆபாசம் மற்றும் நாகரிகமற்ற நடத்தைகள் அதிகரித்து வருவதை எந்த வகையிலும் ஏற்றுகொள்ள முடியாது என மத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பத்திரிகையாளர் சந்திப்பின்போது பேசிய அனுராக் தாக்கூர், “படைப்பாற்றல் என்ற பெயரில் ஆபாசம், வசைமொழி மற்றும் நாகரிகமற்ற நடத்தையை பொறுத்துக் கொள்ள முடியாது. ஓடிடியில் ஆபாசமான உள்ளடக்கம் அதிகரித்து வருவதாக புகார் எழுந்துள்ளதால் அரசு அதை தீவிரமாக கண்காணித்து வருகிறது. இது தொடர்பான விதிகளில் ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டியிருந்தால் அதையும் செய்ய தயாராக இருக்கிறோம்.

ஆபாச கன்டென்டுகளை தடுக்க கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். ஒரு படைப்பின் தயாரிப்பாளர் நிலையிலேயே இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். 90 சதவீத புகார் முதல் ஸ்டேஜிலேயே தீர்வு காணப்பட வேண்டும். அதைத்தாண்டி இந்த புகார்கள் அரசாங்கத்தின் கவனத்திற்கு வந்தால் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

கடந்த சில நாட்களாக ஓடிடி படைப்புகளின் மீதான புகார்கள் அதிகரித்து வருகின்றன. படைப்பாற்றலை வெளிப்படுத்த மட்டுமே சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது; ஆபாசத்துக்காக அல்ல. ஓடிடி தளங்களின் இந்த போக்கு கவலைக்குரியது” என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE