“அயலியை அம்மாவுடன் சேர்ந்து பாருங்கள்” - வெற்றி விழாவில் இயக்குநர் முத்துகுமார் பேச்சு

By செய்திப்பிரிவு

“‘அயலி’ இணையதொடர் மூலம் நிகழ்ந்துள்ள மாற்றம் நான் எதிர்பாராதது. தொடரை உங்கள் அம்மாவுடன் சேர்ந்து பாருங்கள்” என தொடரின் இயக்குநர் முத்துகுமார் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனவரி 26-ம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியான ‘அயலி’ இணையத்தொடர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இத்தொடர் 50 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது. 4 வாரங்களைக் கடந்தும், பார்வையாளர்களின் விருப்பத் தேர்வாக முன்னணியில் உள்ளது. இந்நிலையில், இந்த சீரிஸின் வெற்றிக் கொண்டாட்டம் சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப்பில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் முத்துக்குமார், “வெப் சீரிஸ் என்பதால் நிறைய கதாபாத்திரங்கள் தேவைப்பட்டது. அதில் ஒப்பீட்டளவில் முக்கியத்துவத்தில் மாறுபாடு இருக்கும். ஆனால், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் சீனியர் நடிகர்கள் நடித்துகொடுத்தனர்.

வெப் சீரிஸ் வெளியான பிறகு நடந்த சம்பவங்கள் அனைத்தும் எதிர்பாராதது. நினைத்துக்கூட பார்க்காத பல சம்பவங்கள் நடந்தது. திரையுலகினர் பலரும் தொடர்பு கொண்டு பேசினர். அரசியலில் இருப்பவர்களும் வாழ்த்தினர். மாதவிடாய் காலங்களில் பெண் ஒருவர் பூஜை அறைக்குச் சென்றது குறித்த மாற்றங்களை நிறைய பேர் என்னிடம் கூறும்போது நெகிழ்ந்தேன். சினிமா சமூகத்தில் மாற்றத்தை உண்டாக்கும் என நான் நினைத்ததில்லை. காரணம் ஏற்கெனவே மாற்றத்திற்காக சமூகத்தில் போராட்டிக்கொண்டிருப்பவர்களுக்கு பக்கபலமாக சினிமா இருக்கும் என நான் நினைத்திருந்தேன். ஆனால் தற்போது இந்த மாற்றங்கள் மூலம் சினிமாவால் மாற்றங்களை அரங்கேற்ற முடியும் என்பதை புரிந்துகொண்டுள்ளேன்.

எல்லோரின் தனிப்பட்ட சம்பவங்களும் வெளியே வரும்போது ‘அயலி’ பெரிய அளவில் வீடுகளில் சென்று சேர்ந்தாள். ‘அயலி’யை உங்கள் அம்மாவுடன் சேர்ந்து பாருங்கள். நான் இதனை படமாக்கலாம் என நினைத்தபோது என் அம்மாவும் இதை எதிர்கொண்டிருக்கலாம் என தோன்றியது. தொடரில் அனுமோல் கதாபாத்திரம் பக்கத்திலிருப்பவரின் ஸ்லேட்டை பார்த்து எழுதி டீச்சரிடம் அடிவாங்கினது என் அம்மா சொன்னது. நிறைய பெண்கள் சந்தித்த பிரச்சினைகளை தொடருக்காக நான் பயன்படுத்திக்கொண்டேன். அவர்கள் தான் இந்தக்கதைக்கு காரணம். பெண் மைய கதாபாத்திர கதையாக இருந்தாலும், ஆண் கதாபாத்திரங்களும் கதைக்காக உள்ளே வந்து நடித்தது அந்த மைண்ட் செட் எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. மொத்தக் குழுவும் என் மீது நம்பிக்கை வைத்தார்கள்” என்றார்.

தொடரின் எழுத்தாளர் சச்சின் பேசுகையில், “ஓடிடி தளம் தமிழில் அறிமுகமாகும்போது மேம்போக்கான கேளிக்கை கொண்ட கதைகளைத் தேர்வு செய்தது, ஆனால் இப்போது அயலிக்குக் கிடைத்துள்ள வரவேற்பு புது பெஞ்ச்மார்க்கை உருவாக்கியுள்ளது, எமோஷன் கலந்த குடும்ப கதை அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் சேர்ந்துள்ளது, அவர்களின் அன்றாட வாழ்வில் ஒப்பிடும் அளவிற்கு இது அமைந்துள்ளது” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE