கரோனா காலகட்டத்தில் திரையரங்குகள் உலகம் முழுவதும் மூடப்பட்டதால் ஓடிடி தளங்கள் அசுர வளர்ச்சியைப் பெற்றன. உலகளாவிய திரைப்படங்கள், வெப் சீரிஸ் பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. புதிய ஓடிடி தளங்களில் வருகையும் அதிகமானது. இதற்கு இந்தியாவும் விதிவிலக்கல்ல. ஊரடங்கினால் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்க வேண்டிய நிலைக்கு ஆளான மக்கள், திரையரங்குகளுக்கு மாற்றாக ஓடிடி தளங்களைத் தேடிச் சென்றனர். ஓடிடி தளங்களும் அவ்வப்போது போட்டி போட்டுக் கொண்டு ஆஃபர்களை அள்ளித் தெளித்தன.
ஓடிடி தளங்களில் உலகம் முழுவதும் அதிக சந்தாதாரர்களைக் கொண்டு முதலிடத்தில் நெட்ஃப்ளிக்ஸ் தளம் இருந்து வருகிறது. கரோனா காலகட்டத்துக்குப் பிறகு நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 20 கோடியை கடந்துள்ளது. ஆனால், மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் நெட்ஃப்ளிக்ஸில் நிலை படுமோசமாக உள்ளது. அதிலும் குறிப்பாக தனது போட்டி நிறுவனங்களான டிஸ்னி + ஹாட்ஸ்டார் மற்றும் அமேசான் ப்ரைம் நிறுவனங்களை விட பல மடங்கு பின்தங்கி இருக்கிறது நெட்ஃப்ளிக்ஸ். இந்தியாவில் 4.6 கோடி சந்தாதாரர்களை பெற்று டிஸ்னி + ஹாட்ஸ்டார் முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் 1.9 கோடி சந்தாதாரர்களை பெற்று அமேசான் ப்ரைம் வீடியோ இரண்டாம் இடத்தில் உள்ளது. உலகிலேயே முதலிடத்தில் இருப்பதாக மார்தட்டிக் கொள்ளும் நெட்ஃப்ளிக்ஸ் தளத்துக்கோ வெறும் 50 லட்சம் சந்தாதாரர்கள் மட்டுமே இந்தியாவில் இருக்கின்றனர்.
2018-ஆம் ஆண்டு டெல்லியில் நடந்த ஒரு கருத்தரங்கில் பேசிய நெட்ஃப்ளிக்ஸ் சிஇஓ ரீட் ஹேஸ்டிங்ஸ் “எங்கள் தளத்தின் அடுத்த 10 கோடி சந்தாதாரர்கள் இந்தியாவிலிருந்து வருவார்கள்” என்று ஆரூடம் கூறியிருந்தார். ஆனால் ஏறக்குறைய 3 ஆண்டுகள் ஆகியும், அதில் ஒரு சதவீதத்தை கூட நெட்ஃப்ளிக்ஸ் தளத்தால் அடைய முடியாமல் போனது துரதிர்ஷ்டம்.
இதே ரீட் ஹேஸ்டிங்ஸ் கடந்த வாரம் ஒரு நிகழ்வில் பேசும்போது, ‘உலகம் முழுவதுமுள்ள ஒவ்வொரு பெரிய சந்தையிலும் எங்கள் கொடி பறக்கிறது. ஆனால், இந்தியாவில் நாங்கள் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை என்பது எங்களுக்கு ஏமாற்றத்தை தருகிறது” என்று அதிருப்தி தெரிவித்துள்ளார்.
2018-ஆம் ஆண்டு முதன்முறையாக நெட்ஃப்ளிக்ஸ் தளம் தனது ஒரிஜினல் படைப்பான ‘சேக்ரட் கேம்ஸ்’ தொடரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. அத்தொடர் பெற்ற வரவேற்பால் நெட்ஃப்ளிக்ஸ் தளம் இந்தியாவில் அபார வளர்ச்சி பெறும் என்று சினிமா ஆர்வலர்கள் கணித்தனர். ஆனால் நடந்ததோ வேறு.
இந்தியாவை பொறுத்தவரை ஸ்மார்ட் டிவி பயன்படுத்துவோர் எண்ணிக்கை மிக மிக குறைவு. மின்சார வசதியே இல்லாத கிராமங்களும் கூட இன்னும் இருக்கத்தான் செய்கின்றன. இந்தியாவில் 20 கோடி பேர் சொந்த டிவி வைத்துள்ளதாகவும், அவர்கள் அந்த டிவிக்காக மாதம் வெறும் 200 ரூபாய் மட்டுமே செலவழிப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
நெட்ஃப்ளிக்ஸோடு ஒப்பிடுகையில் டிஸ்னி + ஹாட்ஸ்டார் மற்றும் அமேசான் ப்ரைம் உள்ளிட்ட தளங்கள் மக்களிடம் பரவலாக சென்று சேர்ந்ததற்கு பிரதான காரணம், கட்டணம். நெட்ஃப்ளிக்ஸை பொறுத்தவரை மொபைல் ப்ளான் ரூ.149 ரூபாயாகவும், 4 பேர் சேர்ந்து பார்க்க கூடிய ப்ரீமியம் கட்டணம் 649 ரூபாயாகவும் உள்ளது. மேற்குறிப்பிட்ட மற்ற தளங்களுக்கான வருடாந்திர கட்டணமே 1500 ரூபாயாக இருக்கும்போது நெட்ஃப்ளிக்ஸ் தளத்தின் ஒரு மாதம் கட்டணம் என்பது ஒரு சராசரி நடுத்தர குடும்பத்துக்கு மிக அதிகமானதாக பார்க்கப்படுகிறது.
டிஸ்னி + ஹாட்ஸ்டாரை பொறுத்தவரை அத்தளம் வெறும் திரைப்படம், வெப் சீரிஸ்களோடு நின்று விடாமல் ஐபிஎல், பிக் பாஸ் உள்ளிட்ட ரியாலிட்டி ஷோக்களை கையில் எடுத்ததே அதன் வெற்றிக்கு இன்னொரு முக்கிய காரணம். அமேசான் ப்ரைம் தளத்தை பொறுத்தவரை அதில் சந்தாதாரராக இணையும் போது கூடவே அமேசான் ஆன்லைன் ஷாப்பிங் தளத்திலிருந்து இலவச டெலிவரி உள்ளிட்ட ஏராளமான சலுகைகளும் கிடைக்கின்றன. திரைப்படங்கள் என்று பார்த்தாலும் இந்தியாவில் வெற்றி பெறும் 40 சதவீதத்துக்கும் அதிகமான படங்கள் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியானவையாக இருக்கின்றன. வெப் சீரிஸ் என்று பார்த்தாலும் ‘தி ஃபேமிலி மேன்’, ‘மிர்ஸாபூர்’ போன்ற அமேசானின் ஒரிஜினல் படைப்புகள் அடைந்த ரீச் அளப்பரியது.
நெட்ஃப்ளிக்ஸும் தன்னால் இயன்ற அளவு சந்தாதாரர்களை ஈர்க்கும் நோக்கில் சமீபமாக தன் கட்டணத்தை 60% வரை குறைத்துப் பார்த்தது. ஆனாலும் அந்த முயற்சி சொல்லிக் கொள்ளும் அளவில் கைகொடுத்ததாக தெரியவில்லை. இது தவிர்த்து 50-க்கும் அதிகமான படங்கள் மற்றும் வெப் சிரீஸ் ஆகியவற்றில் சுமார் 400 மில்லியன் அமெரிக்க டாலர்களை நெட்ஃப்ளிக்ஸ் முதலீடு செய்துள்ளது. அதில் ஏறக்குறைய 30 இந்திப் படங்களும் அடங்கும். இதில் 2019-ஆம் ஆண்டு வெளியான ‘கோடா ஃபாக்டரி’ தொடர் மட்டுமே அதிகம் பார்க்கப்பட்ட டாப் 10 பட்டியலில் இடம்பிடித்திருந்தது. சமீபத்தில் வெளியான ‘டீகப்புள்ட்’, ‘மீனாட்சி சுந்தரேஷ்வர்’ உள்ளிட்ட படைப்புகளும் நெகட்டிவ் விமர்சனங்களையே சந்தித்தன. உலகளாவிய அளவில் ‘மனி ஹெய்ஸ்ட்’, ‘ஸ்க்விட் கேம்’, ‘நார்கோஸ்’ உள்ளிட்ட தொடர்கள் பெரும் வரவேற்பு இந்திய கன்டென்டுகளுக்கு எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது.
இந்தியில் மட்டுமே கவனம் செலுத்தாமல் அந்தந்த மாநிலங்களுக்கான உள்ளடக்கங்களிலும் பரவலாக கவனம் செலுத்தினால், இன்னும் அதிக இந்தியர்களை நெட்ஃப்ளிக்ஸ் சென்றடைய முடியும் என்கிறனர் சினிமா ஆர்வலர்கள்.
முக்கிய செய்திகள்
ஓடிடி களம்
5 hours ago
ஓடிடி களம்
1 day ago
ஓடிடி களம்
1 day ago
ஓடிடி களம்
2 days ago
ஓடிடி களம்
3 days ago
ஓடிடி களம்
4 days ago
ஓடிடி களம்
7 days ago
ஓடிடி களம்
8 days ago
ஓடிடி களம்
9 days ago
ஓடிடி களம்
9 days ago
ஓடிடி களம்
14 days ago
ஓடிடி களம்
17 days ago
ஓடிடி களம்
20 days ago
ஓடிடி களம்
21 days ago
ஓடிடி களம்
22 days ago