ரவி தேஜாவின் ‘மிஸ்டர் பச்சன்’ செப்.12-ல் ஓடிடியில் ரிலீஸ்!

By செய்திப்பிரிவு

சென்னை: ரவி தேஜா நடித்துள்ள ‘மிஸ்டர் பச்சன்’ திரைப்படம் வரும் செப்டம்பர் 12-ம் தேதி ஓடிடியில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் ஹரிஷ் ஷங்கர் தமிழில் வெளியான ‘ஜிகர்தண்டா’ படத்தை ’கடலகொண்ட கணேஷ்’ என்ற பெயரில் தெலுங்கில் ரீமேக் செய்தார். இந்தப் படம் ஓரளவு வெற்றி பெற்றது. இதையடுத்து அவர் ரவி தேஜாவை வைத்து ‘மிஸ்டர் பச்சன்’ படத்தை இயக்கினார். இந்தப் படம் இந்தியில் 2018-ம் ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற ‘ரெய்டு’ படத்தின் தழுவலாக உருவானது. படம் ரூ.80 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படுகிறது. படத்தை பீபிள் மீடியா ஃபேக்டரி நிறுவனம் தயாரித்தது. சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 15-ம் தேதி படம் திரையரங்குகளில் வெளியானது.

ஆனால், எதிர்மறையான விமர்சனங்களால் முதல் நாளில் இருந்தே படம் வரவேற்பை பெறவில்லை. ரூ.80 கோடி பட்ஜெட் கொண்ட படம் மொத்தமாகவே ரூ.15 கோடியை கூட வசூலிக்கவில்லை என கூறப்படுகிறது. படத்தின் நஷ்டத்தை கணக்கில் கொண்டு நடிகர் ரவி தேஜா தயாரிப்பு நிறுவனத்துக்கு ரூ.4 கோடி தனது ஊதியத்திலிருந்து திருப்பி கொடுத்தார். இந்நிலையில், இப்படம் வரும் வியாழக்கிழமை (செப்.12) நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படத்தை தெலுங்கு தவிர்த்து, தமிழ், மலையாளம், கன்னட மொழிகளில் பார்க்க முடியும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE