“காடுகளில் நிகழும் கொடூரக் குற்றங்களை ‘போச்சர்’ சீரிஸ் வெளிச்சமிட்டு காட்டுகிறது” - ஆலியா பட்

By செய்திப்பிரிவு

மும்பை: “நமது நாட்டில் உள்ள காடுகளில் நிகழும் கொடூரக் குற்றங்களை வெளிச்சமிட்டு காட்டும் தொடர் இது” என்று ‘போச்சர்’ வெப் சீரிஸ் குறித்து ஆலியா பட் தெரிவித்துள்ளார்.

2019-ம் ஆண்டு வெளியான ‘டெல்லி க்ரைம்’ தொடரை இயக்கி கவனம் பெற்றவரும், எம்மி விருது பெற்றவருமான ரிச்சி மேத்தா இயக்கியுள்ள புதிய வெப் சீரிஸ் ‘போச்சர்’ (Poacher). இதில் நிமிஷா சஜயன், ரோஷன் மேத்யூ ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள இத்தொடர் இந்திய வரலாற்றில் வனப்பகுதிகளில் நடந்த சட்டவிரோத குற்றங்களை பேசுகிறது.

மேலும், சூழலியல் பாதுகாப்பு, சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டிய உலகளாவிய தேவை உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ளது. வரும் பிப்ரவரி 23-ம் தேதி இந்தத் தொடர் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

இந்நிலையில், தற்போது இந்தத் தொடரின் எக்ஸிகியூட்டிவ் புரொடியூசராக இணைந்துள்ளார் நடிகை ஆலியா பட். இது தொடர்பாக அவர் கூறுகையில், “முக்கியத்துவம் வாய்ந்த இந்த வெப் சீரிஸின் ஒரு பகுதியாக நானும் இருப்பதை நினைத்து பெருமை கொள்கிறேன்.

இந்தத் தொடரின் கதைசொல்லல் முறையும், நமது காடுகளில் நடந்த கொடூரக் குற்றங்களை வெளிச்சமிட்டு காட்டும் உண்மை சம்பவங்களும் என்னை கவர்ந்தது. அனைத்து உயிர்களிடமும் கருணையுடனும், இரக்கத்துடன் இருக்க வேண்டிய அவசியத்தை கூறும் முக்கியமான வெப் சீரிஸாக இது இருக்கும் என நம்புகிறேன்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE