நகைச்சுவை கலைஞர் விர் தாஸுக்கு சர்வதேச எம்மி விருது 

By செய்திப்பிரிவு

நியூயார்க்: இந்திய நகைச்சுவை கலைஞர் விர் தாஸுக்கு 2023ஆம் ஆண்டு சர்வதேச எம்மி விருது வழங்கப்பட்டுள்ளது.

டிவி தொடர்கள், நிகழ்ச்சிகள், ஓடிடி தொடர்கள் ஆகியவற்றுக்கு ஆண்டுதோறும் எம்மி விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்த் ஆண்டுக்கான சர்வதேச எம்மி விருதுகள் நிகழ்ச்சி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்றது. இதில் பல்வேறு பிரிவுகளில் சிறந்த படைப்புகள் மற்றும் கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

இந்தியாவைச் சேர்ந்த மேடை நகைச்சுவை கலைஞரும் நடிகருமான விர் தாஸ் நடத்திய, ‘விர் தாஸ்: லேண்டிங்’ என்ற நிகழ்ச்சி நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சிறந்த நகைச்சுவை பிரிவில் விருது வழங்கப்பட்டது. இந்த விருதினை விர் தாஸ் பெற்றுக் கொண்டார்.

மேடையில் பேசிய விர் தாஸ், “நான் இந்தியாவுக்காக இங்கே வந்திருக்கிறேன். உங்கள் சிரிப்புக்கு நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். இது அன்பின் சிம்ஃபொனி, இது சுதந்திரத்தின் இசைக்குழு, நாம் தனியாக இல்லை என்பதை நினைவூட்டும் ஒரு உலகளாவிய பாடல்வரி. இது இந்த முட்டாளின் வாழ்க்கையில் இடம்பெற்றுள்ள ஒரு பாடல். ஒட்டுமொத்த உலகமும் எங்களுடன் நடனமாடும் வரை அது சத்தமாக பாடட்டும். நன்றி. நமஸ்தே. ஜெய்ஹிந்த். அஸ்ஸலாமு அலைக்கும். சத் ஸ்ரீ அகாள். அன்பும் அமைதியும். நன்றி” என்று தெரிவித்தார்.

கடந்த 2021ஆம் ஆண்டு வாஷிங்டனில் நடைபெற்ற ஒரு காமெடி நிகழ்ச்சியில், இந்தியா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும் அவரது பேச்சுக்கு சமூக வலைதளங்களில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது நினைவுகூரத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE