‘தி வில்லேஜ்’ புதிய அனுபவத்தைக் கொடுக்கும்: ஆர்யா

By செய்திப்பிரிவு

சென்னை: நயன்தாரா நடித்த ‘நெற்றிக்கண்’ படத்தை இயக்கியவர் மிலிந்த் ராவ். இவர் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள வெப் தொடர் ‘தி வில்லேஜ்’. தமிழின் முதல் கிராஃபிக்ஸ் நாவல் வெப்சீரிஸ் இது. இதில், திவ்யா பிள்ளை, ஆடுகளம் நரேன், தலைவாசல் விஜய், முத்துகுமார், தலைவாசல் விஜய், ஜார்ஜ் மரியான் உட்பட பலர் நடித்துள்ளனர். ஸ்டூடியோ சக்தி நிறுவனம் தயாரித்துள்ள இத்தொடர் நவ. 24-ம்தேதி அமேசான் பிரைம் தளத்தில் வெளியாக இருக்கிறது. இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. விழாவில் ஆர்யா பேசியதாவது:

நம் ரசிகர்கள், கொரியன் உட்பட மற்ற நாட்டின் வெப் தொடர்களைப் பார்த்து வியக்கிறார்கள். இந்த ‘தி வில்லேஜ் தொடர்’, நம் மண் சார்ந்த வித்தியாசமான கதையோடு வந்திருக்கிறது. இது போன்ற ஒரு வெப் தொடர் தமிழில் இதற்கு முன் வந்ததில்லை. இது ஒரு மிரட்டலான விஷுவல் அனுபவத்தைக் கொடுக்கும். வழக்கமாக ஒரு படத்துக்கு ஆகும் செலவை விட 3 மடங்கு பட்ஜெட் அதிகமானது. அந்த அளவுக்கு விஷூவல் எபெக்ட்ஸ், பிராஸ்தடிக் மேக்கப் ஆகியவை தேவைப் பட்டது. மேக்கப்புக்கு மட்டும் ரூ.3 கோடிவரை செலவு செய்திருக்கிறார்கள். பெரும்பாலும் இதன் கதை இரவில் நடக்கிறது. தூத்துக்குடி அருகே இருக்கும் ஒரு கற்பனை கிராமத்தில் கதை நடப்பது போல அமைக்கப்பட்டுள்ளது.

இதில் ஆக்‌ஷன் காட்சிகளும் வியக்கும்படி இருக்கும். விஎப்எக்ஸ் காட்சிகளுக்கு மட்டும் அதிக நாட்கள் எடுத்துக் கொண்டோம். இந்தக் கதையை சினிமாவாக எடுக்க முடியாது. வெப் தொடராக மட்டுமே எடுக்க முடியும். அதற்காகவே இதைத் தேர்வு செய்து நடித்தேன். தினமும் 20 மணிநேரம் இதன் படப்பிடிப்பு நடந்தது. பிராஸ்தடிக் மேக்கப் போட்டு நடிப்பது கஷ்டம். ஒரு கட்டத்தில் இந்தப் படப்பிடிப்பு முடிந்தால் சரி என்று யோசிக்கத் தோன்றியது. இந்த தொடர் ரிலீஸ் ஆனாலே சக்சஸ் பார்ட்டி வைக்க வேண்டும் என்று சொன்னேன். அந்தளவுக்கு சுமார் 3 வருடங்கள் பணியாற்றினோம். இந்த மாதிரி ஒரு கதை இந்திய ஓடிடி தளத்தில் வந்ததில்லை. இது ரசிகர்களுக்கு புது அனுபவத்தைக் கொடுக்கும்.

இவ்வாறு ஆர்யா கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE