நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் உலக அளவிலான டாப் 10-ல் ‘மாமன்னன்’

By செய்திப்பிரிவு

சென்னை: மாரி செல்வராஜ் இயக்கிய ’மாமன்னன்’ திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியான ஒரே வாரத்தில் 12 லட்சம் பார்வைகளைப் பெற்றுள்ளது. மேலும், உலகளவிலான டாப் 10 படங்களில் ஒன்பதாவது இடத்தைப் பிடித்துள்ளது.

‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’ படத்தைத் தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கி இருந்த திரைப்படம் ‘மாமன்னன்’. உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரித்த இப்படத்தில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். இந்தப் படத்தில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் வடிவேலு ஆகியோர் பிரதான கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். முக்கிய கதாபாத்திரத்தில் ஃபஹத் பாசில் நடித்திருந்தார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளிவந்த திரைப்படம்.

கட்சிக்குள் இருக்கும் சாதி ரீதியிலான ஏற்றத்தாழ்வுகளை அழுத்தமாக சொன்ன திரைப்படம். பரவலான வரவேற்பை பெற்றிருந்தது. 35 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்தத் திரைப்படம் இதுவரை சுமார் 62 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. கடந்த 27ஆம் தேதி இப்படம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியானது. வெளியான நாள்முதல் இப்படம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் இந்திய அளவிலான ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.

இந்த நிலையில், நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் உலகளவிலான டாப் 10 படங்களில் ஒன்பதாவது இடத்தை ‘மாமன்னன்’ பிடித்துள்ளது. அதில் இந்தியா, கத்தார், துபாய் உள்ளிட்ட மூன்று நாடுகளில் முதலாவது இடத்தையும், ஆறு நாடுகளில் முதல் பத்து இடங்களிலும் இப்படம் இடம் பெற்றுள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் நெட்ஃப்ளிக்ஸில் 12 லட்சம் பார்வைகளை இப்படம் பெற்றுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE