மாடர்ன் லவ்: சென்னை Review | லாலாகுண்டா பொம்மைகள்

By சல்மான்

நகர்ப்புற காதலையும் அதைச் சுற்றி நடக்கும் சிக்கல்களையும் பேசும் ‘மாடர்ன் லவ்: சென்னை’ ஆந்தாலஜி தொடர் இன்று அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகியுள்ளது. இதில் முதல் படமாக இடம்பெற்றிருப்பது ராஜுமுருகனின் ‘லாலாகுண்டா பொம்மைகள்'.

உழைக்கும் வர்க்கம் மிகுதியாய் வசிக்கும் வடசென்னை பின்னணியில் கதை தொடங்குகிறது. தவறான காதல் சகவாசத்தால் கருகலைப்பு செய்து அதன் அதிர்ச்சியில் இருந்து மீளாமல் இருந்து வருகிறார் இளம்பெண் ஷோபா (ஸ்ரீ கௌரி பிரியா). அவருக்கு தோழியாகவும், உடன்பிறவா சகோதரியாகவும் இருக்கிறார் வைஜெயந்தி (வசுந்த்ரா காஷ்யப்). ஷோபாவின் உடலிலும் மனதிலும் முதல் காதல் ஏற்படுத்திய ரணத்தை மெல்ல ஆறச் செய்கிறது பானி பூரி விற்கும் வடமாநிலத்தவரான நாதுராமின் (வாசுதேவன் முரளி) வருகை. ஆனால் புதிதாக தளிர்விடும் காதலை ஊர்ப் பெரியவர்கள், ஏரியா இளைஞர்கள் ஊதி அணைக்க முயல்கின்றனர். நாதுராம் - ஷோபா காதல் வெற்றிபெற்றதா? இல்லையா? என்பதை கலகலப்பாக சொல்கிறது ‘லாலாகுண்டா பொம்மைகள்'.

ஒரு அழுத்தமான கதைப் பின்னணியை எடுத்துக் கொண்டு அதை சோகத்தைப் பிழியாமல் கலகலப்பாக சொன்ன விதத்தில் இயக்குநர் ராஜுமுருகன் ஈர்க்கிறார். படத்தின் தொடக்கத்தில் அயோக்கியனாக நமக்கு தெரியும் ஒருவன் இறுதியில் அன்பானவனாகவும், ஆரம்பத்தில் ஸ்வீட்ஹார்ட்டாக வரும் ஒருவன் இறுதியில் மோசமானவனாகவும் தோன்ற வைத்தது தான் திரைக்கதையின் வெற்றி. அந்த வகையில் ‘லாலாகுண்டா பொம்மைகள்' பல இடங்களில் ஸ்கோர் செய்கிறது. படம் தொடங்கும்போது வரும் அபார்ஷன் காட்சி படத்தின் க்ளைமாக்ஸுக்கு சிறிது முன்பு மீண்டும் ரிப்பீட் ஆகிறது. ஆனால் இரண்டுக்கும் இருக்கும் வித்தியாசத்தை ஆடியன்ஸை உணரச் செய்தது புத்திசாலித்தனமான ஐடியா. க்ளைமாக்ஸில் வைத்த ட்விஸ்ட் ஸ்வீட் சர்ப்ரைஸ்.

ஸ்ரீ கௌரி பிரியா, வசுந்த்ரா காஷ்யப், பானி பூரி விற்பவராக வரும் வாசுதேவன் முரளி, ஷோபாவின் சித்தப்பாவாக வரும் பாக்கியம் சங்கர் என படத்தின் நடிகர்கள் தேர்வு மிகச் சிறப்பு. குறிப்பாக சாமியாராக வரும் பிரசன்னா ராம்குமார் நகைச்சுவையில் கலக்கியிருக்கிறார். படத்தில் சிறிய சிறிய கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் கூட கச்சிதமாக நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

ஷான் ரோல்டனின் பின்னணி இசையும், இரண்டு பாடல்களும் ஈர்க்கின்றன. நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு படத்தின் ஓட்டத்துக்கு பெரும் பலம். படம் முழுக்க வரும் ஒருவித டல்டோன் பார்க்கும் நம்மை முதல் காட்சியிலேயே உள்ளிழுத்து விடுகிறது.

’உடம்புல மார்க்கும் உள்ளார நோவும் இல்லாத பொம்பள எங்க இருக்கா’, ’ஆம்பளயோட வாழ முடியாது.. ஆம்பள இல்லாமலும் வாழ முடியாது’ போன்ற வசனங்கள் சிறப்பு. ‘இடுக்கண் வருங்கால் வடக்கன் வருவான்’ என்று சாமியார் சொல்லும் வசனத்துக்கான நியாயத்தை படத்தின் க்ளைமாக்ஸில் வைத்திருப்பது அப்ளாஸ் ரகம்.

காதல் தோல்வியை காட்சிப்படுத்துகிறேன் என்ற பெயரில் பார்ப்பவர்களை படுத்தி எடுக்காமல் கலகலப்பாகவும், அதே நேரம் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையிலும் கதையை சொன்ன வகையில் ஜெயித்திருக்கிறார் இயக்குநர் ராஜுமுருகன்.

வாசிக்க:

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE