ஓடிடி திரை அலசல் | Archana 31 Not Out - ஐஸ்வர்யா லக்‌ஷ்மி ஆக்கிரமிப்பில் ‘தனி’த்துவப் போராட்டம்

By கலிலுல்லா

திருமணம் எனும் சம்பிரதாய சடங்கையும், அதன் வழியெழும் சிக்கலையும் தனியாளாக நின்று எதிர்கொள்ளும் பெண்ணொருத்தியின் போராட்டமே படத்தின் ஒன்லைன்.

பாலக்காட்டில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் தற்காலிக ஆசிரியராக பணியாற்றி வருகிறார் அர்ச்சனா (ஐஸ்வரயா லக்‌ஷ்மி). குடும்ப பொருளாதாரத்தை தனியாளாக நின்று தாங்கும் அவருக்கான திருமண வரன் அமைய காலமெடுக்கிறது. 30 வரன்களைக் கடந்து 31-வது வரன் அமைய, அதையொட்டிய திருமண ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்படுகின்றன. மகிழ்ச்சியான அந்த திருமண ஏற்பாடுகளை எதிர்பாராத விதமாக வரும் ஒரு தொலைபேசி அழைப்பு பாழாக்கிவிட, அதை அர்ச்சனா எப்படி எதிர்கொண்டார்? திருமணம் நடந்ததா இல்லையா? - இதுதான் 'அர்ச்சனா 31 நாட் அவுட்' படத்தின் திரைக்கதை. படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.

நீட்டி முழங்காமல் 1 மணி நேரம் 48 நிமிடத்தில் தான் சொல்ல வந்த கருத்தை சொல்லியிருக்கிறார் இயக்குநர் அகில் அனில் குமார். சிறுகதையில் கதைமாந்தர்களின் அறிமுகத்தைப்போல படத்தின் முதல் பாதியில், அர்ச்சனா யார், அவளது தினசரி வாழ்க்கை என்ன என்பதோடு கதைக்களத்தின் வெம்மையையுடன், நிலம் சார்ந்த மனிதர்களின் வாழ்வியலை பதிய வைக்கிறது படத்தின் முதல் பாதி. பொறுமையாக நகரும் திரைக்கதை மக்களின் வாழ்க்கையோடு இழைகிறது. இடைவேளைக்கு பிறகு சூடுபிடிக்கும் படம் இறுதிக்கட்டத்தை நெருங்கும் காட்சிகளில் தன் முன் நிற்கும் சவாலை அர்ச்சனா எதிர்கொள்ளும் விதம் குறித்து அறியும் ஆவலை தூண்டுகிறது.

நடுத்தர, உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த பெண்ணாக, இயல்புக்கு நெருக்கமான நடிப்பை பதிவு செய்திருக்கிறார் ஐஸ்வர்யா லக்‌ஷ்மி. மொத்தப் படத்தையும் தாங்கிச்செல்லும் அவர், பக்கத்துவீட்டு பெண்ணைப்போல இயல்புக்கு நெருக்கமான நடிப்பால் படத்திற்கு உயிர்கொடுக்கிறார். 28 தொடங்கி 30 வயதின் முற்பகுதியில் திருமணமாகாத ஒரு பெண்ணை சமூகம் எப்படியெல்லாம் வசைபாடும் என்பதுடன், அதனை அந்தப் பெண் எப்படி எதிர்கொள்வார் என்பதையும் மிகையில்லா முகபாவனைகளுடன், தனித்த உடல்மொழியை கொண்டுவந்திருக்கும் விதம் ஈர்க்கிறது. அவரைத் தவிர்த்து ஹக்கீம் ஷாஜஹான், ஜேம்ஸ் வர்கீஸ், உள்ளிட்ட படத்தின் துணைக் கதாபாத்திரங்களின் காட்சிகளுக்கான பங்களிப்பு நிறைவு. குறிப்பாக வசனமில்லாமல் வெறும் பாவனைகளின் வழியே உணர்வுகளை கடத்தியிருக்கும் இந்திரன்ஸ் மிரட்டியிருக்கிறார். சில காட்சிகள் வந்தாலும் கவனிக்க வைக்கிறார்.

'என் கல்யாணத்த ஜோசியரோ, ப்ரோக்கரோ முடிவு பண்ண முடியாது' என ஐஸ்வர்யா லக்‌ஷ்மி க்ளைமாக்ஸில் உடைத்து பேசும் வசனம் காட்சிகளின் அடர்த்தியை கூட்டுகிறது. சுய உழைப்பில் குடும்பத்தின் சுமையை தாங்கியிருக்கும் பெண்ணுக்கு கூடுதல் பாரமாகும் திருமணச் செலவுகள்,தோள்கொடுக்காத உறவுகள், கனவுகளுக்கு போடப்படும் வேலி, பொது சமூகத்தின் வசைமொழிகள் என சொல்லப்படாத / அரிதான காட்சிகளின் பதிவாகியிருக்கிறது படம். பொறுமையாக நகரும் திரைக்கதையை சில இடங்களில் கடக்க கூடுதல் பொறுமை தேவைப்படுகிறது.

ஜோயல் ஜோஜி ஒளிப்பதிவும், ரஜத் பிரகாஷ் பிண்ணனி இசையும் யதார்த்த சினிமாவுக்கான பங்களிப்பை கொடுத்த போதிலும், சில காட்சிகளில் பாடல்கள் திணிக்கப்பட்ட உணர்வு எழாமலில்லை. ஐஸ்வர்யா லக்‌ஷ்மிக்கு கிரிக்கெட்டில் ஆர்வம் இருப்பதாக காட்டியிருப்பது கதையோட்டத்திற்கு எந்த வகையில் தேவை என்பதும், அது சொல்லவந்த காரணமும் தெளிவாக இல்லை. நிறைய கதாபாத்திரங்கள் சேர்க்கப்பட்டிருந்த போதிலும், அவரை கதையோட்டத்திற்கு பெரிய அளவில் பலத்தையோ, சுவாரஸ்யத்தை கொடுக்கவில்லை. ஒரு சில இடங்களில் தர்க்கப் பிழைகளையும் உணர முடிகிறது.

நடுத்தர உழைக்கும் பெண் ஒருவரின் தன்னந்தனியான திருமணப் போராட்டத்தை காட்சிப்படுத்திருக்கும் விதத்திற்காகவும், சொல்ல வரும் கருத்துக்காகவும் 'அர்ச்சனா 31 நாட் அவுட்' படத்திற்கு உங்கள் ஒருமணி நேரம் 48 நிமிடத்தை தயங்காமல் செலவழிக்கலாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE