முதல் பார்வை - ப்ரோ டாடி | கவலைகளை மறக்கடிக்கும் ‘அசல்’ குடும்ப சினிமா

By செய்திப்பிரிவு

கேரளாவில் முறுக்குக் கம்பி தொழிலில் கொடிக் கட்டி பறப்பவர் ஜான் (மோகன்லால்). அவரது மனைவி அன்னா (மீனா). இவர்களின் ஒரே மகனான ஈஷோ (பிரித்விராஜ்) பெங்களூரில் பிரபலமான ஒரு விளம்பர நிறுவனத்தில் பணிபுரிகிறார். மோகன்லாலில் பால்யகால நண்பரான குரியனின் (லாலு அலெக்ஸ்) மகளான அன்னாவை (கல்யாணி பிரியதர்ஷன்) தங்கள் மகன் பிரித்விராஜுக்கு மணமுடித்துக் கொடுக்க மோகன்லாலும், மீனாவும் விரும்புகின்றனர். ஆனால் ஏற்கெனவே 4 ஆண்டுகளாக பிரித்விராஜும், கல்யாணி பிரியதர்ஷனும் பெங்களூருவில் ரகசியமாக லிவிங் டூகெதரில் வாழ்ந்து வருகின்றனர். எதிர்பாராத ஒரு சூழலில் கல்யாணி பிரியதர்ஷன் 2 மாதம் கர்ப்பமாக இருப்பதை தெரிந்து கொள்ளும் பிரித்விராஜ் அதை தன் தந்தையான மோகன்லாலிடம் போன் செய்து சொல்ல எத்தனிக்கும்போது மோகன்லாலோ ஒரு புதிய குண்டை பிரித்விராஜை நோக்கி வீசுகிறார். இதன்பிறகு படத்தில் நடக்கும் எதைக் குறிப்பிட்டாலும் அது ஸ்பாய்லர் ஆகிவிடும் என்பதால் இத்துடன் முடித்துக் கொள்வோம். இதன்பிறகு இரு குடும்பங்களின் இடையே நடக்கும் குழப்பங்களும் அதை அவர்கள் சரி செய்தார்களா என்பதே ப்ரோ டாடி படத்தின் கதை.

‘லூசிஃபர்’ படம் கொடுத்த பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு மீண்டும் மோகன்லால் - பிரித்விராஜ் கூட்டணியில் ஒரு படம். ஒரு சிம்பிளான ஒன்லைனை எடுத்துக் கொண்டு 2.40 மணி நேரம் கலகலப்பான ஒரு ஃபேமிலி டிராமாவை கொடுத்துள்ளார் இயக்குநர் பிரித்விராஜ். படம் தொடங்கி முதல் 40 நிமிடத்துக்கு மிக சாதாரணமாக செல்கிறது. மோகன்லால் குடும்பமும், லாலு குடும்பமும் தங்கள் பிள்ளைகளுக்கு திருமணம் பேசுவதும், ஆனால் பிரித்விராஜ் மற்றும் கல்யாணி இருவரும் ஆர்வம் இல்லாதது போல காட்டிக் கொள்வதும் அடுத்த காட்சியிலேயே இருவரும் ஒரே வீட்டில் லிவின் உறவுமுறையில் வாழ்ந்து வருவதும் என ஓரளவு கணிக்கக் கூடிய வகையில் படம் சென்றாலும் கல்யாணி பிரியதர்ஷன் கர்ப்பமாகும் காட்சிக்குப் பிறகு திரைக்கதை சூடுபிடிக்கிறது. அதன் பிறகு க்ளைமாக்ஸ் வரை கலகலப்பு, காமெடி, சென்டிமெண்ட் என எங்கும் தொய்வடையாமல் ஜெட் வேகத்தில் செல்கிறது திரைக்கதை.

படத்தின் மிகப்பெரிய பலம் நடிகர் தேர்வு. மோகன்லால், பிரித்விராஜ் நடிப்பு குறித்து சொல்லவே வேண்டாம். பட அறிவிப்பு வரும்போது அப்பா - மகன் கான்செப்ட் இருவருக்கும் செட் ஆகுமா என்று சமூக வலைதளங்களில் ரசிகர்களுக்கு இருந்த சந்தேகத்தை இருவரும் படத்தில் தவிடு பொடியாக்கியுள்ளனர். குறிப்பாக பிரித்விராஜ் நாற்பதை நெருங்கும் நடிகர் என்றாலும் அவரது தோற்றமும், உடல்மொழியும் அவரது கதாபாத்திரத்துக்கு நம்பகத்தன்மையை கூட்டுகின்றன. மீனா, கனிகா, கல்யாணி பிரியதர்ஷன் என அனைவருமே குறை சொல்ல முடியாத நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். குறிப்பாக குரியன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் லாலு அலெக்ஸ். படத்தில் மோகன்லாலுக்கு நிகரான கனமான பாத்திரம் இவருக்கு. எனினும் அதை உணர்ந்து நிறைவாக நடித்துள்ளார். சௌபின் ஷபீர் வரும் காட்சிகள் சில இடங்களில் கிச்சுக்கிச்சு மூட்டினாலும் பல இடங்களில் எரிச்சலூட்டுகின்றன.

ஆழமாக சொல்லப்பட வேண்டிய பல விஷயங்களை படம் மிக மேம்போக்காகத் தொட்டுச் செல்வதே இப்படத்தின் பலமும் பலவீனமும் கூட. அதில் சொல்லப்பட்ட விஷயங்கள் பார்ப்பவர்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. எனினும் கலகலப்பான திரைக்கதையின் வேகத்தில் இவை ஒரு குறையாக தெரியாமல் பார்த்துக் கொண்டது இயக்குநர் சாமர்த்தியம். லேசாக சறுக்கியிருந்தாலும் அழுமூஞ்சி டிராமாவாக மாறிவிடும் அபாயம் கொண்ட கதையை நேர்த்தியான திரைக்கதையின் மூலம் ஒரு பக்கா ஃபேமிலி எண்டர்டெய்னராக கொடுத்துள்ளார் இயக்குநர் பிரித்விராஜ்.

சௌபின் ஷபீர் வரும் காட்சிகள் படத்துக்கு தொடர்பில்லாமல் திணிக்கப்பட்டதாகவே இருக்கின்றன. லாலு அலெக்ஸின் மலச்சிக்கலும், அது சரியாகும் காட்சி, மோகன்லாலுக்கும் அவரது அம்மாவுக்கும் இடையிலான உரையாடல், க்ளைமாக்ஸுக்கு முன்பாக மோகன்லால் - பிரித்விராஜ் பேசிக் கொள்ளும் காட்சி உள்ளிட்ட பல காட்சிகள் சிறப்பாக எழுதப்பட்டுள்ளன.

அபிநந்தன் ராமனுஜத்தின் கலர்ஃபுல்லான ஒளிப்பதிவு ஒரு பொழுதுபோக்குத் திரைபடத்துக்கான மனநிலைக்கு பார்ப்பவர்களை கொண்டு சென்று விடுகிறது. தீபக் தேவின் பின்னணி இசை ஓகே ரகம். பாடல்கள் பெரிதாக ஈர்க்கவில்லை.

குடும்பப் படங்கள் என்ற பெயரில் சமீபகாலமாக தமிழில் வந்து கொண்டிருக்கும் படங்களோடு ஒப்பிட்டுப் பார்த்தால் ஒரு ஃபேமிலி எண்டர்டெய்ன்மெண்ட் படமென்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ‘ப்ரோ டாடி’ ஓர் மிகச்சிறந்த உதாரணம். ஒரு சிம்பிள் ஒன்லைன், அதற்கான நேர்த்தியான திரைக்கதை, கலகலப்பான காட்சிகள், இறுதியில் சுபம் இந்த ஃபார்முலாவை சுற்றிவளைக்காமல், கூட்டுக் குடும்பம், பாரம்பரியம் என்று ஜல்லியடிக்காமல் கதைக்கு எது தேவையோ அதை மட்டும் எடுத்துக் கொண்டு சொல்ல வந்த விஷயத்தை நேரடியாக அனைத்து தரப்பினரும் ரசிக்குப்படி சொன்ன வகையில் பிரித்விராஜ் ஒரு இயக்குநராக மீண்டும் ஜெயித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஓடிடி களம்

1 day ago

ஓடிடி களம்

2 days ago

ஓடிடி களம்

3 days ago

ஓடிடி களம்

5 days ago

ஓடிடி களம்

8 days ago

ஓடிடி களம்

14 days ago

ஓடிடி களம்

16 days ago

ஓடிடி களம்

17 days ago

ஓடிடி களம்

20 days ago

ஓடிடி களம்

21 days ago

ஓடிடி களம்

23 days ago

ஓடிடி களம்

24 days ago

ஓடிடி களம்

24 days ago

ஓடிடி களம்

24 days ago

ஓடிடி களம்

24 days ago

மேலும்