கோல்டன் குளோப் போட்டியில் நுழைந்த முதல் கொரியத் தொடர்

2022 ஆம் ஆண்டுக்கான கோல்டன் குளோப் விருது போட்டியில் முதன்முறையாக ‘ஸ்குயிட் கேம்’ என்ற கொரியத் தொடர் நுழைந்துள்ளது.

தென்கொரியாவின் சிரன் பிக்சர்ஸ் தயாரித்த ‘ஸ்குயிட் கேம்’ என்ற தொடர் கடந்த செப்டம்பர் மாதம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியானது. நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் உலகில் அதிகம் பேர் விரும்பி பார்த்த வெப் சீரிஸ் என்ற சாதனையை ‘ஸ்குயிட் கேம்’ படைத்தது.

அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளில் பல்வேறு உள்ளூர் தொடர்களை, ஸ்குயிட் கேம் பின்னுக்குத் தள்ளியது. இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளிலும் இந்த தொடருக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில் ஹாலிவுட்டில் ஆஸ்கர் விருதுக்கு அடுத்த நிலையாக கருதப்படும் கோல்டன் குளோப் விருதுக்கான போட்டியில் ‘ஸ்குயிட் கேம்’ தொடர் நுழைந்துள்ளது.

2022 ஆம் ஆண்டுக்கான கோல்டன் குளோப் விருது வழங்கும் நிகழ்ச்சி வரும் ஜனவரி 9ஆம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற உள்ளது. இதில் பல்வேறு பிரிவுகளில் சிறந்த திரைப்படங்கள் மற்றும் தொடர்களுக்கு விருதுகள் வழங்கப்படும். இதில் சிறந்த தொடர், சிறந்த நடிகர், சிறந்த துணை நடிகர் ஆகிய பிரிவுகளுக்கான போட்டியில் ‘ஸ்குயிட் கேம்’ தொடர் நுழைந்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE