முதல் பார்வை: மேஸ்ட்ரோ

By சல்மான்

பியானோ கலைஞரான அருண் (நிதின்) தன் கவனத்தை இசையில் மட்டும் செலுத்தவேண்டி பார்வை இழந்தவராக நடிக்கிறார். ரெஸ்டாரண்ட் ஒன்றில் பியானா இசைக்கும் அருணால் அங்கு மீண்டும் வியாபாரம் தழைக்கிறது. அந்த ரெஸ்டாரண்ட் உரிமையாளரின் மகளான சோபிக்கும் (நபா நடேஷ்) அருணுக்கும் இடையே காதல் மலர்கிறது. இன்னொரு பக்கம் 80களின் நடிகராக இருந்து தற்போது ரியல் எஸ்டேட் அதிபராக இருக்கும் மோகன் (வி.கே.நரேஷ்) மற்றும் அவரது இளம் மனைவி சிம்ரன் (தமன்னா). அருணின் பியானோ இசையால் ஈர்க்கப்படும் மோகன், தன் மனைவிக்கு சர்ப்ரைஸ் கொடுப்பதற்காக அவரைத் தன் வீட்டில் வந்து பியானோ இசைக்குமாறு அழைக்கிறார். மறுநாள் மோகன் வீட்டுக்குச் செல்லும் அருணுக்கு அங்கு ஒரு பெரும் அதிர்ச்சி காத்திருக்கிறது. அதனைத் தொடர்ந்து அருணின் வாழ்க்கையே தலைகீழாக மாறுகிறது. அதிலிருந்து அருண் மீண்டாரா என்பதே ‘மேஸ்ட்ரோ’ படத்தின் கதை.

2018ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற ‘அந்தாதூன்’ திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக். காட்சிக்குக் காட்சி அப்படியே ரீமேக் செய்திருந்தாலும் இடைச் செருகலாக தேவையே இல்லாத சில காட்சிகளையும் இணைத்துள்ளனர். உதாரணமாக படத்தின் முக்கியக் கதாபாத்திரங்களின் அறிமுக ஸ்லோமோஷன் காட்சிகளில் அக்மார்க் தெலுங்கு வாடை.

நாயகனாக நிதின், தான் ஏற்று நடித்துள்ள பாத்திரத்துக்கு தன்னால் இயன்றவரை நியாயம் செய்திருக்கிறார். எனினும் எமோஷனல் காட்சிகளில் தடுமாற்றம் தெரிகிறது. நாயகியாக நபா நடேஷ். படத்தில் வரும் காட்சிகள் குறைவுதான் என்றாலும் கொடுக்கப்பட்ட வேலையைச் சரியாகச் செய்துள்ளார். மோகனாக வரும் வி.கே.நரேஷ், காவல் அதிகாரியாக வரும் ஜிஷு செங்குப்தா, கிட்னி டாக்டராக வரும் ஹர்ஷவர்தன் என அனைவரும் தங்களுடைய பங்களிப்பைக் குறையின்றிச் செய்துள்ளனர்.

படத்தில் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய கதாபாத்திரம் தமன்னாவுடையது. முன்னணி நடிகையாக இருக்கும் ஒருவர் இப்படி ஒரு கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பது அவ்வளவு எளிதல்ல. படத்தில் நாயகனுக்கு இணையான கனமான பாத்திரம். ‘அந்தாதூன்’ படத்தில் தபு நடித்த சிமி கதாபாத்திரம் தான் செய்த தவறுகளை எண்ணி வருந்தும், குற்ற உணர்ச்சியில் உழலும். ஆனால், இங்கு சிம்ரன் கதாபாத்திரம் கொலைகளை மட்டுமே விரும்பும் ஒரு சைக்கோ கதாபாத்திரம் போல காட்சிப்படுத்தப்படுகிறது. தபு கதாபாத்திரத்திடம் இருந்த அந்தக் குற்ற உணர்ச்சி கலந்த நடிப்பு படத்தில் எந்த இடத்திலும் தமன்னாவிடம் தென்படவில்லை.

‘அந்தாதூன்’ படத்தின் மிகப்பெரிய ப்ளஸ்களில் ஒன்று அதன் டார்க் வகை நகைச்சுவைகளும், ஒரு த்ரில்லர் படத்துக்கு ஏற்பப் பார்வையாளர்களை ஆரம்பம் முதலே தயார் செய்யும் அதன் இருண்ட தீமும் தான். அவை இரண்டுமே இப்படத்தில் மிஸ்ஸிங். அதேபோல ஒரிஜினல் படத்தில் மோகனின் மகள் கதாபாத்திரத்துக்குப் பெரிய முக்கியத்துவம் இருக்காது. ஆனால், இப்படத்தில் அதற்கு என்று ஒரு சில காட்சிகளைச் சேர்த்துள்ளார் இயக்குநர். ஆனால், முன்பே சொன்னது போல அவை படத்துக்கு எந்தவிதத்திலும் உதவவில்லை.

‘அந்தாதூன்’ படத்தில் ஆயுஷ்மான் குரானா ஏற்று நடித்த ஆகாஷ் கதாபாத்திரம் ஒரு ஹீரோவாக எந்த இடத்திலும் நிறுவப்பட்டிருக்காது. ஒரு கொலையைப் பார்த்து போலீஸிடம் புகாரளிக்கச் செல்லும் அவர் தான் மாட்டிக் கொள்ளக் கூடாது என்பதற்காக புகாரளிக்காமல் வந்துவிடுவார். இங்கும் அதேதான் நடக்கிறது. அதை இயக்குநர் அப்படியே விட்டிருந்தால் பரவாயில்லை. ஒரு காட்சியில் ரயிலேறி ஊரை விட்டுச் செல்கிறார் நிதின். சிறிது நேரத்திலேயே மோகனின் மகளை தமன்னா கொன்றுவிடுவார் என்று எண்ணி ரயிலை நிறுத்தி மீண்டும் வந்து விடுகிறார். எதற்காக இந்த ஹீரோயிச இடைச்செருகல்?

படத்தின் அடிநாதமே தமன்னா வீட்டில் நிதின் வாசிக்கும் அந்தக் காட்சிதான். ‘அந்தாதூன்’ படத்தில் அந்தக் காட்சியில் இருந்த பரபரப்பும், விறுவிறுப்பும் இங்கே சுத்தமாக இல்லை. இதனால் அடுத்தடுத்த காட்சிகளில் ஒன்றமுடியவில்லை.

இதேபோல படத்தில் இயக்குநர் உடைத்த இன்னொரு ஃபர்னிச்சர் படத்தின் க்ளைமாக்ஸ். ‘அந்தாதூன்’ படத்தின் க்ளைமாக்ஸில் அந்த குளிர்பான கேனை ஆயுஷ்மான் தட்டிவிட்டுச் செல்லும் காட்சியோடு படம் முடிந்துவிடும். அதற்குப் பிறகு முடிவைப் பார்வையாளர்களிடமே இயக்குநர் விட்டிருப்பார். இந்தப் படத்தில் க்ளைமாக்ஸுக்கு முன்பும் பின்பும் அதனை எப்படியாவது பார்வையாளர்களுக்கு விளக்கிப் புரிய வைத்து விட வேண்டுமென்று இயக்குநர் படாதபாடு படுகிறார். ஒருவேளை அப்படியே வைத்தால் தெலுங்குப் பார்வையாளர்களுக்குப் புரியாது என்று நினைத்துவிட்டாரா என்பது இயக்குநருக்கே வெளிச்சம்.

திரையரங்குகள் மட்டுமே சினிமாவுக்கான ஒரு கருவியாக இருந்த காலத்தில் ரீமேக் செய்தது சரி. ஓடிடி தளங்களில் உள்ளூர் சினிமா முதல் உலக சினிமா வரை அனைத்துப் படங்களும் காணக் கிடைக்கும் இந்தக் காலகட்டத்திலும் காட்சிக்குக் காட்சி அதுவும் இந்தியப் படங்களையே ரீமேக் செய்யும் காரணம் என்ன?

‘அந்தாதூன்’ படத்தைப் பார்த்தவர்களுக்கு இப்படம் ரசிக்கும்படி இருக்குமா என்பது சந்தேகமே. அதைப் பார்க்காதவர்கள் தாராளமாக ஒருமுறை ‘மேஸ்ட்ரோ’வைப் பார்த்து ரசிக்கலாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE