முதல் பார்வை - டிக்கிலோனா

By சல்மான்

மின்வாரியத்தில் லைன் மேனாக வேலை பார்ப்பவர் மணி (சந்தானம்). மனைவி மற்றும் மாமனார் கொடுக்கும் தொடர் அவமானங்களை தாங்கிக் கொண்டு வாழ்ந்து வருகிறார். விஞ்ஞானிகள் சிலர் கால இயந்திரம் ஒன்றை கண்டுபிடித்து விட்டு அதனை முழுமை செய்யமுடியாமல் தவிக்கின்றனர். அங்கு பணியாளராக வேலைபார்க்கும் ஆல்பர்ட் (யோகி பாபு) மின்சாரம் தாக்கியதில் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனாக (?) மாறுகிறார். அவர் சொல்லும் ஃபார்முலாவால் இயந்திரம் முழுமைடைகிறது. எதிர்பாராத ஒரு சூழலில் அங்கு செல்லும் மணி தன்னுடைய் கசப்பான வாழ்க்கைக்கு காரணமான தனது திருமணத்தை நிறுத்துவதற்காக 7 வருடங்கள் பின்னோக்கி காலப்பயணம் மேற்கொள்கிறார். அவரால் தனது திருமணத்தை தடுக்க முடிந்ததா? என்பதற்கான விடையே ‘டிக்கிலோனா’.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் ஒரு டைம் - டிராவல் திரைப்படம். தொடக்கமே நம்மை ஒரு காமெடி திரைப்படத்துக்கான மனநிலைக்கு தயார் செய்து விடுகிறது. கே.ஜி.எஃப் பாணியில் ‘நிழல்கள்’ ரவி மற்றும் ‘லொள்ளு சபா’ கொடுக்கும் பில்ட்-அப்கள் நல்ல ஐடியா. சந்தானத்தின் அறிமுகம், கால இயந்திரம், யோகி பாபு பேசும் ஆங்கிலம் கலந்த வசனங்கள் எல்லாம் முதல் இருபது நிமிடங்கள் கலகலப்பாக செல்லும் திரைக்கதை சந்தானம் டைம் மெஷினில் ஏறி கடந்த காலத்துக்குச் சென்றதும் தடுமாறுகிறது. சந்தானம் - யோகி பாபு வரும் ஒரு சில காட்சிகளில் நகைச்சுவை பட்டாசாக இருந்தாலும் பல காட்சிகளில் நமத்துப் போய்விடுகிறது.

நாயகனாக சந்தானம். நடிப்பதற்கு பெரிதாக வாய்ப்பில்லை எனினும் தன்னுடைய வழக்கமான கவுன்ட்டர்களை நம்பியே களமிறங்கியிருக்கிறார். ஆனால் உருவகேலி செய்வது, பெண்களுக்கு பாடம் எடுப்பது, மாற்றுத் திறனாளிகளையும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களையும் கிண்டலடிப்பது இவையெல்லாம் இன்னும் காமெடி என்று சந்தானம் நம்பிக் கொண்டிருக்கிறார் போலும். இன்னும் நடிப்புக்கு வேலை கொடுக்காமல் தன்னுடைய கலாய்த்தல் (?) திறமையை காட்டுகிறேன் பேர்வழி என்று படுத்தி எடுக்கிறார். உதாரணமாக படத்தில் வரும் ஒரு மாற்றுத் திறனாளி கதாபாத்த்திரத்தை பார்த்து ‘சைட் ஸ்டாண்ட்’ என்று அவர் சொல்வதெல்லாம் அருவருப்பின் உச்சம். போதாதற்கு படம் முழுக்க பெண் சுதந்திரம் குறித்து பெண்களுக்கு பாடம் எடுக்கிறார்.

ஆல்பர்ட்டாக யோகி பாபு. மின்சாரம் தாக்கியதில் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனாக மாறுகிறார். என்ன லாஜிக் என்றே புரியவில்லை. காமெடி படத்தில் லாஜிக் பார்க்கக் கூடாது என்றாலும் ஒரு நியாயம் வேண்டாமா? படத்தில் குறைந்த நேரமே வரும் யோகி பாபுவின் ஆங்கிலம் கலந்த வசனங்கள் சிரிக்க வைக்கின்றன. மற்றபடி படத்தில் அவருக்கு பெரிதாக வேலையில்லை. விஞ்ஞானியாக அருண் அலெக்சாண்டர், மொட்டை ராஜேந்திரன், நிழல்கள் ரவி, ஆனந்த்ராஜ், மூனீஷ்காந்த், ஷாரா, சித்ரா லட்சுமணன் என அனைவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பங்கை சரிவர செய்திருக்கிறார்கள். அனகா, ஷ்ரின் கான்ச்வாலா என ஒன்றுக்கு இரண்டு நாயகிகள். ஆனால் நடிப்பு கிஞ்சித்தும் வரவில்லை. முக்கியமான காட்சிகளில் கூட மருந்துக்கும் வாயசைக்க மறுக்கின்றனர். படத்துக்கு துளியும் சம்பந்தம் இல்லாத ஹர்பஜன் சிங் கேமியோ.

டைம் டிராவல் படம் என்றதுமே மண்டையை குழப்பி, பறக்கும் கார்கள், விண்ணை முட்டும் கட்டிடங்கள் என மேஜிக் காட்டாமல் மிக எளிமையாக கதையை சொல்லியிருப்பது ஆறுதல். முதல் பாதியில் ஆங்காங்கே இருந்த நகைச்சுவை கூட இரண்டாம் பாதியில் காணாமல் போய்விடுகிறது. மாறாக இரண்டாம் பாதி முழுக்க பெண்களுக்கு பாடம் எடுக்கும் வசனங்களை நிரப்பி வைத்திருக்கிறார் இயக்குநர் யோகி பாபு. சமூக வலைதளங்கில் மீம், ட்ரோல்களுக்கு பயன்படும் பாய் பெஸ்டி, பெண் சுதந்திரம், பெண்களின் ஆடை குறித்த அட்வைஸ் இவற்றையெல்லாம் வைத்து ஒப்பேற்றி விட்டார். சகிக்க முடியாத அளவுக்கு பிற்போக்குத் தனமான வசனங்கள். உதாரணத்துக்கு ஒரு டைம்லைனில் வேலைக்கு சென்று சுயமாக சம்பாத்திக்கும் நாயகியை அடங்காத பெண்ணாக, கணவனை எந்நேரமும் அவமானப்படுத்தும் பெண்ணாக காட்டும் இயக்குநர், இன்னொரு டைம்லைனில் குடும்பத் தலைவியாக இருக்கும் அதே நாயகி மகிழ்ச்சியாகவும் கணவனை நேசிக்கும் பெண்ணாகவும் காட்டியிருப்பது அவருக்கே வெளிச்சம். 30 வருடங்கள் பின்னோக்கி டைம் டிராவல் செய்திருக்கிறார் இயக்குநர்.

அர்வியின் ஒளிப்பதிவும், யுவனின் இசையும் குறிப்பிடப்படவேண்டியவை. படத்தை பெரும்பாலான இடங்களில் காப்பாற்றுவது யுவனின் பின்னணி இசைதான். ஆனால் இளையராஜாவின் ‘பேர் வச்சாலும்’ பாடல் ரீமிக்ஸ் தவிர வேறு எந்த பாடலும் மனதில் நிற்கவில்லை. அந்த பாடலையும் காட்சிப்படுத்திய விதம் படு சொதப்பல்.

மொத்தத்தில் படம் முழுக்க வரும் அட்வைஸ் வசனங்களை குறைத்து திரைக்கதையை கூர் தீட்டியிருந்தால் தமிழ் சினிமாவின் மற்றொரு சிறந்த டைம் டிராவல் படமாக ‘டிக்கிலோனா’ மாறியிருக்கும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE