டெஸ்ட்: திரை விமர்சனம்

By செய்திப்பிரிவு

சென்னையை சேர்ந்த அர்ஜுன் (சித்தார்த்) டெஸ்ட் கிரிக்கெட் வீரர். சமீபகாலமாக ஃபார்மில் இல்லாமல் இருக்கும் அவரை, ஓரங்கட்ட நினைக்கிறது போர்டு. சென்னையில் நடக்கும் இந்தியா -பாகிஸ்தான் மேட்சில் தன்னைநிரூபிக்க வேண்டிய கட்டாயம் அவருக்கு. இதற்காக மனைவி, மகனைக் கூட கவனிக்காமல் இருக்கிறார். சயின்டிஸ்ட்டான சரவணன்(மாதவன்), தண்ணீரிலிருந்து எரிபொருள் தயாரிக்கும் என்ஜினை கண்டுபிடித்து விட்டு, அங்கீகாரத்துக்காக அரசிடம் போராடி வருகிறார்.

இதனால் தாய்மைக்கு ஏங்கும் தனது மனைவி குமுதாவின் (நயன்தாரா) கனவைக் கூட நிறைவேற்ற முடியாமல் தவிக்கிறார். இந்நிலையில் அர்ஜுனை பயன்படுத்தி மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட நினைக்கிறது ஒரு சூதாட்டக் கும்பல். கடன் பிரச்சினை காரணமாக அதைதனக்கு சாதகமாக பயன்படுத்தி, தேவையான பணத்தைப் பெற நினைக்கிறார் சரவணன். அதற்கு எதிராக நிற்கிறார் குமுதா. இவர்களுக்கான 'டெஸ்ட்' எங்கு போய் முடிகிறது என்பது கதை.

நெட்பிளிக்ஸ் தளத்தில் நேரடியாக வெளியாகி இருக்கும் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி இருக்கிறார், தயாரிப்பாளர் சஷிகாந்த். மூன்று மனிதர்களின் வெவ்வேறு பிரச்சினைகள் ஒரு கட்டத்தில், ஒரே புள்ளியில் இணையும் போது என்ன நடக்கிறது என்கிற த்ரில்லர் டிராமாதான் திரைக்கதை. அதை ஓரளவு சரியாகவே அமைத்திருக்கிறார்.

ஒவ்வொரு கேரக்டரையும் அறிமுகப்படுத்தும்போதே அவரவர்களின் குணாதிசயங்களும் நோக்கங்களும் இன்னொரு லேயராக பார்வையாளர்களுக்கு வெளிப்பட்டு விடுகின்றன. கிரிக்கெட்டுக்காக குடும்பத்தைக் கண்டுகொள்ளாமல் இருக்கும் அர்ஜுன், தனது கண்டுபிடிப்பின் அங்கீகாரத்துக்காக மனைவி குமுதாவைக் கண்டுகொள்ளாமல் இருக்கும் சரவணன், தாய்மைக்கு ஏங்கும் குமுதா, கணவனை எதிர்த்து நிற்பது என மூன்று கதாபாத்திரங்களும் தங்களுக்கான நியாயங்களுக்காகவே நிற்கிறார்கள்.

காதலித்து திருமணம் செய்துகொண்ட நயன்தாரா- மாதவனுக்கு இடையிலான உறவு, ஆசிரியையான நயன்தாரா பள்ளியில் எதிர்கொள்ளும் பிரச்சினை, கடன் வாங்கிவிட்டு, ரவுடிகளிடம் மாட்டிக்கொள்ளும் மாதவனின் நிலைமை, கிரிக்கெட் போர்டுடன் பிரச்சினையை எதிர்கொள்ளும் சித்தார்த் என முதல் பாதிவரை மிகுந்த எதிர்பார்ப்போடு செல்கிறது, படம். அதற்கு முக்கிய கதாபாத்திரங்களான நயன்தாரா, மாதவன், சித்தார்த், மீரா ஜாஸ்மின் ஆகியோரின் தேர்ந்த நடிப்பும் காரணம்.

இரண்டாம் பாதி கதை, கடத்தல், மேட்ச் பிக்சிங், மிரட்டல் என வேறொரு ‘மூடு’க்கு சென்றுவிடுகிறது. அதோடு மேலோட்டமான காட்சி அமைப்புகளும் த்ரில்லர் பரபரப்பைத் தர வேண்டிய காட்சிகள் அதைத் தராமல் சாதாரணமாகக் கடந்து செல்வதும் படத்தின் நீளமும் சோர்வடைய வைக்கின்றன. ஆனாலும், நிஜமான ஒரு டெஸ்ட் போட்டியை பார்க்கும் உணர்வைத் தருகின்றன கிரிக்கெட் தொடர்பான காட்சிகள்.

ஃபார்மில் இல்லாத டெஸ்ட் கிரிக்கெட் வீரர், கிரிக்கெட் போர்டுடன் நடக்கும் பாலிட்டிக்ஸ், மனைவி, மகன் மீதான கோபம், தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் என நடிப்பில் பவுண்டரி அடிக்கிறார் சித்தார்த். ஒருவனின் இயலாமை அவனை எந்தளவுக்கு கொண்டு செல்லும் என்கிற உணர்வை அழகாக வெளிப்படுத்துகிறார் மாதவன். ஆனாலும் அவர் திடீரென நெகட்டிவ் அவதாரம் எடுக்கும் காட்சியை இன்னும் நம்பும்படியாக வைத்திருக்கலாம். கணவனின் பொய் தெரிந்து உடைவதிலும் கடத்தல் நாடகத்தின் போதும் உருக வைக்கிறார், நயன்தாரா. ஆதியாக வரும் மாஸ்டர் லிரிஷ் ராகவ், காளி வெங்கட், ‘ஆடுகளம்’ முருகதாஸ் என துணை கதாபாத்திரங்களும் கவனிக்க வைக்கிறார்கள்.

சக்தி ஸ்ரீ கோபாலனின் பின்னணி இசை, கதையோடு இழுத்துச் செல்கிறது. பாடல்கள் மனதில் நிற்கவில்லை. விராஜ் சிங் கோஹிலின் ஒளிப்பதிவில் அனைத்து பிரேமும் ரசிக்க வைக்கின்றன. ஒவ்வொரு கேரக்டராக சென்றுவரும் காட்சிகளைக் குழப்பமில்லாமல் தொகுத்திருக்கும் எடிட்டர் டி.எஸ்.சுரேஷ், இரண்டாம் பாதியின் நீளத்தை இன்னும் குறைத்திருக்கலாம். சின்ன சின்ன குறைகள் இருந்தாலும் இந்த ‘டெஸ்ட்’ சிறந்த உணர்வைத் தருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஓடிடி களம்

5 days ago

ஓடிடி களம்

6 days ago

ஓடிடி களம்

6 days ago

ஓடிடி களம்

7 days ago

ஓடிடி களம்

11 days ago

ஓடிடி களம்

12 days ago

ஓடிடி களம்

13 days ago

ஓடிடி களம்

18 days ago

ஓடிடி களம்

18 days ago

ஓடிடி களம்

20 days ago

ஓடிடி களம்

24 days ago

ஓடிடி களம்

25 days ago

ஓடிடி களம்

25 days ago

ஓடிடி களம்

25 days ago

ஓடிடி களம்

27 days ago

மேலும்