நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி உலகளவில் பரவலாக வரவேற்பைப் பெற்றிருக்கும் மினி சீரிஸ் ‘அடலசென்ஸ்’ (Adolescence). மொத்தமே 4 எபிசோடுகள் தான். 13 வயது சிறுவனின் (ஜேமி மில்லர்) கைது தொடங்கி, அவனுக்கு ஏற்படும் புரிதல் தொட்டு, பெற்றோருக்கு ஏற்படும் குற்ற உணர்ச்சிகள், கேள்விகள் வரை ஒவ்வொரு உணர்வும் அவ்வளவு நேர்த்தியாக கோக்கப்பட்டுள்ளன.
அழுத்தமான ஒரு க்ரைம் டிராமா ஜானரில் உள்ள இந்த சீரிஸின் 4 எபிசோடுகளையும் பார்த்து முடிக்கும் போது, நீங்கள் பெற்றோராக இருந்தால் உங்கள் ‘பிள்ளை வளர்ப்பு முறை’ பற்றிய சுயமதிப்பீட்டுக்கு உங்களைத் தூண்டும். ஒருவேளை நீங்கள் பதின்ம வயது குழந்தையாக இருந்தால் உங்கள் சுயத்தை பரிசோதித்துக் கொள்ள, உங்களுக்கு இந்த உலகம் பற்றியும், உங்கள் பருவம் பற்றியும், பாலினம் சார்ந்த சந்தேகங்கள் பற்றியும், சமூக வலைதள உலகத்தில் நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள் என்பது பற்றியும் ஒப்பிட்டு சுதாரித்துக் கொள்ள பூட்டிய அறையில் உள்ள கணினியைவிட பெற்றோரின் வழிகாட்டுதலை நாடலாம் என்ற உந்துதலைத் தரும். எனக்கும், என் மகளுக்கும் அப்படியான உணர்வைத் தந்ததால் இந்த சீரிஸை பெற்றோரும், குழந்தைகளும் சேர்ந்தே பார்ப்பது பொருத்தமாக இருக்கும் என்பது எனது தனிப்படை பரிந்துரை.
பிரிட்டன் நாடாளுமன்றம் வரை... - ‘அடலசென்ஸ்’ சீரிஸை பகுப்பாய்வு செய்யும் முன் பிரிட்டன் நாட்டின் நாடாளுமன்றம் வரை ஒலித்துக் கொண்டிருக்கும் அவர்களின் சமூகப் பிரச்சினையை நாம் அறிந்து கொள்ள வேண்டும். சீரிஸ் பிரிட்டனில் நடப்பது போலவே வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதால். 16 வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகள் சமூக வலைதளப் பயன்பாட்டுக்கு தடை விதிக்கும் சட்டத்தை இயற்ற பிரிட்டன் அரசு திட்டமிட்டு வருகிறது. ஏற்கெனவே இந்தச் சட்டம் கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் அமலுக்கு வந்துவிட்ட நிலையில் பிரிட்டன் நாடாளுமன்றம் இதை தீவிரமாக விவாதித்து வருகிறது.
குழந்தைகள் குறிப்பாக 13 வயதிலிருந்து 16 வயதுக்குள்ளான குழந்தைகள் மத்தியில் சமூக வலைதள பயன்பாடு அபாயகரமாக அளவுக்கு அதிகரித்துள்ளது என பிரிட்டன் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. அது குழந்தைகளுக்கு மட்டுமல்ல ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்குமே பல்வேறு பிரச்சினைகளை குவிப்பதால் பிரிட்டன் சமூகத்தில் கிரிமினல் பிஹேவியர் ஒரு பெரும் சமூகச் சவாலாக உருவெடுத்துள்ளது. அதனாலேயே சமூக வலைதளத் தடை பற்றி அந்நாடு தீவிரமாக ஆலோசித்து வருகிறது.
இந்த சீரிஸை நடிகர் ஸ்டீபன் கிராஹமுடன் இணைந்து எழுதிய ஜாக் தார்னும் கூட, “குழந்தைகளை விஷத்தனமான ஆன்லைன் ஆபத்துகளில் இருந்து பாதுகாக்க வேண்டுமென்றால், அதை அணுக அவர்களுக்குத் தடை விதிக்க வேண்டும்” என்று ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
கூட்டுப் பொறுப்பு: இத்தகையச் சூழலில் ‘அடலசென்ஸ்’ மினி சீரிஸ் பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பெற்றோர்களுக்கு ஒரு ரெஃபரன்ஸ் கைடு போல் இருக்கும் என்பதில் ஐயமில்லை. சுதந்திரம் என்பது உண்மையில் கட்டுப்பாட்டை, கண்காணிப்பை தங்கள் மீது தாங்களே வைத்துக் கொள்ள குழந்தைகளுக்குக் கொடுக்கப்படும் சாவி. அந்தச் சாவியை சரியாகப் பயன்படுத்தினால் மகிழ்ச்சியும், வளர்ச்சியும் கேரன்டி. மாறாக, தவறான துளையில் அதை செலுத்தினால் இணையத்தில் கொட்டிக் கிடக்கும் ஆபாசம், வன்முறை, போதைப் பழக்கம், சைபர் புல்லியிங், டார்க் வேர்ல்டு என அடுக்கடுக்காக துன்பங்கள் ஆக்கிரமித்துக் கொள்ளும்.
சுதந்திரத்துக்கான சாவியை கொடுப்பது மட்டுமல்ல குழந்தைகள் சரியாக அதைப் பயன்படுத்துவதை உறுதி செய்து கொள்வதே சிறப்பான பிள்ளை வளர்ப்பாக இருக்க முடியும் என்று நிறுவியிருக்கிறது ‘அடலசென்ஸ்’ மினி சீரிஸ்.
அதுமட்டுமல்ல குழந்தைகளைப் பாதுகாப்பதில் பெற்றோர், பள்ளிக் கூடம், அரசாங்கம் என எல்லோருமே கூட்டுப் பொறுப்புள்ள பங்குதாரர்கள் என்பதையும் சீரிஸ் உணர வைக்கிறது. குறிப்பாக, ‘அடலசென்ஸ்’ எபிசோடு 1, ஒரு சிறுவனை தீவிரவாதி போல் கைது செய்யும் படலத்தோடு தொடங்கினாலும் கூட அடுத்து அச்சிறுவன் சிறையில் நடத்தப்படும் விதம். அவனுக்கு தெரிவிக்கப்படும் அவனுடைய உரிமைகள் பற்றிய விவரம், சிறுவன் என்பதால் அவனுடன் ஒரு ‘அப்ராப்ரியேட் அடல்ட்’ இருக்கலாம், சட்ட உதவி எடுக்கலாம் போன்ற வாய்ப்புகளைச் சொல்வது எல்லாம் பிரம்மிப்பூட்டுகின்றன.
உண்மையிலேயே பிரிட்டனில் ஜுவனைல் குற்றவாளிகள் இப்படித்தான் நடத்தப்படுகிறார்கள் என்றால், இங்குள்ள கூர்நோக்கு இல்லங்களில் இருந்து அவை அப்படியே 180 டிகிரி மாறுபட்டு நிற்கின்றன எல்லாம். ஒருவேளை திரைக்கான சித்தரிப்பாக இருந்தால் இப்படித்தான் ஒரு சிறார் குற்றவாளியை அணுக வேண்டும், நடத்த வேண்டும் என்ற படிப்பினையாகக் கொள்ளலாம்.
பஞ்சும் நெருப்பும் போலவே..! - பஞ்சும், நெருப்பும் எளிதில் பற்றிக் கொள்ளும் தானே. உண்மையில் பதின்ம வயது, அதுவும் அதன் தொடக்கக் காலம் என்பதும் அதுபோலவே எளிதில் எதுவும் பற்றிக் கொள்ளும் தன்மை கொண்டது. உடலில் ஏற்படும் மாற்றங்களால் ஏற்படும் உணர்வுப் போராட்டங்கள், எப்போதும் கனலாகக் காய்ந்து கொண்டிருக்கும் ஒருவித கோபம், அதற்கு தூபம் போட காத்திருக்கும் சக பருவத்தினர் கொடுக்கும் அழுத்தம், எல்லாவற்றிற்கும் மேலாக சமூகவலைதள இன்ஃப்ளூயன்சர்கள் இந்தப் பிஞ்சுகளின் மீது ஏற்படுத்தும் தாக்கம், குடும்பமும், சமூகமும் ஒரு விஷயத்தை அணுகும்முறையில் உள்ள ஏற்றத்தாழ்வுகள் என எல்லாம் சேர்ந்து அடோலசன்ட் பருவத்தினருக்கு பெரும் சவால் விடுக்கின்றன.
இவையெல்லாம் ஐரோப்பிய நாடுகளுக்கு மட்டுமே இருக்கும் சமூக நெருக்கடி என்று நாம் நினைத்தோமேயானால் சீரிஸின் இரண்டாவது பாகத்தில் ஒரு காட்சியில் காவல் அதிகாரியாக வரும் லூக் பாஸ்கோம்பிடம் அவரது பதின்ம வயது மகன் ஆடம் விசாரணைக்கு உதவியாக சில துப்புகளைக் கொடுப்பார். இஸ்டா உலகம் பற்றி விளக்குவார். அப்போது ஆடம் லூக்கிடம், “யூ ஆர் ப்ளண்டரிங்’ என்பார். ஒருவகையில் பெற்றோரும் கூட பிள்ளை வளர்ப்பின் தன்மையைப் புரிந்து கொள்ளாமல் பெரும் பிழையைத் தான் செய்து கொண்டிருக்கிறோமோ என்னவோ? இது ஐரோப்பா, ஆசியா என்று நிலப்பரப்பு சார்ந்தது அல்ல, உலகளாவியது. இணையம் உலகைச் சுருக்கிவிட்டதால் உறவுச் சிக்கல்களில் தன்மையும் மாறிக் கொண்டுதான் இருக்கிறது.
அதேபோல் அந்தப் பாகத்தில், பெண் காவல் அதிகாரி மிஷ், ஒரு காட்சியில் “தாங்கள் குழந்தைகள் என்பதை உணர வைக்கும் விஷயம்தான் எல்லாக் குழந்தைகளுக்கும் தேவைப்படுகிறது” என்பார். உண்மையில் குழந்தைகளை நாம் அவ்வாறாக குழந்தைத்தன்மையுடன் இருக்க அனுமதிக்கிறோமா?
குழந்தைகளிடம் பேசுவோம்... - மூன்றாவது எபிசோடில், ஜேமி மில்லரிடம் உளவியல் நிபுணர் மேற்கொள்ளும் நீண்ட ஆலோசனை மட்டுமே இடம்பெற்றுள்ளது. உண்மையில் குழந்தைகளிடம் வீட்டில் உள்ளவர்கள் குறிப்பாக தாய், தந்தை எவ்வளவு வெளிப்படையாகப் பேசிப் பழகியிருக்க வேண்டும் என்பதை சுட்டிக் காட்டுகிறது. Pre sentence offence report (ப்ரீ செண்டன்ஸ் அஃபன்ஸ் ரிப்போர்ட்) என்ற அறிக்கையை தயார் செய்ய வருகிறார் ப்ரயோனி அரிஸ்டன். ஆர்ப்பாட்டம் இல்லாத நடிப்பு. அவரது நடிப்புக்கு சவால் விடும் அளவுக்கு ஜேமி மில்லராக வரும் ஓவன் கூப்பரின் நடிப்பு. பூட்டிய அறைக்குள் நடைபெறும் கான்வர்சேஷனை அத்தனை ஆழமானதாக, அழுத்தமானதாக செதுக்கியிருக்கிறார்கள். அரிஸ்டன் தன் கேள்விகளை மிக நேர்த்தியாக முன்வைக்கிறார். அவை வெளிப்படையானதாகவும் உள்ளன. “உன் மீதான குற்றச்சாட்டுகளை நீ எப்படி புரிந்து கொண்டிருக்கிறாய் என்பதை தெரிந்து கொள்ளவே வந்திருக்கிறேன்” எனக் கூறுகிறார்.
அவர் முன்வைக்கும் கேள்விகள் எல்லாம் ஜேமி மில்லர் வீட்டில் எதைப் பார்த்து வளர்ந்தான், பள்ளியில் தன்னை என்ன மாதிரியாகப் பார்த்தால், சமூக வலைதளத்தில் தன்னை எப்படி அடையாளப்படுத்திக் கொண்டான், பெண்கள் மீது அவன் என்ன பார்வை கொண்டுள்ளான், பெண்கள் அவனை எப்படிப் பார்க்கிறார்கள் என்று நினைக்கிறான் என்று அவனைப் பற்றி அகமும், புறமும் தெரிந்து கொள்ளும் கேள்விகளாக இருக்கின்றன. ஆரம்பத்தில் இருந்தே ஜேமி புத்திசாலி மாணவன் என்பதை அனைவரும் ஒப்புக் கொள்வது போல் அவனுக்கு அந்தக் கேள்விகள் பின்னால் இருக்கும் சூட்சமங்கள் புரிகின்றன. அது அவனுக்கு ‘டீன் ரேஜ்’ - பதின்ம வயது துடுக்கான பேச்சு, ஆவேசம், கோபத்தைத் தருகிறது.
“நீ ஏன் சமூகவலைதளக் கணக்கை வைத்திருக்கிறாய்?” என்ற அரிஸ்டனின் கேள்விகளுக்குப் பின்னர் தான் சமூக வலைதளக் கணக்கு தனக்கு ஏன் தேவைப்பட்டது என்ற கேள்வியே அவனுக்கு எழுகிறது. எல்லோரும் வைத்திருக்கிறார்கள். எல்லோரும் புகைப்படம் பகிர்கிறார்கள் என எல்லோரும் செய்யும் ஒரு விஷயத்தைத் தான் பதின்ம வயது குழந்தைகள் அழுத்தத்தில் செய்கிறார்கள். ‘சோஷியல் மீடியா வேலிடேஷன்’ என்பது பதின்ம வயது குழந்தைகளுக்கு வாழ்க்கையின் உண்மைத்தன்மையை புறக்கணிக்கச் செய்கிறது.
தாய் / தந்தை தங்கள் பிள்ளைகளிடம் அவர்களின் பதின்ம வயது பற்றி, அவர்களின் உடல் பற்றி, அவர்களுக்கு அரும்பும் ஆசைகள், ஏற்படும் கோபதாபங்கள், ஏக்கங்கள் பற்றி பேசுவது அவசியம். உளவியல் நிபுணர் ஜேமியிடம் கேட்பார், “ஒரு 13 வயது சிறுவன் ஒரு பெண்ணிடம் எவ்வளவு தூரம் செக்ஸுவலி நெருக்கமாக இருக்கலாம் என நினைக்கிறாய்?”. இப்படியான கேள்விகளை எல்லாம் நாம் நம் பிள்ளைகளிடம் பேசுவதே இல்லை. குழந்தைகளிடம் வெளிப்படையாகப் பேசுவோம்.
‘மேஸ்குலினிட்டி’ பற்றி ஆன்லைன் உலகம் குறிப்பாக ஆணாதிக்கத்தை ஊக்குவிக்கும் இணையம், சமூக வலைதளங்கள் அடங்கிய மேனோஸ்பியர் எத்தகைய அபாயகரமான சிந்தனைகளை விதைத்துள்ளது என்பதையும், அதனால் ஏற்பட்டுள்ள தாக்கத்தையும் ஜேமி மில்லரில் உளவியல் நிபுணர் ஒட்டுமொத்த உருவகமாகப் பார்க்கிறார். அவருக்கு அது பதற்றத்தையும், கோவத்தையும், வேதனையையும் தருகிறது. ‘டாக்சிக் மேஸ்குலினிட்டி’யின் ஒரு விக்டிமாக ஜேமி மில்லர் நிற்கிறான்.
ஒரு தந்தையின் போராட்டம்: எபிசோடு 4-ல் ஜேமி மில்லர் காண்பிக்கப்படவே மாட்டான். அவனுடைய குரல் மட்டும் போன் வழியாக கடைசியில் ஒலிக்கும். தான் குற்றத்தை ஒப்புக் கொள்ளப்போவதாகச் சொல்வான், அதற்கு முன்னர் வீட்டில் நடக்கும் சம்பவங்களில் தந்தை எட்டி மில்லரின் மேஸ்குலினிட்டி, தனது வண்டியில் (Nonce) பாலியல் குற்றவாளியை குறிப்பிடும் பிரிட்டனின் வட்டார வழக்குச் சொல் அவருக்கு ஏற்படுத்தும் ஆத்திரம், ஆத்திரமூட்டும் சூழலை அவர் கையாளும் விதம், குடும்பத்தில் அவர் செலுத்தும் ஆதிக்கம், சமூகத்தில் அவர் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் விதம் எல்லாமே ஜேமி மில்லர் மீது நிச்சயமாக தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் என்பதை நம்மால் யூகித்துக் கொள்ள முடிகிறது. அந்த நேரத்தில்தான் சைக்காலஜிஸ்ட் ஏன் ஜேமியின் தந்தை, தாத்தா பற்றி கேட்டார் என்று நமக்கும் தெளிவாகப் புரிகிறது.
ஜேமி மில்லர் தான் குற்றத்தை ஒப்புக் கொள்ளப்போவதாகச் சொன்னதும் அதை ஏற்றுக் கொள்ளத் தவிக்கும் காட்சிகளில் தந்தையாக நடித்துள்ள ஸ்டீபன் கிரஹாம் வாழ்ந்திருக்கிறார். அந்த தொலைபேசி உரையாடல் முழுவதும் ஜேமி தெளிவாகவும், எட்டி தவிப்போடும் இருக்கின்றனர். “அப்பா நான் என் குற்றத்தை ஒப்புக் கொள்ளப் போகிறேன்” எனக் கூறும்போது அதை குடும்பத்தினர் ஒவ்வொருவரும் அணுகும் விதம் நெகிழ்ச்சியாக இருக்கிறது. தந்தை மவுனத்தையும், தாய் ஜேமியின் சவுகரியங்கள், அடுத்த திட்டங்கள் பற்றி பேசுவதும் அழுத்தமான காட்சிகள்.
இறுதியாக ஜேமியை நாம் சரியாகத் தான் வளர்த்தோமா என்று பெற்றோர் இருவரும் பேசிக் கொள்கின்றனர். உண்மையில் அந்த உரையாடலும், எட்டி மில்லர் ஜேமி அறையில் கரடி பொம்மையை கட்டி அழுது முடிக்கும் போதும் நிச்சயம் பெற்றோராக இருக்கும் ஒவ்வொருவரும் தங்கள் பிள்ளை வளர்ப்பு முறையை சுயபரிசோதனை செய்து கொள்ளத் தூண்டும் விதமாகவே உள்ளது.
எட்டியிடம் அவரது மனைவி சொல்வார்: “உங்களுக்கு நிறைய கோபம் வரும். அதை ஜேமி கவனிக்கத் தொடங்கியபோதே நீங்கள் அதை அப்படியே நிறுத்தியிருக்க வேண்டும்” என்பார். உண்மை, நமது மோசமான நடவடிக்கைகளை குழந்தைகள் கவனித்து அதை கையாளத் தொடங்கும்போது, உடனடியாக நம்மை நாம் திருத்திக் கொள்ள வேண்டும். அதைத் தான் எட்டியும், அவரது மனைவியும் புலம்பித் தீர்க்கிறார்கள்.
இன்சல், ரெட் பில், ப்ளூ பில், கிட்னி பீன் இமோஜி இன்னும் பிற அழுத்தங்கள்: இந்த சீரிஸ் முழுக்க முழுக்க ஆன்லைன் உலகம் குழந்தைகளின் மீது ஏற்படுத்தும் தாக்கம் சார்ந்தது. இணைய உலகம் நாம் நினைப்பது மட்டுமல்ல. அடலசென்ட் குழந்தைகள், டீன் பருவத்தினர் என ஒவ்வொரு வயதினருக்கும் அது வெவ்வேறு தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ‘இன்சல்’ என்பது பிரிட்டன் பள்ளிகளில் புல்லியிங் (கொடுமைப்படுத்துதல்) முறை. பாலுறவுக்கு தகுதியில்லை என கருதும் ஆண் பிள்ளைகளை இப்படியான வார்த்தைகளால் துவேசம் செய்கிறார்கள்.
80 சதவீதம் பெண்களுக்கு 20 சதவீதம் ஆண்களைத் தான் பிடிக்கும் என்பதால் அவர்கள் இணைய உலகில் தாங்கள் எப்படிப் பார்க்கப்பட வேண்டும் என்பதற்காக ஏதேதோ இன்ஃப்ளூயன்சர்களை பின்பற்றி சீரழிகின்றனர். எட்டி - மாண்டா தம்பதி சொல்வது போல் வீட்டுக்குள் இருக்கிறார்கள், பூட்டிய அறையில் இருக்கிறார்கள். அதனால் நம் பிள்ளைகள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என நினைத்துக் கொண்டே எதையும் கடந்து சென்றுவிடக் கூடாது. பிள்ளை வளர்ப்பு என்பது ஒரு நீண்ட செயல்முறை. அது குழந்தைகள் அந்தப் பருவத்தை முழுமையாகக் கடக்கும் வரை நீளும். 13, 15, 17, 19 என நீளும். ‘அடலசென்ஸ்’ சீரிஸ் மட்டுமல்ல, வாழ்க்கையும் ‘சிங்கிள் ஷாட்’ தான் நேர்த்தியாகக் கடக்க முயற்சிப்போருக்கு குறிப்பாக குழந்தைகளை இன்னும் பெட்டராக வளர்க்க விரும்பும் பெற்றோருக்கு ஒரு நல்ல ரெஃபரன்ஸ்.
முக்கிய செய்திகள்
ஓடிடி களம்
2 days ago
ஓடிடி களம்
3 days ago
ஓடிடி களம்
7 days ago
ஓடிடி களம்
9 days ago
ஓடிடி களம்
9 days ago
ஓடிடி களம்
9 days ago
ஓடிடி களம்
11 days ago
ஓடிடி களம்
12 days ago
ஓடிடி களம்
12 days ago
ஓடிடி களம்
15 days ago
ஓடிடி களம்
15 days ago
ஓடிடி களம்
16 days ago
ஓடிடி களம்
18 days ago
ஓடிடி களம்
18 days ago
ஓடிடி களம்
21 days ago