‘ஆல் வி இமேஜின் அஸ் லைட்’ (All We Imagine As Light) திரைப்படம் சர்வதேச அங்கீகாரங்கள் பல பெற்று, விமர்சன ஜாம்பவான்களின் நேர்மையான, ஒருதலைபட்சமான, கடுமையான பார்வைகளை எல்லாம் சந்தித்துவிட்டு, இல்லங்கள் தேடி, ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வந்தமையால், நானும் பார்த்துவிட்டேன்! என்னுடன் இந்தப் படம் என்ன பேசியது என்பதைப் நேர்மையுடன் பகிர்கிறேன். இதில், ஸ்பாய்லர்கள் இருந்தாலும், அது எந்த விதத்திலும் திரை அனுபவத்தை பாதிக்காது என நம்புகிறேன்.
படத்தின் நாயகிகள் பார்வதி, பிரபா, அனு. முறையே 50+, 30+ 20+ என்று அவர்களின் வயதை ஊகிக்கலாம். மூவருமே மும்பை நகருக்கு புலம்பெயர்ந்தவர்கள் தான். பிரபாவும், அனுவும் கேரளத்தில் இருந்து வந்த செவிலியர். மும்பை மட்டுமல்ல உலகம் முழுவதும் புலம்பெயர்ந்துள்ள கேரள நர்ஸ்களின் பிம்பங்களாகக் கூட இவர்களை நாம் உள்வாங்கிக் கொள்ளலாம். முதுமையை தொட்டுவிட்ட பார்வதி மும்பை நகரின் மற்றுமொரு அமைப்பு சாரா தொழிலாளி. இவர்கள் இழந்ததும், பெற ஏங்குவதும், தங்களைப் பிணைத்து வைத்திருக்கும் மாயையிலிருந்து விடுபட முயற்சிப்பதும்தான் கதை.
இவர்களின் ஊடாகத்தான் பெண்ணியம், புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் உணர்வுகள், நிலத்தின் மீதான உரிமைக்கான போராட்டம், பெண்களின் உள்ளார்ந்த உணர்வுகள் பேசப்பட்டுள்ளது. கூடவே, வெளிப்படையாக பேசக்கூட அனுமதிக்கப்படாத ஒரு பெண்ணின் பெருங்காமத்தைப் பற்றியும் பேசப்பட்டிருக்கிறது. அத்தனையையும் பொட்டலமாகக் கட்டி உலக, உள்ள மாயைகளிலிருந்து புலம்பெயர்தலுக்கான ஒளியைப் பாய்ச்சி படத்தின் பெயருக்கு நியாயம் செய்திருக்கிறார் இயக்குநர் பாயல் கபாடியா.
தொழிலாளர்களின் குரலில்... - மும்பைக்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் சாட்சியங்களோடு தான் படம் ஆரம்பிக்கிறது. “பல பத்தாண்டுகள் மும்பையில் வசித்திருந்தாலும் கூட அந்நியமாகவே உணர்கிறேன்” என்று அந்த சாட்சியக் குரல்களில் ஒன்று கூறுகிறது. “வேலையும், அதிலிருந்து கிடைக்கும் பணமும் தான் குக்கிராமங்களில் இருந்து பெருநகரங்களுக்கு புலம் பெயரச் செய்கிறது. இங்கே எனக்கு பணி கடினம் என்றாலும் அந்த வீட்டில் ஒரு மகாராணியைப் போல் உணவருந்தினேன்” என்கிறது வறுமையின் குரல்.
» ஜோஜு ஜார்ஜின் ‘பணி’ ஜன.16-ல் ஓடிடியில் ரிலீஸ்!
» புதிய குற்றக் களம் நோக்கி... - ‘பாதாள் லோக் 2’ சீரிஸ் ட்ரெய்லர் எப்படி?
புலம்பெயர்தல் என்பது மாநிலம் விட்டு மாநிலம் அல்ல ஒரு மாநிலத்தின் முன்னேறிய பகுதிக்கு பின் தங்கிய பகுதிகளில் இருந்து வருவோரையும் உள்ளடக்கியது தான் என்றுணர்த்தவே சாட்சியக் குரல்கள் மலையாளம், தமிழ் மட்டுமல்லாது மும்பையில் பேசப்படும் இந்தி, மராட்டிய மொழியின் பல்வேறு வட்டார வழக்குகளிலும் கூட ஒலிக்கிறது.
அன்றாடப் பிரச்சினை... - புலம்பெயர்தல் ஒரு சமூகப் பிரச்சினை. தனியாக ஆழமாகப் பேசப்பட வேண்டிய பிரச்சினை என்றால் ஒரு பெருநகரத்துக்கு புலம் பெயரும் பெண்களின் பிரச்சினையும் அதே ஆழத்தோடு அணுகப்பட வேண்டியதுதான். இதை, ‘ஆல் வி இமேஜின் அஸ் லைட்’ நிறைவாகச் செய்துள்ளது. உண்மையைச் சொல்லப் போனால் பெண்களுக்கு அன்றாடம் வீட்டிலிருந்து பணியிடத்துக்குச் சென்று திரும்புவதும் கூட சிறிய புலம்பெயர்தல் தான். ஒரே நாளில் பெண்கள் வீட்டிலும், பயண நேரத்திலும், அலுவல் இடத்திலும் பல்வேறு ரோல்களையும், அது தரும் சவால்களையும் நேர்த்தியாக ஏற்றாக வேண்டும். ஒரு நாளைக்குள் ஓராயிரம் உணர்வுகளை அந்த வாழ்தல் தாங்கியிருக்கும் என்பதை ‘ஆல் வி இமேஜின் நாயகிகள்’ போகிற போக்கில் உணர வைக்கின்றனர்.
அப்படி ஒரு காட்சி தான் ஃப்ரன்டல் நியூடிட்டி என்று ஓடிடி ரிலீஸில் சென்சார் செய்யப்பட்டிருக்கிறது. தன்னை சந்தேகப்படும் பிரபா மீது கடும் கோபத்துடன் வரும் அனு பிராவை துறக்கும் காட்சி. கண்ணாடியில் அவள் முழுமையாகத் தெரிகிறாள். யாரேனும் ஒரு சிலர் அதை ரீவைண்ட் செய்து பார்க்கலாம். ஆனால் உண்மையில், பெண்ணின் வேதனையை சொல்லும் காட்சி அது. வீடு திரும்பியதும் பசி, தண்ணீர், இயற்கை உபாதை ஆசுவாசங்களைக் காட்டிலும், தன் மீதான பழி சொல்லுக்கு எதிர்வினையாற்றுவதைக் காட்டிலும் ப்ராவை கழட்டுதல் என்பது அனுவுக்கு பிரதானமாக இருக்கிறது. உண்மையில் பெண்களிடம் கேட்டால் தான் அது எத்தனை பெரிய சுதந்திரம் என்று தெரியும்.
நாயகிகளும், மாயைகளும்... - கதைப்படி பிரபாவின் கணவர் திருமணமான சில நாட்களில் வெளிநாடு சென்றுவிடுகிறார். அதிலிருந்து 10 ஆண்டுகளுக்கும் மேலாக தவிப்புடன் வாழ்கிறாள். கணவனுடன் பேச்சளவில் கூட தொடர்பில்லாமல் வாழ்கிறாள். அவள் கணவர் மீது பார்வதி காட்டும் அளவுக்குக் கூட தார்மிகக் கோபம் பிரபாவுக்கு வரவில்லை. கணவருடன் தொலைபேசி தொடர்பு முயற்சிகள் கூட தோற்றுப் போக, கணவர் அனுப்பியதாக வந்து சேரும் ரைஸ் குக்கரை காமத்தோடு வாரி அணைத்துக் கொள்கிறாள். தன்னுடைய காமம் வெளிப்படுத்த அறுகதை உள்ளது தானா என்ற தவிப்பு அவளுக்குள் இருக்கிறது.
அந்த மனப் போராட்டத்தால் தன்னுடன் பணிபுரியும் கேரளாவிலிருந்து புலம்பெயர்ந்த மருத்துவர் மனோஜின் கவிதைகளையும், அதன் மூலமான காதல் தூதையும், ஏன் வெளிப்படையான காதல் கூறுதலையும் கூட ‘ஐ ஆம் மேரிட்’ என்ற மாயையால் ஏற்க மறுக்கிறாள். என்றாவது ஒரு நாள் கணவன் வருவான், ஊரில் கணவனோடு மகிழ்ந்திருந்த நாட்கள் மீண்டும் வசந்தமாக வரும் என்கிற ‘போராட்ட மாயை’யில் இருக்கிறாள்.
அனு, முஸ்லிம் இளைஞர் ஷியஸை காதலிக்கிறாள். சதா சர்வ்காலம் தன் திருமணப் பேச்சை மட்டுமே தூக்கிக் கொண்டு ஃபோனில் பேசும் குடும்பத்துக்கு தன் காதலை புரியவைத்து ஷியாஸை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற மாயையில் இருக்கிறாள். காதலனை தனிமையில் சந்திக்க அவன் வீட்டுக்கு புர்கா அணிந்து கொண்டு செல்லத் தயாராகி, அது நடக்காமல் போகவே நான்கு பேரின் கண்களின் முன் தீர்மானங்களில் இருந்து விடுபடவே முடியாதா என்ற கேள்வி அவருக்குள் தீயாய் எரிகிறது. குடும்பத்தின், சமூகத்தின் பார்வைகள், முன் தீர்மானங்கள் எல்லாம் அகன்று ஷியாஸுடன் தன் வாழ்வை வாழ முடியும் என்ற ‘எதிர்பார்ப்பு மாயை’யில் இருக்கிறாள்.
பார்வதி, 22 ஆண்டுகளாக தான் வாழும் குடியிருப்பை இடித்துவிட்டு அடுக்குமாடி கட்ட முற்படும் கார்பரேட் கட்டுமான நிறுவனத்துடன் மோதி ஜெயித்துவிடலாம் என்ற மாயையில் இருக்கிறார். பிரபாவுடன் வழக்கறிஞரை சந்திக்கும் போதும், தொழிலாளர் ஒற்றுமை கூட்டத்தில் கலந்து கொண்டு உத்வேகப் பேச்சைக் கேட்டு கைதட்டும் பார்வதி, சட்டமும், உரிமைப் போராட்டங்களும் தன்னை மீட்கும் என்ற நம்பிக்கை மாயையில் இருக்கிறார்.
ஆனால், ஒருகட்டத்தில் நம் பெயர் அல்ல நாம் வாழும் ஆண்டுகள் அல்ல காகிதங்கள் மட்டும் தான் (நம் பெயர் கொண்ட ஆவணங்கள்) நம் வெற்றி, தோல்விகளை சட்டபூர்மாக தீர்மானிக்கும் என்ற உண்மையை அறிந்து கொள்கிறார். தனக்கு அநீதி செய்யும் கட்டுமான நிறுவனத்தின் பேனர் மீது கல் வீசுவது மட்டுமே ஒரு பெருநகரத்தில் தன்னால் பெற முடிந்த வெற்றி என்ற புலம்பெயர்ந்தோரின் கையறு நிலையை தாங்கி நிற்கிறார்.
மேலும், பிரபாவிடம், மும்பை சிட்டி டவர்களைக் காட்டி “இப்படி விண்ணை முட்டும் கட்டிடங்களைக் கட்டுவோர் தாங்கள் கடவுளாகி விடலாம் என நினைக்கிறார்கள்” என்று கார்பரேட் கோரத்தை எளிமையாகச் சொல்கிறார்.
தோல்விகளோடு, வேதனைகளோடு பார்வதி சொந்த ஊருக்கே திரும்புவதை ‘கூடு திரும்புதல்’ என்றெல்லாம் அலங்கார வார்த்தையில் வர்ணிக்க முடியாது. வெறும் பிழைப்புக்கான மற்றொரு ‘ஆப்ஷன்’ என்று தான் புரிந்த சொல்ல வேண்டும். ஊர் திரும்பும்போது பேருந்தில் காட்டப்படும் பார்வதியின் முகம் அதை வார்த்தைகளைவிட அழகாகச் சொல்லும்.
மூவருமே ஒருவொருக்கொருவர் ஆதரவாகவும், உதவியாகவும், ஆறுதலாகவும் இருக்கிறார்கள். வேரறுந்து நிற்பவர்களுக்குத் தானே அப்படிப்பட்ட நிற்கதியானவர்களின் துயர் தெரியும் என்பதுபோல்.
படத்தின் ஊடே மீண்டும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குரல் ஆவணப்படுத்தப்படுகிறது. அதில் ஒரு குரல், ”இது கனவுகளின் நகரம் என்று சிலர் சொல்வார்கள். ஆனால் நான் அப்படிச் சொல்ல மாட்டேன். இது மாயைகளின் நகரம். இந்த நகரத்துக்கென ஒரு குறியீடு உண்டு. நீங்கள் சாக்கடையில் வாழ்ந்தாலும் கூட கோபப்பட உங்களுக்கு உரிமை கிடையாது” என்று கூறும். இன்னொரு குரல், அதனை ஆமோதித்து “இதை மும்பையின் ஆன்மா என்பார்கள்” என்று ஆதங்கப்படும். தமிழில் ஒலிக்கும் மற்றுமொரு குரல், “இந்த மாயையை நாம் நம்ப வேண்டும்.இல்லாவிட்டால் பைத்தியம் பிடித்துவிடும்” என்று சொல்லும்.
கனவா, மாயையா? - வாழ்க்கையில் மனிதர்களுக்கு பல கனவுகள் இருக்கலாம். இதுதான் வெற்றி, நல்ல சம்பாத்தியம், மானம், கவுரவம், மேன்மை, தன்னிறைவு, நல்லதொரு குடும்பம், சாதி, மதம், உண்மைக் காதல், நேர்மையான காமம் என்று சமூகம் பல்வேறு எல்லைகளைக் காட்டும், அதுவே வழிகாட்டி என நம்பி தம் கனவுகளை அடைந்துவிட்டதாக மாயையில் இருப்பவர்கள் தான் அதிகம். வெகு சிலர் மட்டுமே நாம் உள்வாங்கிக் கொள்ளும் ஒளியெல்லாம் ஒளியல்ல எல்லாம் மாயைதான் என்று உணர்கிறார்கள். மாயையில் இருந்து புலம்பெயர்தலே யதார்த்தம். அதுவே வாழ்தல். அந்த வாழ்தலை எட்டியவர்களாக பிரபா, அனு, பார்வதியை புரிந்து கொள்ளலாம்.
பார்வதியின் கிராமத்துக்குச் செல்லும் அனுவும், பிரபாவும் மதுவை சுவைத்து மெய்மறந்து ஆடும் நடனமும், அதன் பின்னணியில் பாடும் பாடலின் ஆங்கில மொழிபெயர்ப்பு நமக்கான ஞான உபதேசம்.
கடல்புர கிராமத்தில் அனுவையும், அவள் காதலனையும் நெருக்கமாகப் பார்க்கும் பிரபாவுக்கு தன் தேவை என்னவென்று தெளிவாகிறது. காத்திருத்தல் அல்ல, அதிலிருந்து விடுபடுதலே தேவை என புரிந்து கொள்கிறாள். அந்தப் புரிதலோடு அமர்ந்திருக்கும் அவள் கடலில் இருந்து மீட்கப்பட்ட நபருக்கு முதலுதவி செய்யும் காட்சிகள் கவித்துவமானவை. அது உண்மையா, கற்பனையா என்று பார்வையாளர்கள் விரும்பியபடி எடுத்துக் கொள்ளலாம்.
பிரபாவின் தொடர்பில்லா கணவர் போலவே பேசும் அந்த ஆண் கதாபாத்திரம், “நான் வெளிநாட்டில் சிக்கிக் கொண்டேன். நான் ஒளியென்று எதை நினைத்தேனோ அது என்னை குருடாக்கிவிட்டது. இருட்டில் ஒளியை கற்பனை செய்கிறோம். இப்போது நான் உன்னுடன் புது வாழ்க்கையை வாழ நினைக்கிறேன். முன்புபோல் இருக்காது. இது சத்தியம்” எனக்கூறி பிரபா ஏங்கிய ஸ்பரிசங்களையும், முத்தங்களையும் கொடுக்கும்போது “நான் உன்னை இனி எப்போதுமே பார்க்கவே விரும்பவில்லை” என்று கண்ணீர் வழிய பிரபா கூறுகிறாள். முற்றிலுமாக மாயையில் இருந்து விடுபடுகிறாள் எனப் புரிந்து கொள்ளலாம். அதன் நீட்சியாக அனுவின் காதலை அங்கீகரிக்கிறாள்.
கடற்கரை ஒட்டிய திறந்தவெளியில் ஷியாஸுடன் உறவு கொள்கிறாள் அனு. யார், யாருக்கோ பயந்து தேக்கி வைத்த அத்தனை அன்பையும் அனுவும், ஷியாஸும் பரிமாறிக் கொள்கிறார்கள். குடும்பத்தின் சம்மதத்தோடு, சமூகத்தின் அங்கீகாரத்தோடுதான் வாழ்க்கையைத் தொடங்க வேண்டும் என்ற மாயையில் இருந்து விடுபட்டு ஒரு எதிர்காலத்தை உணர்கிறாள். இனி அவள் அவளுடைய வீட்டாரின் அழைப்புகளைக்கூட ஏற்பாளா என்று தெரியாது.
மும்பை, ‘கனவுகளின் நகரம்’ என்ற நம்பிக்கை மட்டும் மாயை அல்ல, நாம் எதையெல்லாம் ஒளி, வழிகட்டி என நினைத்துக் கொள்கிறோமோ அவை எல்லாமும் கூட மாயைதான் என்று பிரபாவும், பார்வதியும், அனுவும் புரிய வைக்கிறார்கள். ஆல் வி இமேஜின் அஸ் லைட் - மாயைகளில் இருந்து புலம்பெயர்தல்!
முக்கிய செய்திகள்
ஓடிடி களம்
1 day ago
ஓடிடி களம்
1 day ago
ஓடிடி களம்
2 days ago
ஓடிடி களம்
6 days ago
ஓடிடி களம்
9 days ago
ஓடிடி களம்
10 days ago
ஓடிடி களம்
13 days ago
ஓடிடி களம்
18 days ago
ஓடிடி களம்
19 days ago
ஓடிடி களம்
20 days ago
ஓடிடி களம்
22 days ago
ஓடிடி களம்
25 days ago
ஓடிடி களம்
1 month ago
ஓடிடி களம்
1 month ago
ஓடிடி களம்
1 month ago