Thalavan: விறுவிறு ஆடு புலி ஆட்டம் | ஓடிடி திரை அலசல்

By கலிலுல்லா

கேரளாவின் செப்பனம்தொட்டா காவல் நிலையத்துக்கு உதவி ஆய்வாளராக பணி மாற்றலாகி வருகிறார் கார்த்திக் (ஆசிஃப் அலி). ஒன்றரை வருடத்தில் இது அவருக்கு 5-ஆவது ட்ரான்ஸ்பர். அதே காவல் நிலையத்தில் சர்க்கிள் இன்ஸ்பெக்டராக இருப்பவர் ஜெயசங்கர் (பிஜு மேனன்). இருவருக்கும் இடையில் ‘ஈகோ’ தலை தூக்க, மோதல் வெடிக்கிறது. இந்தச் சூழலில், ஜெயசங்கர் வீட்டு மொட்டை மாடியில் சாக்கு மூட்டையில் பெண் ஒருவர் கொல்லப்பட்டு கிடக்க, அவர் மீது கொலைப்பழி விழுகிறது. தொடர்ந்து அவர் கைது செய்யப்படுகிறார். இந்த வழக்கின் விசாரணை கார்த்திக்கிடம் ஒப்படைக்கப்படுகிறது.

இந்த விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைக்க, உண்மையில் அந்தப் பெண்ணை கொன்றது யார்? அதற்கு காரணம் என்ன? ஜெயசங்கர் ஏன் சிக்க வைக்கப்படுகிறார்? - இதுதான் படத்தின் திரைக்கதை. இந்த மலையாளப் படம் சோனி லிவ் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது. கொலையும் அதற்கான காரணங்களையும் தேடிப் பிடித்து கண்டறியும் வழக்கமான த்ரில்லர் கதைதான் என்றாலும், அதனை எந்த இடத்திலும் அயற்சி கொடுக்காமல் நகர்த்தியிருக்கிறார் இயக்குநர் ஜிஸ் ஜாய். வழமையிலிருந்து விடுபட அவர் சேர்த்திருக்கும் ‘ஈகோ’ ஃப்ளேவர் ருசியை கூட்டுகிறது. பிஜுமேனன் - ஆசிஃப் அலியும் முறுக்கிக் கொண்டிருக்கும் காட்சிகள் ‘அய்யப்பன் கோஷி’ வகையறா!

இந்த மோதலின் வெடிப்புச் சூட்டில் கதை நகரும் என எதிர்பார்க்கும் பார்வையாளர்களுக்கு திடீரென ஒரு ‘யூடர்ன்’ அடித்து திசை திருப்பியிருக்கும் யுக்தி நிமிர்ந்து உட்கார வைக்கிறது. நூல் பிடித்து நகர்ந்து அடுத்து என்ன என்று ஆர்வமூட்டும் திரைக்கதையில், காவல் துறையின் அதிகார அத்துமீறலையும், அவர்களுக்குள் நிகழும் ‘பழிவாங்கல்’ போக்கையும் அழுத்தமாக பதிய வைக்கிறது படம். இறுதி வரை யார் தான் கொலையாளி, அவருக்கான நோக்கம் என்ன என்பதை கணிக்க முடியாதபடி, கடக்க வைத்ததில் திரைக்கதை ஆசிரியர்கள் ஆனந்த் - சரத் வெற்றி பெற்றுள்ளனர். ஒவ்வொரு நபராக மாறி மாறி வரும்போது, இறுதியில் குற்றவாளியை பார்த்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தை கட்டமைத்தது முழுமையான ‘எங்கேஜிங்’ த்ரில்லராக ரசிக்க வைக்கிறது.

ஆனால், பசியை அதிகரித்து இறுதியில் ‘பழைய’ சோறை ‘ஊறுகாய்’ கூட இல்லாமல் கொடுத்தது போல சிறு ஏமாற்றம் இருக்கவே செய்தது. அது பார்வையாளர்களின் ரசனைக்கு உட்பட்டது. இன்னும் அழுத்தமாக இறுதிக் காட்சியை விவரித்து, அதற்கான காரணத்தையும், விசாரணைக் காட்சிகளைப் போல ஆழமாக சொல்லியிருக்கலாம் என தோன்றாமல் இல்லை. நடுவில் எழுத்தாளர் ஒருவர் வந்து செல்லும் காட்சிகள் திணிப்பு.

ஈரமில்லாத ‘கறார்’ காக்கிச்சட்டை அதிகாரி பிஜு மேனன். விறைப்பான முகம், எப்போதும் ஒட்டிக்கொண்டிருக்கும் வெடுவெடுப்பு பேச்சு, யாரையும் எதிர்க்கும் குணம், கரிசனமில்லா காவல் துறை அதிகாரியாக மிரட்டுகிறார். நேர்மையை தான் அணிந்திருக்கும் உடையின் ‘ஸ்டார்’களில் ஒன்றாக பொருத்திக் கொண்டு, யாருக்கும் அடிபணியாத, கதாபாத்திரம் ஆசிஃப் அலி உடையது. இருவரும் கிட்டதட்ட ‘கறார்’, ‘நேர்மை’ புள்ளிகளில் இணைந்தாலும், இரக்கத்தால் வேறுபடும் கதாபாத்திரங்கள். ஆழமான கதாபாத்திர வடிவமைப்புக்கு ஏற்ற அழுத்தமான நடிப்பு இருவரிடமும் வெளிப்படுகிறது.

மியா ஜார்ஜ், அனுஸ்ரீ இரண்டு பெண் கதாபாத்திரங்களுக்கும் பெரிய அளவில் ‘ஸ்கோப்’ இல்லை. தவிர்த்து, திலீஷ் போத்தன், ஜோஜி ஜான், ரஞ்சித், கோட்டயம் நசீர், ஜாபர் இடுக்கி, பிலாஸ் சந்திரஹாசன் தேவையான பங்களிப்பை செலுத்துகின்றனர்.

பெரிய அளவில் இரைச்சலை வாரியிறைக்காமல், அதே சமயத்தில் விறுவிறுப்பையும், எதிர்பார்ப்பையும் கூட்டும் மெல்லிய ஒலிகளை கொண்டு பின்னணி இசையமைத்திருக்கும் தீபக் தேவ் கவனிக்க வைக்கிறார். சரண் வேலாயுதன் ஒளிப்பதிவு நேர்த்தி. சூரஜ்ஜின் ’கிறிஸ்’ப்பான ’கட்ஸ்’ படத்துக்கு பலம். ஒரு மூச்சில் பார்த்து விடக்கூடிய இப்படம் சோனி லிவ் ஓடிடியில் வெளியாகி தமிழிலும் காணக் கிடைக்கிறது. குறிப்பாக, க்ரைம் - த்ரில்லர் ரசிகர்களுக்கு போரடிக்காத விறுவிறுப்பான ஆடு புலி ஆட்டம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE