Stolen: கலைமான் கூட்டத்தில் ஒரு கன்றுக்குட்டி | ஓடிடி திரை அலசல்

By பால்நிலவன்

சுவாரஸ்யத்துக்காக சொல்லப்படும் கற்பனைக் கதைகள் சினிமாவில் ஏராளமாகக் கொட்டிக் கிடக்கின்றன. இயற்கையோடு இயைந்த வாழ்க்கையை, காலநிலை மாற்றங்களினால் மனித வாழ்வில் ஏற்படப் போகும் அபாயகரமான மாற்றங்களை, எச்சரிக்கைகளை பேசக்கூடிய திரைப்படங்கள் எங்கே என்று தேடித்தான் பார்க்க வேண்டியிருக்கிறது.

அவ்வகையில், எஸ்கிமோக்கள் பற்றிய nanook of the north (1922), மங்கோலிய ஒட்டகங்கள் வளர்ப்பு குறித்த The Story of the Weeping Camel( 2003), திபெத் மலையுச்சி கிராம வாழ்க்கையைப் பேசிய Watch Lunana: A Yak in the Classroom (2019) போன்ற திரைப்படங்கள் என விரல் விட்டு எண்ணிவிடலாம். ஆஸ்திரேலிய பழங்குடியினக் கலைஞரான டேவிட் குப்லிலை மையக் கதாபாத்திரமாக சித்தரிக்கும் rolf de heer படங்களில் the tracker (2002), ten canoes(2006) மற்றும் ஆப்பிரிக்க இயக்குநர்களான Ousmane Sembène, Abderrahmane Sissako போன்ற இயக்குநர்களின் சில படங்களையும் இதனுடன் சேர்த்துக்கொள்ளலாம்.

இவையெல்லாம் சாதாரணர்களின் வாழ்வை பேசும் அசாதாரணப் படங்கள். சற்றே ஆவணப்பட தன்மைகளைக் கொண்டிருந்தாலும் விறுவிறுப்பான திரைக்கதையையும் தன்னகத்தேக் கொண்டிருக்க தவறுவதில்லை. அந்த வரிசையில் சேர்க்க வேண்டிய இன்னொரு திரைப்படம் ஸ்வீடன் நாட்டில் வாழ்ந்துவரும் 'சாமி' எனும் மேய்ச்சல் நில பழங்குடியினரைப் பற்றிய 'ஸ்டோலன்' (Stolen - 2024) திரைப்படம்.

மானுடவியல் வரலாற்றின் ஆரம்பம் முதலே மேய்ச்சல் தொழில் மனித வாழ்க்கையுடன் வந்துகொண்டேயிருக்கிறது. நாடோடியாக திரியத் தொடங்கிய மனிதன் பின்னர் பழங்குடியினர் என இனக்குழுவாக தொடர்ந்த வாழ்விலும் மேய்ச்சல் ஒரு முக்கிய அங்கமானது. அதன் பின் ஆற்றங்கரை, மலைச்சாரல் ஒட்டிய கிராமங்களைச் சேர்ந்த பலரும் மேய்ச்சலுடன் கூடிய கால்நடை வளர்ப்பில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருப்பதை இன்றும் காணமுடிகிறது.

ஸ்டோலன் திரைப்படம், கலைமான் வளர்ப்பில் ஈடுபடும் சாமி எனும் ஒருவகை பழங்குடியினரைப் பற்றி பேசுகிறது. கலைமான்கள் மட்டுமேயான கால்நடை வளர்ப்பில் ஈடுபடும் அவர்கள் அதிக அளவில் நார்வே, ஸ்வீடன், பின்லாந்து, ரஷ்யா (அருகருகே உள்ள நாடுகள்) ஆகியனவற்றில் கிட்டத்தட்ட நான்கு நாடுகளிலும் நெருக்கமாக இணைந்த தொடர்ச்சியான பகுதியான மேய்ச்சல் நிலங்களில் அவர்கள் வசித்து வருகின்றனர். (வரைபடம் கீழே) மற்ற நாடுகளை ஒப்பிடும்போது ஸ்வீடனில் இவர்களின் எண்ணிக்கை அதிகம். அங்கு மட்டுமே 40 ஆயிரம் பேர் இருக்கலாம் என கணக்கிடப்பட்டுள்ளது. உலக அளவில் கலைமான் மேய்ச்சலில் ஈடுபடுவோர் கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் பேர் இருக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

கலைமான் வளர்ப்பில் ஈடுபடும் பழங்குடியினர் பரவியுள்ள பகுதிகள்

இத்திரைப்படம் மையக் கதாபாத்திரமான சிறுமி எல்சா, கலைமான் கூட்டத்தில் செல்லப்பிராணியாக தனக்கென ஒன்றை தேர்ந்துகொள்ளலாம் என வீட்டுப் பெரியவர்கள் சொன்னதை ஒட்டி அழகிய வெண்ணிற கலைமான் கன்றுக்குட்டி ஒன்றை தனக்கே தனக்காக தேர்ந்தெடுத்துக்கொள்கிறாள். அதற்கு நாஸ்டெல்காலு என்ற (வெள்ளைப்புள்ளி என்ற அர்த்தம் தொனிக்க) ஒரு பெயரையும் சூட்டிக்கொள்கிறாள்.

மற்ற கலைமான்களுடன் சிறுமிக்கு நெருக்கம் இருந்தாலும் எல்சா நேசிப்பது அந்த வெள்ளை கன்றுக்குட்டியைத்தான். அதற்காக தனியே தீவனங்கள் கொண்டுவந்து ஊட்டிவிடுவாள். அதனோடு கொஞ்சுகிறாள். சில நாட்களுக்குள்ளாகவே அந்த அன்பும் நிராசையாகிறது. எல்சா தனது நேசிப்பிற்குரிய அந்த வெள்ளை கலைமான் கன்றுகுட்டி ஒருநாள் கொல்லப்படுகிறது. வனாந்தரப் பகுதியில் அதனோடு கொஞ்சிக்கொண்டிருந்த சில மணித்துளிகளில் இந்த கோர சம்பவம் நடக்கிறது.

கலைமானைக் கொல்பவன் பக்கத்து ஊரைச் சேர்ந்தவன்தான். பழங்குடியினரை அடியோடு வெறுக்கும் பெரும்பான்மையினத்தைச் சேர்ந்தவன். அடிக்கடி தனது மோட்டார் ஸ்லெட்ஜ் வண்டியில் தடை செய்யப்பட்ட பகுதியான கலைமான்கள் துள்ளித்திரியும் பனி படர்ந்த வனாந்தரங்களுக்குள் அத்துமீறிநுழைந்து அனாவசியமாக கொன்றுவிட்டு செல்பவன். அதுபோலத்தான் அவள் கண்ணெதிரே நடந்த அந்தக் கொலையும். 'யாரிடமாவது இதைச் சொன்னால் கத்தியால் அறுத்துவிடுவேன் உன் கழுத்தை' - என்று கன்றுகுட்டியை அவன் அறுத்ததை இவள் பார்த்துவிட்டாள் என்பதை கவனித்து அந்த தருணத்திலேயே சைகையால் இப்படி சொல்லி அவளை பயமுறுத்துகிறான்.

தன் நேசத்திற்குரிய நாஸ்டெல்காலு கொல்லப்படுவதை மனம் பதைபதைக்க காண நேர்ந்த அன்று இரவு வீடுதிரும்பிய எல்சாவுக்கு மனசே ஆறவில்லை. கன்றுகுட்டி இறந்துகிடக்க அவன் கத்தியால் சைகை பேசி அவளை மிரட்டும் காட்சியையும் ஓவியமாக வரைகிறாள். ஓவியத்தையும் அங்கு கிடந்த கலைமான் கன்றுகுட்டியையும் காதறுந்த சிறு பகுதியையும் ஒரு டப்பியில் போட்டு வைக்கிறாள்.

இரவெல்லாம் வீட்டிற்கு வெளியே பனிகொட்டும் நள்ளிரவில் பனிப்புதைவில் மல்லாக்க விழுந்து வானத்தில் உள்ள நட்சத்திரங்களைப் பார்த்து ஏதேதோ பாடுகிறாள்... மனிதர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள் என்று ஒருவித அறச்சீற்றத்தினால் அவளது மனம் பொங்குகிறது. அவளது உணர்ச்சிவசப்பட்டநிலையைக் கண்டு பாட்டி வந்து ஆறுதல் சொல்கிறார். ''இரவுப் பனியில் வெறும்தரையில் படுத்துக்கிடப்பது உடம்புக்கு ஆகாது... உள்ளே வந்து படு... அந்த சோகத்திலிருந்தே வெளியே வா'' என்கிறார்.

''சரி'' என்று பாட்டி சொல்வதை கேட்டு வீட்டுக்குள் வரும் சிறுமியின் அறச்சீற்றம் அதன்பிறகு வென்றதா என்பதைத்தான் இப்படத்தின் திரைக்கதை பேசுகிறது. தனது கன்றுக்குட்டியைக் கொன்றவனை ஒருநாள் அம்பலப்படுத்தியே ஆகவேண்டும் என்று துடிக்கும் அவள் மனம் எந்தவித சாகசமும் இல்லாமல் நிறைவேற்றவேண்டும் என நிதானமாக செயல்படுகிறாள். இதற்கான முயற்சிகள் அனைத்தும் முழுக்க முழுக்க யதார்த்த அன்றாட வாழ்க்கையின் போக்கிலிருந்தே உருவாக்கப்பட்டுள்ளது.

சாமிப் பழங்குடியினரின் ஒரு சிறுமியின் நேசத்திற்குரிய கன்றுக்குட்டியை கொல்லும் வேட்டைக்காரன் ஒரு குறியீடுதான். அதாவது பெரும்பான்மையின மக்களின் இனவெறுப்பின் குறியீடு. இறுதிவரை அந்த கதையோட்டத்தை ஒரு அடிச்சரடாக வைத்து அதனுடன் சாமி பழங்குடியினர் ஸ்வீடன் மக்களிடம் படும் பாடுகளை பல்வேறு பிரச்சினைகளை இப்படம் முன்வைக்கிறது. அதுமட்டுமின்றி சாமி மக்களின் இன்ப துன்பங்கள், திருவிழாக்கள், பண்பாட்டு நடைமுறைகள், மேய்ச்சல் தொழிலில் நிலவும் இன்றளவும் உள்ள கடுமையான சவால்கள், சிக்கல்கள் என திரைப்படம் முழுமையான ஒரு ஆய்வை நம் முன் வைத்துள்ளது.

தான் ஆசைஆசையாக வளர்த்த கலைமான் கன்றுக்குட்டி ஒரு வேட்டைக்காரனால் கொலைசெய்யப்படும் அந்தக் காட்சியே மனதில் வடுவாக தங்கிவிட எல்சா எனும் அந்த 9 வயது இளஞ்சிறுமி பள்ளிப்படிப்பைக் கூட துச்சமாக எண்ணுகிறாள். பள்ளியை பாதியில் நிறுத்திக்கொண்டு கலைமான் வளர்ப்பையே தனது வாழ்வின் லட்சியமாக மாற்றிக்கொள்கிறாள். கொடியவர்களின் ஆட்டம் தலைவிரித்தாடும்போது இயற்கையே அதற்கொரு முடிவுரை எழுதுவதுபோல இப்படத்தின் இறுதிக்காட்சிகள் ஒரு நீதிக்கதைபோல அது அமைந்துவிடுகிறது. அந்த முடிவு கண்டு நாம் மனம் மகிழ்கிறோம். என்றாலும் இப்படம் உள்ளடக்கமாய் விரிவாகப் பேசியுள்ள விவாதங்கள் மிக முக்கியமானவை.

ஒவ்வொரு முறை கலைமான்கள் கொல்லப்படுவதற்குக் காரணமானவர்களான பேரினவாத மக்கள் மீது நடவடிக்கைக் கோரி அருகில் உள்ள காவல் நிலையம் செல்லும்போது அவர்கள் எந்தவித அதிர்ச்சியும் அடைவதில்லை; நடவடிக்கை மேற்கொள்வதற்கான கடும் முயற்சிகளோ மேற்கொள்வதில்லை. ஸ்டோலன் என்று (திருடப்பட்டது) என்று எழுதி கோப்பை மூடிவைத்துவிடுகிறார்கள். இது சாமி பழங்குடியினரின் மீதான பெரும்பான்மை மக்களின் அலட்சியத்தையே காட்டுவதாக இயக்குநர் பதிவு செய்கிறார்.

இப்படத்தின் மூலக்கதையின் கதாசிரியரான நாவலாசிரியர் Ann-Helén Laestadius என்ற சாமிப்பழங்குடி பெண்மணி எழுத்தாளரும் இதுகுறித்து தனது பேட்டியில் குறிப்பிடுகிறார். கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட புகார்கள் எந்தவித நடவடிக்கையும் இன்றி கிடப்பில் இருப்பதை உறுதி செய்துகொண்ட பின்னரே நாவலை எழுதத் தொடங்கினேன் என்கிறார்.

ஸ்டோலன் படக்குழுவினர்.

இந்த இடத்தில் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த கிரேட்டா தூன்பர்க் என்ற 15 வயது ஸ்வீடன் சிறுமியை நாம் நம் நினைவுக்கு வருகிறார். பருவநிலை மாற்றங்களிலிருந்து உலகைக் காக்க 'பள்ளி வேலைநிறுத்தம்' (School strike for the climate) என்ற இயக்கத்தை 2018-ல் தொடங்கினார். சுற்றுச்சூழல் ஆர்வலரான இவர் துவங்கிய இந்த இயக்கத்தின் மூலம் உலகில் ஏற்படும் பருவநிலை மாற்றத்தை கட்டுக்குள் கொண்டுவரமுடியும் என்ற நம்பிக்கையை மக்களிடம் உருவாக்க போராடத் தொடங்கினார். அதனையொட்டி இவருடன் பலரும் சேர்ந்து போராடத் தொடங்கினார்கள். இது உலகத் தலைவர்களேயே திரும்பிப் பார்க்கவைத்தது.

இப்படத்தின் இயக்குநர் ELLE MÁRJÁ EIRA என்ற பெண்மணியும் சாமி பழங்குடியினர் என்ற வகையில், தனது திரைப்படத்தில் எல்சா என்ற சிறுமியின் வழியே 'இனவெறுப்பு கொள்ளாதீர்கள். வனாந்தரங்களில் கலைமான்களை மேய்த்துத் திரியும் எங்களையும் சக மனிதராக நினைத்துப் பாருங்கள்' என இத்திரைப்படத்தின் மூலம் ஸ்வீடன் நாட்டு மக்களுக்கும் விடுக்கும் அறைகூவலாக இப்படம் விளங்குகிறது. அதன்மூலம் உலக மக்களுக்கே இத்திரைப்படம் இப்படத்தின்வழியே பல முக்கியமான செய்திகளை விடுத்திருக்கிறார் இயக்குநர் எல்லே மார்ஜா எய்ரா.

சிறுமியான எல்சா 10 ஆண்டுகள் கடந்த பிறகு ஒரு 19 வயது இளம்பெண்ணாக காட்சியளிக்கிறாள். அதே கலைமான்களை மேய்த்துத் திரிகிறாள்... பொது இடங்களிலும் ஸ்வீடன் மக்களால் தனது சாமி பழங்குடியினர் அவமானப்படுத்தப்படுவதை கண்டு மனம் பொறுமுகிறாள். அந்த வேட்டைக்காரன் திரும்பவும் அவ்வப்போது தனது தடைசெய்யப்பட்ட பனிச்சறுக்கு மோட்டார் வண்டியால் கலைமான்களை கொன்றுவிட்டு தப்பிச்செல்கிறான். அவனை ஒருநாள் அம்பலத்தியே தீரவேண்டுமென உள்ளத்திலும் அதே கனல் ஒளிவீசிக்கொண்டிருக்கிறது.

உண்மையில் கிரேட்டா தூன்பர்க் போலவே இப்படத்தில் வரும் சாமி பழங்குடியைச் சேர்ந்த இளம்பெண் எல்சாவும் தனது வாழ்க்கையை பனயம் வைத்து போராடத் தொடங்குகிறாள். இனவெறிக்கு எதிராக தனது பூர்விக பாரம்பரியத்தை பாதுகாக்க இளம்பெண்ணாக தோன்றி போராடும் காட்சிகளில் பார்வையாளனைக் கட்டிப்போடுகிறார் சிறந்த பாடகியும் நடிகையுமான Elin Kristina Oskal.

ஊருக்குள் சுரங்கம் தோண்டுவதற்கான புதிய திட்டம் குறித்து கிராம கவுன்சிலில் கருத்துக் கேட்புக் கூட்டம் நடக்கிறது. இதில் ஸ்வீடன்மக்கள் ஆதரிக்க சாமி பழங்குடியினர் எதிர்க்கிறார்கள். சாமி பழங்குடியின மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் காட்சி அவர்களே நேரடியாக வந்து இந்த உலகத்தை நோக்கி பேசுவதாக உள்ளது.

பூமியின் வடக்கில் இயற்கையாக உள்ள மேய்ச்சல் நிலங்களை யெல்லாம் கனிம வள தேடல் என்ற பெயரில் சுரங்கங்கள் தோண்டப்படுவதால் ஊர் வளர்ச்சி அடையும்தான்; ஆனால் அது நிரந்தரமல்ல. கால நிலை மாற்றங்கள் ஏற்பட்டுவதால் பாழாவது பழங்குடியினரின் வாழ்க்கை மட்டுமல்ல; இயற்கை நிலங்கள் துண்டாடப்பட்டு வெப்பம் பரவி மொத்த சூழலும் பாழாவதற்கும் வழி வகுக்கும்.

பழங்குடியினரின் இயற்கையான மேய்ச்சல் பழக்கவழக்கங்கள் மற்றவர்களுக்கு எவ்வகையில் இடையூறாக இருக்கிறது? சிறுபான்மையினருக்காக அரசாங்கங்கள் தரும் சிறுசிறு சலுகைகளையும் கண்டு பொறாமைப்பட்டு பெரும்பான்மையின மக்கள் சகிப்புத் தன்மை இழந்து தங்களது எதிரிகளாக பாவிப்பது ஏன்? பள்ளிக்கூடத்தில் சக மாணவ மாணவிகளிடையே நட்பும் அன்பும் இல்லாமல் வேறுபாடும் பாகுபாடும் ஏற்படுவது ஏன்? பொது இடங்களில் பெரும்பான்மையின மக்கள் சக சிறுபான்மையின மனிதர்கள்மீதான நேசத்தையும் காலில்போட்டு மிதிக்கும் இனவெறியிலிருந்து மீள்வது எப்போது?

இயக்குநர் எல்லே மார்ஜா எய்ரா படம் முழுவதும் எழுப்பும் கேள்விகள் ஏராளம். பொதுசமூகத்திற்கு விடுக்கும் அறைகூவல்களை பல்வேறு காட்சிகளின் ஊடே பொருத்தி பாத்திரங்களை பேசவிட்டு மோதவிட்டு விவாதிக்கவைக்கிறார். பெரும்பாலும் சாமி பழங்குடியின மக்களையே பயன்படுத்தியுள்ளார். தேர்ந்த சமூகப் பொறுப்பும் திறமை மிக்க திரைக்கதை உத்தியாகவும் இத்தகைய பிரச்சினைகளை ஒரு கலைமான் கொலைக்கு பழிவாங்கல் கதைப்போக்குடன் இணைத்து பின்னியிருக்கிறார் இயக்குநர்.

வண்ணமயமான பூத்தையல் ஆடை அலங்கார ஒப்பனையுடன் தோன்றும் பழங்குடியினர் நிறைந்த திருவிழாக் காட்சிகள், தந்தை ஓட்டிச் செல்லும் ஸ்லெட்ஜ் வண்டியின் கயிற்றைப் பிடித்தபடி அவள் இழுத்துச் செல்லப்படும் காட்சி, மரங்களிடையே காலைச்சூரியனும் வாக்கிங் செய்தபடி வந்துகொண்டிருக்க, பனிமண்டிய பாதைகளில் ஸ்கேட்டிங் செய்தபடி கயிற்றைப் பிடித்தபடி செல்மா தனது தந்தையின் ஸ்லெட்ஜ் வண்டியின் பின்னே சற்றுத்தள்ளி பாய்ந்து வந்துகொண்டிருக்கும் காட்சி... மளமளவென கொம்புகள் வளர்ந்திருக்க 1000 கலைமான்களின் மந்தைக் கூட்டம் வட்டவட்டமாய் சுற்றி சுழன்று நிற்கும் காட்சி என ஒளிப்பதிவாளர் கென் அரே போங்கோ நம் கண்களுக்கு அளித்துள்ளது ஒப்பிலா அழகியல் விருந்து.

ஸ்டோலன் இயக்குநர் எல்லே மார்ஜா எய்ரா;
ஸ்டோலன் படத்தின் மூலக்கதை Ten Past One நாவலாசிரியயை ஆன் ஹெலன் லாயெஸ்டாடீஸ்

வேறுபட்ட மனிதர்கள்; வேறுபட்ட வாழ்க்கைகள் கொண்டிருந்தாலும் மற்றவர்களும் சக மனித நேசத்தின் அங்கீகாரத்திற்காக ஏங்குபவர்கள்தான்; நம்மைப் போன்றே இவ்வுலகில் வாழும் சகல தகுதிகளும் கொண்டவர்கள்தான் என்பதை புரிந்துகொள்ளும்போதுதான் கல்விச்சாலை சென்று பெற்றுள்ளதாக நாம் நம்பும் நமது ஏட்டுக்கல்வியும் முழுமையடைகிறது என்பதை பனிபடர்ந்த வடதிசை பூமியின் பாதைகளில் மிக அன்பாக அழைத்துச் சென்று கூறியுள்ளார் இயக்குநர் எல்லே மார்ஜா எய்ரா. இத்திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸில் காணக் கிடைக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஓடிடி களம்

4 days ago

ஓடிடி களம்

5 days ago

ஓடிடி களம்

6 days ago

ஓடிடி களம்

8 days ago

ஓடிடி களம்

11 days ago

ஓடிடி களம்

17 days ago

ஓடிடி களம்

19 days ago

ஓடிடி களம்

20 days ago

ஓடிடி களம்

23 days ago

ஓடிடி களம்

24 days ago

ஓடிடி களம்

26 days ago

ஓடிடி களம்

27 days ago

ஓடிடி களம்

27 days ago

ஓடிடி களம்

27 days ago

ஓடிடி களம்

27 days ago

மேலும்