பிரேமலு - காதலும் காமெடியும் பின்னே கொண்டாட்டமும் | ஓடிடி விரைவுப் பார்வை

By செய்திப்பிரிவு

காதல் தோல்வி, சரியான வேலை கிடைக்காதது என தன் வாழ்நாள் முழுதும் புறக்கணிக்கப்பட்டு, நாளை என்பது நிச்சயமில்லாமல், தோல்விகளைப் பழகிக்கொண்ட ஓர் ஆண் சச்சின். இன்னொரு புறம், வாழ்வின் எல்லாத் தருணங்களிலும் அதீத வெற்றியில் திளைத்து, லட்சியங்களைக் கொண்ட ஒரு பெண் ரீனு. வெவ்வேறு பின்னணிகளைக் கொண்ட இந்த இருவரையும் ஒரே புள்ளியில் இணைக்கிறது ஹைதராபாத் நகரம். அதன் பிறகு அவர்களின் பயணம் என்னவானது என்பதுதை காமெடி + காதல் என திகட்ட திகட்ட கொண்டாட்ட தருணங்களுடன் சொல்கிறது ‘பிரேமலு’.

எல்லா மொழிகளிலும் ஏற்கெனவே பார்த்துச் சலித்த கதை தான் என்றாலும், 156 நிமிடங்களும் நம்மைக் கட்டிப்போட்டுச் சிரிக்க வைத்திருப்பது இயக்குநர் கிரிஷ் ஏ.டி. - கிரண் ஜோஷியின் சுவாரஸ்யமான திரைக்கதை.

படம் முடிந்து யோசித்துப் பார்த்தால் இப்படத்தில் அப்படி என்னதான் இருக்கிறது என்று தோன்றலாம். ஆனால் படம் பார்க்கும்போது ஒரு நொடி கூட நம்மை வேறு எதைப் பற்றியும் யோசிக்க விடாமல் செய்ததுதான் ‘பிரேமலு’ மேஜிக்.

கதை தமிழ்நாட்டில் தொடங்கி கேரளத்தை அடைகிறது. அங்கிருக்கும் சலிப்பான வாழ்விலிருந்து தப்பி, சச்சின் தன்னுடைய நண்பனோடு சேர்ந்து ஹைதராபாத் நகரத்தை அடைந்த பின் வேகமெடுக்கிறது. அங்கிருந்து தொடங்கி, இறுதிவரை வாய் விட்டுச் சிரிக்க வைப்பதில் வெற்றியும் அடைகிறது.

படத்தின் பெரும்பாலான காட்சிகளுடன் நாம் நம்மை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளும் வகையில் மிக இயல்பான வசனங்கள், படம் முழுக்க ‘குபீர்’ என சிரிக்க வைக்கும் வெடிச் சிரிப்பு தருணங்கள் பெரும் பலம்.

சச்சினாக நெல்சன், ரீனுவாக மமிதா பைஜூ, நண்பன் அமலாக சங்கீத் பிரதாப் ஆகிய மூவர் அதகளப்படுத்தியிருக்கிறார்கள். ‘தண்ணீர்மத்தன் தினங்கள்’, ‘சூப்பர் சரண்யா’ என இரண்டு மென்காதல் நகைச்சுவைப் படங்களில் வெற்றியை எட்டிய கிரிஷ் ஏ.டியின் மூன்றாவது படமான ‘பிரேமலு’ நம்பிப் பார்ப்பவர்களை நிச்சயம் ஏமாற்றாது.

இப்படம் ‘டிஸ்னி + ஹாட்ஸ்டார்’ தளத்தில் தமிழிலும் கிடைக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE