அதிகாரத்துக்கான போரின் உச்சகட்டம்: ‘ஹவுஸ் ஆஃப் தி டிராகன்’ கிரீன், பிளாக் ட்ரெய்லர்கள் எப்படி? 

By செய்திப்பிரிவு

லாஸ் ஏஞ்சல்ஸ்: ‘ஹவுஸ் ஆஃப் தி டிராகன்’ இரண்டாவது சீசனுக்கான கிரீன் மற்றும் பிளாக் ட்ரெய்லர்களை ஹெபிஓ நிறுவனம் வெளியிட்டுள்ளது.

‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ பெற்ற வரவேற்பை தொடர்ந்து ‘ஹவுஸ் ஆஃப் தி டிராகன்’ என்ற தொடரை எச்பிஓ நிறுவனம் தயாரித்தது. இது ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ நிகழ்வுகள் நடக்கும் காலத்துக்கு 300 ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்தில் நடப்பது போன்ற கதைக்களத்தைக் கொண்டது.

கடந்த 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ‘ஹவுஸ் ஆஃப் தி டிராகன்’ தொடரின் முதல் சீசன் வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில், இதன் இரண்டாவது சீசன் வரும் ஜூன் 16 வெளியாகிறது. ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இத்தொடருக்கான இரண்டு ட்ரெய்லர்களை படக்குழு வெளியிட்டுள்ளது. இத்தொடரின் இரண்டு பிரதான கதாபாத்திரங்களான அலிசென்ட் மற்றும் ரெனேய்ரா இருவருக்காகவும் க்ரீன் ட்ரெய்லர் மற்றும் பிளாக் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளன:

பிளாக் ட்ரெய்லர் எப்படி? - இந்த ட்ரெய்லர் முழுவதும் ரெனேய்ராவின் பக்கத்தை பேசுவதாக உருவாக்கப்பட்டிருக்கிறது. முதல் சீசனில் சிறுவயது முதலே அரசியாக விரும்பும் அவளுக்கு பெண் என்ற காரணத்தால் வாய்ப்பு மறுக்கப்படுகிறது. முதல் சீசனின் இறுதியில் ரெனேய்ராவின் மகன் அலிசெண்ட் மகனின் டிராகனால் கொல்லப்படுவதால் ஏற்படும் அதிகார யுத்தம், இந்த சீசனில் உச்சம் பெறுவதாக ட்ரெய்லரில் காட்டப்படுகிறது. ‘ஹவுஸ் ஆஃப் தி டிராகன்’ பிளாக் ட்ரெய்லர்

க்ரீன் ட்ரெய்லர் எப்படி? - இந்த ட்ரெய்லர் முழுக்க முழுக்க அலிசென்ட்டின் பக்கத்தை பேசுகிறது. ரெனேய்ராவின் பால்யகால சிநேகிதியான அலிசென்ட், சிறுவயதிலேயே ரெனேய்ராவின் தந்தையான அரசர் விசேரிஸுக்கு மணம் முடித்துக் கொடுக்கப்படுகிறாள். இதன் பிறகு அலிசென்ட் - ரெனேய்ரா இடையே மெல்ல மெல்ல ஏற்படும் குரோதம் எப்படி வளர்ந்தது என்பதே முதல் சீசனில் பிரதானமாக காட்டப்பட்டது.

ரெனேய்ரா அரசியாவதை தடுத்து அரசருக்கும் தனக்கு பிறந்த மகனை அடுத்த அரசாக்குகிறாள் அலிசென்ட். ரெனேய்ராவின் மகன் கொல்லப்பட்டதால் வெறிகொண்டு தாக்க வரும் டார்கேரியன் குடும்பத்தை அலிசென்ட்டின் படை எதிர்கொள்வதை பற்றிய துணுக்குகள் இந்த ட்ரெய்லரில் காட்டப்படுகின்றன.

‘ஹவுஸ் ஆஃப் தி டிராகன்’ க்ரீன் ட்ரெய்லர்

முதல் சீசனைப் போலவே வியக்க வைக்கும் டிராகன் சண்டைகள், ரத்தம் தெறிக்கும் வன்முறைக் காட்சிகள் இந்த சீசனில் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE