Aattam: மனித மனங்களின் ஊசலாட்டமும் விறுவிறுப்பும் | ஓடிடி திரை அலசல்

By கலிலுல்லா

ஆணாதிக்க சமூக கட்டமைப்பில் ஒரு பெண்ணுக்கான நீதி எந்த அளவுக்கு சாத்தியமானது என்பதை மிக நுணுக்கமான காட்சிகளுடன் சொல்கிறது ‘ஆட்டம்’ (Aattam). அறிமுக இயக்குநர் ஆனந்த் ஏகர்ஷி இயக்கத்தில் உருவான இப்படம், ‘கோவா சர்வதேச திரைப்பட விழா’, ‘கேரள திரைப்பட விழா’க்களில் திரையிடப்பட்டு பாராட்டப்பட்டது. தற்போது படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.

12 ஆண்கள், ஒரு பெண் அடங்கிய நாடக் குழு அது. ப்ளம்பர், எலக்ட்ரீஷியன், சமையல் கலைஞர் என அந்தக் குழுவில் உள்ளவர்கள் உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த எளிய மக்கள். கனவுகளுக்காக நாடக் குழுவில் இருந்தாலும், உணவுக்காக ஏதேனும் ஒரு மாற்று வேலையை செய்ய நிர்பந்திக்கப்பட்டவர்கள். நாடகக் குழுவை நம்பி நாட்களை நகர்த்த முடியாது என்ற உண்மையை உணர்ந்த கூட்டத்தில் இருக்கும் அஞ்சலியும் (ஜரின் ஷிஹாப்) அதே குழுவைச் சேர்ந்த வினய்யும் (வினய் ஃபோர்ட்) காதலர்கள்.

ஒரு நாள், இவர்களின் நாடகத்தை கண்டு ரசித்த வெளிநாட்டவர்கள் ரிசார்ட்டில் பார்டி ஒன்றை ஏற்பாடு செய்கிறார்கள். அன்றிரவு அஞ்சலி அவரது குழுவைச் சேர்ந்த ஒருவரால் பாலியல் சீண்டலுக்கு உள்ளாகிறார். நடந்த சம்பவத்தை தன் காதலனான வினய்யிடம் கூற, இந்த விவகாரம் நாடக குழுவைச் சேர்ந்தவர்களிடம் கொண்டு செல்லப்படுகிறது. விவாதங்கள், கருத்து வேறுபாடுகள் எழ, 12 ஆண்கள் கொண்ட அந்தக் குழுவில் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணுக்கான நீதி கிட்டியதா என்பது படத்தின் திரைக்கதை.

மொத்தம் 13 முக்கிய கதாபாத்திரங்கள். மிகச் சொற்ப லோகேஷன். அதிகமான உரையாடல். பாடல்களோ, வன்முறைக் காட்சிகளோ எந்த மசாலா சினிமாத்தனமும் இல்லாத ஓர் சினிமா. ஆனாலும் அயற்சியில்லாமல் சுவாரஸ்யத்துடன் கடப்பதே மொத்த இயக்குநரின் திரைக்கதை மேஜிக்.

படம் அடுத்தடுத்த காட்சிகளை நோக்கி நகரும்போது யார் குற்றவாளி, யார் செய்திருப்பார் என்ற ஆவலையும் இழுத்துகொண்டே செல்வதால் இறுதிவரை அந்த ஆர்வம் தக்கவைக்கப்படுகிறது. இடையிடையே சிலரை குற்றவாளிகளாக நாம் கணிக்கும் அளவுக்கு அதற்கான காரணங்களையும் பொருத்தி, பின்னர் அதிலிருந்து விடுபட வைத்து மற்றொருவர் மீது பார்வையை திருப்புவது அட்டகாசம்.

ஒரு பெண் தன்னுடைய பாதிப்பை சொல்லும்போது, அப்பெண்ணின் கடந்த கால செயல்கள், அவரின் உடைகள், கருத்துகள் உள்ளிட்ட அனைத்தும் கேள்விக்குள்ளாக்கபட்டு கவனிக்கப்படுகிறது. அவரின் பாதிப்பையும், வலியையும் தவிர. ஆனால், குற்றவாளிக்கு எந்த நெருக்கடியுமில்லை. பெண்ணைச் சுற்றி நின்றுகொண்டு ஒவ்வொருவரும் தங்களுக்கான கோணங்களில் கேள்வி கேட்கும் காட்சியமைப்பு மொத்த சமூகத்தில் தன்னை நிரூபிப்பதற்கான பெண்ணின் போராட்டமாக விரிகிறது.

இறுதி வசனமும்,க்ளைமாக்ஸும் அதி சிறப்பு. ஒட்டுமொத்தமாக, மனித மனங்களின் ஊசலாட்டத்தை கதாபாத்திரங்களின் வழியே மிக நுணுக்கமாக அணுகிறது படம்.

வினய் ஃபோர்ட், ஜரின் ஷிஹாப், கலாபவன் ஷாஜோன் மூவரின் தேர்ந்த நடிப்பும், கதாபாத்திரங்கள் எழுதப்பட்ட விதமும், நிஜ நாடக கலைஞர்களை நடிக்க வைத்திருப்பதும், படத்தை மிக யதார்த்தமாக்கியிருக்கிறது. பசில் சிஜேவின் மிக மெல்லிய தேவையான இடங்களில் மட்டும் ஒலிக்கும் பின்னணி இசை காட்சிகளுக்கு கூடுதல் உயிர். மனித மனங்களின் உணர்வுகளை படமாக்குவதில் அதிக கவனம் செலுத்துகிறது அனுருத் அனீஷின் கேமரா. ஆட்டோவில் அஞ்சலி பயணிக்கும் இறுதிக் காட்சி அதற்குச் சான்று.

எந்தவித மிகைப்படுத்தலுமின்றி, தான் சொல்ல வந்த கருத்தை சுவாரஸ்யமாக சொல்லியிருக்கும் இப்படம் ஆணாதிக்க சூழலில் பெண்களுக்கான நீதியின் நிலையை அழுத்தமாக பதியவைக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE