மெரி கிறிஸ்துமஸ்: சுவாரஸ்யத்துக்கு குறைவில்லாத க்ரைம் த்ரில்லர் | ஓடிடி விரைவுப் பார்வை

By டெக்ஸ்டர்

‘அந்தாதூன்’ படம் மூலம் நாடு முழுவதும் கவனம் பெற்ற ஸ்ரீராம் ராகவன் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இயக்கியுள்ள படம் ’மெரி கிறிஸ்துமஸ்’. கடந்த ஜனவரியில் திரையரங்குகளில் வெளியான இப்படம் தற்போது ஓடிடியில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.

துபாயிலிருந்து ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு மும்பை வரும் ஆல்பர்ட் (விஜய் சேதுபதி) ஒரு கிறிஸ்துமஸ் இரவில் மரியாவை (கத்ரீனா கைஃப்) சந்திக்கிறார். அவருடன் நட்பாகும் ஆல்பர்ட், மரியாவின் வீட்டுக்குச் சென்று மது அருந்திவிட்டு அவருடன் நடனம் ஆடுகிறார். பின்னர் மீண்டும் வெளியே சென்றுவிட்டு வீட்டுக்குள் வரும்போது, மரியாவின் கணவர் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் பிணமாக கிடக்கிறார். இதனைக் கண்டு அதிரும் இருவரும் பிறகு என்ன செய்தனர்? மரியாவின் கணவரை கொன்றது யார்? - இப்படி பல கேள்விகளுக்கான விடைகளை நோக்கி நகருகிறது ‘மெர்ரி க்றிஸ்துமஸ்’.

1960-ஆம் ஆண்டு ஃப்ரெட்ரிக் டார்ட் எழுதிய ‘எ பேர்ட் இன் எ கேஜ்’ பிரெஞ்சு நாவலைக் கொண்டு இப்படத்தை இயக்கியுள்ளார் ஸ்ரீராம் ராகவன். கிட்டத்தட்ட கதாபாத்திரத்தின் பெயர்களும் கூட அதேதான். ‘Noir Thriller' வகையைச் சேர்ந்த இந்த நாவலை திரைப்படமாக மாற்றியதில் மேக்கிங் ரீதியாக வெற்றிபெறுகிறார் ஸ்ரீராம் ராகவன்.

படம் தொடங்கியது முதலே வசனங்கள் மூலமாகவே கதை நகர்ந்தாலும், சுவாரஸ்யமாகவே செல்கின்றன காட்சிகள். குறிப்பாக விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப் இருவரும் பேசிக் கொள்ளும் வசனங்கள், விஜய் சேதுபதி அவ்வப்போது அடிக்கும் ஒன்லைனர்கள் ஆகியவை நன்றாகவே ஒர்க் அவுட் ஆகியுள்ளன.

90களின் மும்பை வீதிகள், கண்களை கூசச் செய்யாத ஒளிப்பதிவு, ரம்மியமான லைட்டிங், கதையின் போக்குக்கு ஏற்ற பின்னணி இசை என ஒவ்வொன்றும் அப்ளாஸ் ரகம். விஜய் சேதுபதி தனது அலட்சியமான உடல்மொழியால் குறைகளின்றி இயல்பாக நடித்துள்ளார். முதல் பாதியில் கத்ரீனா உடனான உரையாடலிலும், அவரது வீட்டில் நடனமாடும் காட்சியிலும் ஈர்க்கிறார். நடிப்பு என்ற அளவில் கத்ரீனா கைஃபுக்கு இது முக்கியமான படமாக இருக்கும்.

இவர்கள் தவிர போலீஸ் போலீஸாக வரும் ராதிகா சரத்குமார், ‘விருமாண்டி’ சண்முகராஜன், கத்ரீனாவின் மகளாக வரும் குழந்தை என அனைவரும் இயல்பாக நடித்துள்ளனர். பிரித்தம் இசையில் ’அன்பே விடை’ என்று தொடங்கும் பாடல் ரசிக்கும்படி உள்ளது. மற்ற பாடல்கள் ஓகே ரகம். பின்னணி இசையில், டேனியல் பி.ஜார்ஜ் மிரட்டியிருக்கிறார்.

கிளைமாக்ஸை நோக்கி நகரும் இறுதிகட்ட காட்சிகள், போலீஸ் விசாரணை காட்சிகள் என ஆங்காங்கே சில லாஜிக் மீறல்கள் இருந்தாலும், சுவாரஸ்யத்துக்கு எங்கும் குறைவில்லை. க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்டை இன்னும் அழுத்தமாக சொல்லியிருக்கலாம்.

இது போன்ற சின்னச் சின்ன குறைகளை கடந்து ஒரு நேர்த்தியான க்ரைம் த்ரில்லரை பார்க்க விரும்புபவர்கள் தாராளமாக ‘மெரி கிறிஸ்துமஸை’ தேர்வு செய்யலாம். இப்படம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் தமிழ் மற்றும் இந்தியில் காணக்கிடைக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE