ஓடிடி திரை அலசல் | Dobaaraa: டாப்ஸியின் சுவாரஸ்ய டைம் டிராவல் மேஜிக்! 

By செய்திப்பிரிவு

கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் மூன்றையும் கலைத்துப்போட்டு எழுதப்படும் திரைக்கதை எப்போதும் சுவாரஸ்யமானது. அப்படியொரு கதையில் திருப்பங்களைச் சேர்த்துக் கொடுத்தால் அது ‘Dobaaraa’. இந்தியில் இதற்கு 2:12 (இரண்டு மணி 12 நிமிடங்கள்) என்று அர்த்தம். படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணக்கிடைக்கிறது.

புனேவில் தனது தாயுடன் வாழ்ந்து வரும் சிறுவன் அனே. ஒரு நாள் இரவு தன் வீட்டின் ஜன்னல் வழியே அண்டைவீட்டில் நடக்கும் கணவன் - மனைவி இடையிலான சண்டையைப் பார்க்கிறான். பார்த்துவிட்டு அமைதியாக இருந்தால் பிரச்சினையில்லை. அத்தோடு சண்டை நடக்கும் வீட்டுக்குச் சென்று திரும்பும்போது கொல்லப்படுகிறான். கட் செய்தால் 25 வருடங்கள். தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரியும் அந்தரா (டாப்ஸி பண்ணு) தனது கணவர் மற்றும் மகளுடன் புது வீட்டுக்கு குடியேறுகிறார் (அந்த வீடுதான் அனே வாழ்ந்த வீடு).

அங்கிருக்கும் பழைய கேசட், வீடியோ ரெக்கார்டர் மற்றும் ஆன்டனாவுடன் கூடிய தொலைக்காட்சியை பயன்படுத்தும்போது, அந்த டிவியின் வழியே சிறுவன் அனே தெரிய, திகைத்துப் போகிறார் அந்தரா. கடந்த காலம், எதிர்காலம் இரண்டும் ஓரிடத்தில் குவிய, இன்னும் சில நிமிடங்களில் சிறுவன் கொல்லப்படப் போவதை அறிந்த அந்தரா அவனை மீட்க முயற்சிக்கிறார். அதனால் அவர் என்னென்ன மாதிரியான சிக்கல்களை சந்திக்கிறார் என்பதே திரைக்கதை.

கடந்த 2018-ம் ஆண்டு ஸ்பெனிஷில் வெளியான ஓரியல் பாவ்லோவின் ‘மிரேஜ்’ படத்தின் அதிகாரபூர்வ தழுவலாக இப்படத்தை அனுராக் காஷ்யப் இயக்கியுள்ளார். ஏதோ ஒரு அசாம்பாவிதம் நடக்கப்போகிறது என்ற உணர்வு தொடக்கத்திலிருந்து எழ, அடுத்தடுத்த காட்சிகள் ஆச்சரியங்களை தருகின்றன. குழப்பம், கேள்விகளுடன் நம்மை கைபிடித்து அழைத்துச் செல்லும் திரைக்கதை திரும்பங்களுடன் முன்னேறும்போது, ஆர்வம் மேலிடுகிறது.

அடிப்படையில் படம் மகளை கண்டறியும் தாய் மற்றும் உலகுக்கு தன்னை நம்ப வைக்க போராடும் சிறுவனின் கதைதான். ஆனால் அதனை எந்த அயற்சியுமில்லாமல் டைம் டிராவல் வழியே சொல்லியிருக்கும் விதம் சுவாரஸ்யம். இந்த நிமிடம் அதிமுக்கியமானது என்பதை உணர்த்தும் படம், ஆங்காங்கே சில நகைச்சுவையை போகிற போக்கில் தூவிச் செல்கிறது.

தன்னைச் சுற்றி நடக்கும் சம்பவங்களை புரிந்துகொள்ள முடியாமல் திணறுவது, குழப்பங்களுக்கு விடை தேடி அலைவது, மகளை தேடும் தாயின் போராட்டம் ஒருபுறமென்றால், கணவரின் பிரிவுக்கு மதிப்பளித்து விடைகொடுப்பது என மொத்தப் படத்துக்கும் அச்சாணி டாப்ஸி. மொத்தப் படத்தையும் தாங்கிச் செல்கிறார். தனது நடிப்பால் இறுதியில் ஸ்கோர் செய்கிறார் பவைல் குலாட்டி. இந்த இரு கதாபாத்திரங்கள் தான் முதன்மையானது என்றாலும், ராகுல் பாட், நாசர், சுகந்த் கோயல் உள்ளிட்டோர் தேவையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

கவுரவ் சட்டர்ஜியின் 2 பாடல்கள் கதையின் போக்கில் வந்து செல்கின்றன. ஆனால், பின்னணி இசை தேவையான விறுவிறுப்பைக் கூட்ட தவறவில்லை. அச்சத்தை விதைக்கும் சூழலை தனது கேமராவில் நேர்த்தியாக உருவாக்கியிருக்கிறார் சில்வெஸ்டர் பொன்சேகா. ஆர்த்தி பஜாஜின் ஷார்ப் கட்ஸ் தான் மொத்தப் படத்தையும் தொய்வில்லாமல் கடக்க உதவுகிறது. முன்னுக்குப் பின்னான காட்சிகளை நேர்த்தியாக கோர்த்திருப்பது படத்துக்கு பெரும் பலம்.

படத்தில் புயல்களால் மனிதர்களில் அட்ரினலின் அளவு உயர வாய்ப்புள்ளது என வானொலியில் திரும்பத் திரும்ப சொல்லப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. ‘டோபாரா’ அப்படியாக உங்களின் அட்ரினலை உயர்த்தலாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE