ஓடிடி திரை அலசல் | Poacher: நிமிஷா சஜயனின் வேட்டையும் விறுவிறுப்பும்!

By கலிலுல்லா

“யானைகள் தான் இந்தக் காட்டின் இன்ஜினியர்கள். போகும் இடமெல்லாம் சாணம் போட்டு, காட்டு உரத்தை வளமாக்குவதுடன், காட்டு மரங்களின் விதைகளை யானைகள் தான் பரப்பிவிடுகின்றன. புல்டோசர் போல முள்புதர்களை இடித்து தள்ளி, நீட்டிக்கொண்டு இருக்கும் மரத்தின் கிளைகளை உடைத்து சுத்தம் செய்யும். மண்ணை புரட்டிப்போடும். அந்த இடத்தில் புதுச் செடிகள் வளரும். யானைகள் இல்லாமல் போனால் காடு ஸ்தம்பித்து அழிந்துவிடும். காடு இல்லாத பூமியில் மனிதன் மட்டும் வாழ்ந்துவிட முடியுமா?” என்கிற நிமிஷா சஜயனின் கேள்வி தான் ‘போச்சர்’ (Poacher) வெப் சீரிஸ். அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகியுள்ள இந்தத் தொடரின் முதல் சீசன் 8 எபிசோடுகளைக் கொண்டது. தற்போது காணக் கிடைக்கிறது.

பேரமைதி குடிக்கொண்டிருக்கும் காட்டின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மொய்க்கும் ஈ-க்களின் சத்தமும், காற்றில் கலந்திருக்கும் ரத்தவாடையும், இப்போதுதான் அந்த உயிர் பறிபோயிருப்பதை உறுதிப்படுத்துகிறது. தந்தம் இழந்து மாண்டு கிடக்கும் யானையின் முன்பகுதியைக் காட்சிப்படுத்தும் கேமராவுக்குள் மெல்ல மெல்ல இருள் சூழ, பேட் அவுட் ஆகிறது. கேரளாவின் வனப்பகுதியில் இப்படியாக ஏராளமான யானைகள் வேட்டையாடுப்பட்டதாக வேட்டைக்காரர் ஒருவர் சரணடைந்தும் விசாரணையை தீவிரப்படுத்துகிறது வனத்துறை.

நீல் பானர்ஜி (திப்யேந்து பட்டாச்சார்யா) தலைமையிலான அந்தக் குழுவில் மாலா ஜோகி (நிமிஷா சஜயன்), ஆலன் (ரோஷன் மேத்யூ), அன்கித் மாதவ் (விஜய் பாபு) உள்ளிட்டோர் வேட்டையர்களை வேட்டையாட களமிறங்குகின்றனர். டெல்லி வரை நீளும் இந்த விசாரணையில் யானைகளை கொல்வது யார்? அதன் தந்தங்கள் எதற்கெல்லாம் பயன்படுகின்றன? முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டார்களா? - இப்படி பல கேள்விகளை அடுக்கி, ஒவ்வொன்றாக பதில் சொல்கிறது ‘போச்சர்’ (Poacher). ‘டெல்லி க்ரைம்’ தொடர் மூலம் கவனம் பெற்ற ரிச்சி மேத்தா இதனை இயக்கியுள்ளார்.

இயற்கைக்கும் மனிதனுக்குமான மோதலைப் பேசும் இந்தத் தொடர், படிப்படியாக முன்னேறி, ஒவ்வொரு முடிச்சாக அவிழ்த்து குற்றவாளியை நெருங்குகிறது. இதனால் விறுவிறுப்பின் தடங்களை மட்டுமே பற்றிக் கொண்டு பயணிக்காமல், கதையின் ஆழத்தை உணர்ந்து காட்சிகள் நகர்வது பலம்.

கேரளாவின் உண்மைச் சம்பவங்களை தழுவிய இத்தொடரில், தந்தம் கடத்தல் வெறும் பணத்துக்காக மட்டுமல்லாமல், அதனை பகட்டுக்காகவும், அலங்காரத்துக்காகவும் பயன்படுத்தப்படுவது, வேட்டையாடுபவர்களை உள்ளூர் மக்கள் ஹீரோவாக பார்ப்பது, வனச்சிதைவின் பாதிப்பை உணராத நகரவாசிகள், யானைகள் கொலையை பொருட்டாக கருதாத டெல்லி காவல்துறை, வனத் துறையினருக்கான அதிகார வரம்புகள், காடுகள் அழிப்பு, என பல்வேறு விஷயங்களை நிதானமாக பேசுகிறது தொடர்.

“நம்ம வாழும் இதே பூமியில யானைகளும் வாழ்றதால தான் அவங்களுக்கு இந்த தண்டனை” போன்ற மனித அத்துமீறலை குறிப்பிடும் வசனங்களும், காடுகளுக்கும், விலங்குகளுக்கும் மனிதன் தான் ஆகப்பெரும் எதிரி என்பதை உணர்த்தும் இடங்களும் கவனிக்க வைக்கின்றன.

தலைமை தாங்கி வழிநடத்தும் பெண் யானைக்கூட்டத்தை ஆண்கள் வேட்டையாடிக் கொல்வதை, வீரச்செறிவு மிக்க நடவடிக்கையாக பார்க்கப்படும் சூழலில், அந்த ஆண்களை பொறிவைத்து பிடிக்கும் அதிகாரியாக பெண்ணை முதன்மைப்படுத்துவது பாராட்டுக்குரியது. நிமிஜா சஜயனின் வேட்டையாடல் உண்மையில் அசரடிகிறது. இறுதியில் அவரின் கண்களிலிருந்து வெளிப்படும் கண்ணீரும், அயராத உழைப்பின் சோர்வும், துணிச்சலும், யதார்த்த நடிப்பின் மூலம் மொத்த தொடரையும் தாங்கியிருக்கிறார்.

ரோஷன் மேத்யூ, திபியேந்து பட்டாச்சார்யா, கனி குஸ்ருதி வனத்துறை அதிகாரிகளாகவே வாழ்ந்திருப்பது கதாபாத்திரத்துக்கு செய்துள்ள நியாயம். பெரும்பாலான இரவுக் காட்சிகளில், பகல் சம்பங்களும் குறைந்த ஒளியிலேயே இருளை முதன்மைப்படுத்தியே காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

வனத்தின் அழகையும், அதில் மனிதர்கள் நிகழ்த்தும் குரூரத்தையும், கச்சிதமாக படப்பிடித்திருக்கிறது ஜோஹன் ஹெர்லினின் கேமரா. மனிதர்களைத் தாண்டி, பெரும்பாலான ப்ரேம்களில் மான்,பாம்பு, எலி , குருவி, பருந்து புலி, ஆகியவை இடம்பெறுகின்றன.

இயற்கைக்கு ஊறு விளைக்கும் மனித குலத்தையும், அதனால் ஏற்படும் ஆபத்தையும் பேசும் இத்தொடரில் கேரளாவில் நிகழும் காட்சியில், ‘இறுமி சாகாம நிம்மதியா மூச்சு விட்றதுக்கு காட்டுக்கு நன்றி சொல்லணும்’ வசனம் இடம்பெறுகிறது. இதற்கு மறுபுறம் டெல்லியின் காற்று மாசுபாட்டை குறிப்பிட்டு ‘இதனால தான் இங்க குடும்பத்த கூப்டு வரல’ என்ற வசனமும் சுற்றுச்சூழலை பாதுக்காக்க வேண்டிய அவசியத்தை உணர்த்துகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE